Skip to main content

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

“எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள்.

விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது.

எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார்.

“இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா.

ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள்.

அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள்.

“அதான் எந்த ஊருன்னு கேட்டேன்”

“இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கியூட்னெஸ் மாதிரி ஒரு வார்த்தைன்னு நினைக்கிறே. அந்த ஊரோட பேரே அதான். இன்வெர்னெஸ். ஸ்காட்லாந்திலே வடக்கே இருக்கிற ஊரு. அங்க நெஸ்ன்னு ஒரு ஆறு ஓடுது. அதோட முகத்துவாரத்தோட பேரு இன்வெர்னஸ். இன்வெர்னா உள்ளேன்னு அர்த்தம். வாய்ன்னும் அர்த்தம். நெஸ்ஸோட வாய்னு ஸ்காட்டிஷ் மொழியிலே அர்த்தம்”

“என்னமோ” என்று அவள் சலித்துக்கொண்டு “அவ்வளவு தொலைவு போகணுமா? இங்கியே எங்கியாம் போகலாம்ல?” என்றாள்.

“நான் போறது பனிச்சறுக்கு வெளையாட்டுக்கு. பிரிட்டானியாவிலேயே உறைபனி வர்ர இடம் அங்க மட்டும்தான் இருக்கு… அதுவும் எல்லா ஆண்டும் வர்ரதில்லை. இந்த ஆண்டு விசேஷமா வந்திருக்கு”

“இங்கதான் எங்கியோ போயி சறுக்குவியே”

“அது பயிற்சி எடுத்துக்கிடறதும்மா… இங்க நல்லா தேறின பிறகுதான் அங்க போகணும்”

“அங்கேயும் இதே மாதிரித்தானே செஞ்சு வச்சிருப்பாங்க?”

ராகவன் கணிப்பொறியிலிருந்து பார்வையை விலக்கி, சுழல் நாற்காலியில் அரைவட்டம் திரும்பிச் சொன்னார். “நீ லண்டன் வந்து எவ்ளவு நாளாச்சு?”

“இவளுக்கு ஒரு வயசு இருக்கிறப்ப வந்தேன்… இப்ப இவளுக்கு பதினாறு வயசு. அப்ப பதினேழு வருஷம்…” என்று அவள் சொன்னாள்.

“ஒரு வாட்டி வெரல் விட்டு சரியா எண்ணிப்பாரு” என்றார் ராகவன், கண்களை சாதனாவை நோக்கி திருப்பி, அவற்றில் சிரிப்பைக் காட்டியபடி.

அவள் விரல்விட்டு எண்ணி “சரியாச் சொல்லப்போனா பதினேழு வருசம் மூணு மாசம்” என்றாள்.

“இந்த பதினெட்டு வருஷத்துல ஒரு முறை கூட பிரிட்டனோட மேப்பை நீ பார்த்ததே இல்லையா?”

“நான் எதுக்கு பாக்கணும்? நான் இங்க வீட்டுக்குள்ளேயே இருக்கேன். டப்பாவுக்குள்ள கர்பூரத்த போட்டு பூட்டி வைச்சது மாதிரி இருக்கேன். மேப்பை எல்லாம் பாத்து நான் என்ன பண்ணப்போறேன்…”

சாதனா ராகவனிடம் கண்களைக் காட்டிவிட்டு, “அம்மா யாரு? ராணி! ராணித்தேனீ! தேவையான எல்லாமே தேடி வருது. ராணி தேனீ கூட்டுக்குள்ளேதான் இருக்கும், எங்கேயுமே போகாது” என்றாள்.

“ராணித்தேனீ மத்த தேனீயை விட பலமடங்கு இருக்கும் தெரியுமா?” என்று ராகவன் கேட்டார். “அவ குண்டா இருக்கான்னா அதை நேரடியாச் சொல்லேன்”

“அய்யய்யோ!” என்று அலறியபடி சாதனா படிகளில் ஏறி மாடியில் தன் அறைக்கு ஓடினாள்.

ராகவனிடம் அவள் “பனியிலே சறுக்கிறதானா ஏகப்பட்ட கம்பிளிச்சட்டை வேணும்ல?” என்றாள்.

“ஆமா” என்று ராகவன் சொன்னார்.

“எல்லாத்தையும் பத்திரமா கொண்டு போனாளா? நாம சொல்லலேன்னா பாதிய இங்கியே விட்டுட்டுப் போயிடுவா… ஒரு விஷயம் வைச்சது வைச்ச இடத்திலே இருக்கிறதில்லை. கால்சராயை நடு ஹாலிலே நின்னுட்டு கழட்டுறா…”

“கொண்டு போனா” என்றார் ராகவன்.

“கொண்டு போனா போதாது. அங்க போனப்பறம் சரியா போட்டுக்கணும்…. ஏழெட்டு அடுக்கா போட்டுக்கணும். கையிலே உறை போடணும்… பனி உறைஞ்சு வெள்ளைவெள்ளையா பளிங்க உடைச்சு குவிச்சு போட்டது மாதிரி கிடக்குமாமே. டிவியிலே காட்டினான்”

“அதெல்லாம் அவ போட்டுக்குவா”

அவள் கைகளை கட்டிக்கொண்டு பின்னால் சாய்ந்துகொண்டு “இன்வெர்னெஸ்…. என்ன மாதிரி பேர வச்சிருக்கான்…” என்றாள். “இந்த மாதிரியெல்லாம் நம்மூர்லே பேரு இல்லை. இன்வெர்னெஸ்”

“இவ போயி பனிமேலே சறுக்கறேன்னு கெளம்பிடப்போறா… செய்யக்கூடாதுன்னு சொன்னா அதைச் செஞ்சே ஆகணும். அப்டி ஒரு அடம்… எல்லாம் செல்லம் குடுத்து கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கி வச்சிருக்கு” என்றாள்.

