Skip to main content

ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் ஒரு உபரியின் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு


ஒரு உபரியின் கவிதைகள்

குமரகுரு அன்பு

நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி

64 பக்கங்கள்
காக்கை பிரதிகள் வெளியீடு
முதற் பதிப்பு ஜூன் 2020
விலை ரூ 60.
வாழ்வெங்கும் விரவியிருக்கும் கீழ்மையையும் சுரண்டலையும் காணும் ஒரு சாதாரண மனிதனின் எதிர்வினை எப்படி இருக்க முடியும். அவலங்களை மறுத்து வாழ்வின் மேலானதெனக் கருதும் சில தருணங்களின் நிழலில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனும் போதையில் நிகழ்வினை மறந்து கனவுகள் காணலாம். இல்லையெனில், உண்மையின் வேள்வித் தீயின் உட்புகுந்து அழிக்க முனைந்து தானும் அழிந்து போகலாம். ஆனால் இவ்விரண்டு தேர்வுகளுமே வாழ்வின் இரு முரண் எல்லைகள். இந்த விருப்பங்கள் சாதாரணனுக்கு கைகூடுவது இல்லை. வாழ்வின் நிதர்சனங்களோடு சமரசம் புரிந்து அதன் அழுத்ததில் வாழ்ந்து மடிவது தான் அவனுக்கு வாய்க்கிறது. ஆனால் ஒரு படைப்பாளி இந்த அழுத்தத்தினைத் தன் கலைகளில் வெளிப்படுத்தி ஆசுவாசம் கொள்கிறான். குமரகுரு அன்புவின் 'ஒரு உபரியின் கவிதைகள்' இது போன்றவோர் இயலாமையின் வெளிப்பாடாக, எப்படியாவது இந்நிலையினை மாற்றும் வழி விரும்பி அலையும் ஆன்மாவின் குரலாக ஒலிக்கிறது.
இந்த உலகில் உபரியாக வாழ்ந்து மடியும் என்னைப் போன்றவர்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்பட்டு இருப்பதிலிருந்தே வாசிப்பிற்கான தளம் அமைக்கப்பட்டுவிடுகின்றது. அது
பெரிய மரம் ஒன்று,வேரை பூமிக்கு அடியிலும், கிளைகளை வானிலும் பரப்பி நின்று கொண்டிருக்கிறது. அதன் கீழே ஒரு சிறிய புல், எதற்காகவோ முளைக்கிறது.
எனும் வரிகளை முன்னுரையில் வாசிக்கும்பொழுது தொகுப்பின் தலைப்பு ஏற்படுத்தும் எண்ணங்களை உறுதிப்படுத்தி வாசிப்பிற்கான சரியான மனநிலைக்குத் தயாராகி விடுகிறோம்.
ஒரே ஒரு மிருகம் மட்டும்தான், அத்தனையையும் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையுடன் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. பற்றாக்குறையை ஏற்படுத்தும் மிருகம் இந்தப் பற்றாக்குறையை வணிகமாக்கி லாபத்தில் புரள்கிறதந்த மிருகம்!
என முன்னுரை நீளும்பொழுது கவிதைகள் சுட்ட விழையும் சமுதாயப் பார்வையினை நம்மால் உணர முடிகிறது.
ஒவ்வொரு வரியாகப் பிரித்து
நுழைத்துக் கோர்த்துக்கொண்டிருந்தேன்
சுவரிலிருந்து மூச்சுவாங்க
என்னையே பார்த்துக்கொண்டிருந்த
பல்லியின் நாவைப் பிடுங்கி
அழுத்தி ஒட்டினேன்
சொற்களைப் பிடிக்க ஏதுவாயிருந்தது
மெல்ல தடவப்படும் மிருதுவான ரோமங்களைக்
கொண்டு மூடியபின்
சொற்றொடர்களை உடைக்கத் துவங்கினேன்
முட்டைகளுக்குள்ளிருந்த
மஞ்சள் கருவிலே சிறு இதயம்
துடித்துக்கொண்டிருந்தது.

என, தான் கவிதை செய்யும் நுட்பத்தினை கவிஞன் முன் வைக்கும் பொழுது அச்சிறு இதயம் தொடர்ந்து துடித்து வளர்ந்து வளமுடன் வாழ வாழத்தாமலிருக்க முடியாது. விரல்களைப் பற்றியபடி நடை பழக்கும்பொழுதே தந்தை தனக்குச் சொன்ன, வழிவழியாக சொல்லப்பட்டு வந்த, கதையினை தன் மக்களுக்கு சொல்லப் போவதில்லை எனும் உறுதியினைக் கவிதை சொல்லுகையில் அடுத்த தலைமுறையாவது மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு ஒரு சுரண்டலற்ற உலகினைப் பார்க்காதா எனும் கவிஞரின் ஆதங்கம் நம்மையும் வருத்துகிறது.
ஏவி விட்ட வேலையெல்லாம் செய்பவனை கூலியால் ஏமாற்றியதன்
நியாயத்தினைக் கேள்விக்கு உள்ளாக்கும் இக்கவிதை உரிமைக் குரல்களில் வித்தியாசமாக ஒலிக்கிறது.

காதலைப் பாடாத கவிஞன் இல்லை; ஆனால் அதிலும் தன் இயலாமையினையே சொல்லும் இந்தக் கவிதை நிச்சயம் மாறுபட்டது.
கொட்டகைக் கொம்பில்
கட்டிய பின் பசு
விழி பிதுங்க
எதையோ மென்றபடி
உன் கண்களையே
பார்த்தது தெரியுமா?
அப்படி எனக்குப் பார்க்க
தெரியாது அன்பே...

வாழ்விற்காகக் கையேந்துபவனிடம் சயனைடையும் வாழ்விழந்து நிற்பவனுக்கு நெற்றிப் பொட்டில் தோட்டாவையும் தந்து விட்டு யுத்தம் தரும் விடுதலையைக் கொண்டாடும் மனப்பாங்கினை கேலி செய்கிறது ஒரு கவிதை. துப்பாக்கியிலிருந்த ரேகை தண்டிக்கப்பட்டவனின் கையிலில்லாததைக் குறிப்பிட்டுச் சொல்கிறது இன்னொன்று. வயிற்றில் பசியோடு இருக்கும் வயோதிகப் பரத்தையின் காத்திருப்பினைச் சுட்டுகிறதுவேறொன்று. இப்படிப் பாடு பொருளின் பன்முகத்தன்மையினால் கவனத்தை ஈர்க்கின்றன குமரகுரு அன்புவின் இத்தொகுப்பிலுள்ள படைப்புகள். இயலாமையில் தவிக்கும் மூர்க்கத்தின் வெளிப்பாடாக பலவந்தமாகவேணும் விரைவில் ஒரு மாற்றம் வந்தே தீர வேண்டும் எனும் விழைவின் குரலாக அமைந்திருக்கின்றன இந்தக் கவிதைகள்.

ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->

Comments

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...