ராகவன் “அதெல்லாம் பத்திரமா இருந்துக்குவா. அவளுக்கு தெரியும்” என்றார்.

“இன்வெர்னெஸ்” என்று அவள் சொன்னாள். “ஊரோட பேருன்னு சொன்னா. ஆனா என்னமோ ஒரு மாதிரி இருக்கு.”

“எல்லாம் வச்சது வச்சமாதிரி கெடக்கு” என்றபடி அவள் எழுந்துகொண்டாள்.

“எங்க போறே?”

“வந்ததுமே வம்படியா மல்லுக்கு நிப்பா.பொம்புளைப்புள்ளையா லட்சணமா இருக்கணும்னா கேக்கிறதில்லை. வளத்து வச்சிருக்கிற லெச்சணம் அப்டி.”

*****************

ராகவன் கறுப்புக் கண்ணாடியை போட்டுக்கொண்டு “வந்துட்டோம்… வா” என்றார்.

அவள் வெளியே இறங்கினாள். “ஒரே வெளிச்சமா இருக்கே”

“கூலர்ஸைப் போட்டுக்கோ”

அந்த வெளிச்சத்திற்கான காரணம் அதன்பின்னரே புரிந்தது. சாலையோரங்களிலும், சுவர்களின் கீழேயும், பழைய சிலேட் கூரையின் சரிவுகளிலும், வெண்விளக்குகள் போல ஒளிரும் வெண்பனி. காலடியிலும் பனிதான். ஆனால் வாகனப்புகை படிந்து கருமையான தோல் போல இருந்தது. கால்வைத்தபோது நொறுங்கிப் புதைந்த இடங்களில் மட்டும் உப்புவெண்மை வெளியே வந்தது.

“வெளியே இவ்வளவு குளிருதே… வயித்துக்குள்ள பாப்பாவுக்கு குளிராது?” என்று மூச்சிரைக்க நடந்தபடி அவள் கேட்டாள்.

வேண்டுமென்றே உளறுகிறாளா என்று ராகவன் அவளை திரும்பிப் பார்த்தார். அவள் கண்களில் அந்த பேதமை இருந்தது. அது அவள் இயல்புதான். பல தளங்களில் மிகச்சூட்டிகையாக இருந்தாள். திருமணமான மறுநாளே அவருடைய வாழ்க்கையை, உருவாக்கிக் கொண்ட புதிய குடும்பத்தை முழுமையாகவே பொறுப்பேற்றுக் கொண்டாள். ஆனால் வெளியுலகம் சார்ந்த திகைப்பும், குழந்தைத்தனமான புரிதல்களும் எப்போதும் இருந்தன. பிக்பென் கடிகாரத்தை முதலில் பார்த்ததும் “எதுக்கு அவ்ளவு உயரத்திலே கொண்டுபோயி வைக்கணும்? தரையிலே வைச்சா எல்லாரும் டைம் பாக்கலாம்ல?” என்றவள்தான்.

“ஏங்க , நெஜம்மாவே பாப்பாவுக்கு குளிர் ஒண்ணும் பண்ணாதே”

“உள்ளே உன்னோட ரத்தத்திலேதான் அது ஊறிக்கிடக்குது. ரத்தத்தோட சூடு குறையாது. அதனாலே பிரச்சினையே இல்லை”

“ஏன் ரத்தத்தோட சூடு குறையாது?”

“குறைஞ்சா உடனே நடுக்க ஆரம்பிச்சுடுதுல்ல? நாம உடனே நல்ல கம்பிளி சட்டை போட்டுக்கறோம். சூடா ஏதாவது குடிக்கிறோம்”

அவள் கண்களைச் சரித்து யோசித்தபடி வந்தாள். பிறகு “எனக்கு கையெல்லாம் ரொம்ப நடுங்குது” என்றாள்.

ராகவன் சலிப்புடன் “எங்கேயாவது உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்” என்றார்.

“டீ வேண்டாம்… எனக்கு சூப் வேணும்”

“வா, இங்க கெடைக்கும்னு நினைக்கிறேன்” என்றார் ராகவன்.

கபேயில் எவருமில்லை. விறகாலான கணப்பு எரிந்து புகையின் மென்மணம் கூடத்தில் நிறைந்திருந்தது. அதன் செவ்வெளிச்சம். ஒரு கருப்பைக்குள் வந்துவிட்டதுபோல் இருந்தது. குருதியின் நிறம், குருதியின் வெம்மை, குருதியின் மணம்கூட அப்படித்தான் இருக்கும்போல. மெல்லிய ஈரம் சொட்டிக்கொண்டிருந்த பெரிய மேலங்கியை கழற்றி நாற்காலிக்கு பின்னால் போட்டுக்கொண்டு கால்களை நீட்டி அமர்ந்தார். எடைமிக்க பனிச்சப்பாத்துக்கள் காலை களைப்படையச் செய்திருந்தன. உடலை நீட்டி சோம்பல் முறித்து “உனக்கு சூப்பா?” என்றார்.

அவள் அந்த பெரிய மேலங்கியுடன் அமர்ந்தாள். அதில் இருந்து நீர் சொட்டுவதை உணர்ந்து அவர் எழுந்து “கழட்டிப் போடுறியா” என்றார்.

“குளிராது?”

“உள்ளதானே இருக்கோம்?” அவர் எழுந்து அந்த மேலங்கியை அவள் உடலில் இருந்து கழற்றினார். அவள் உள்ளே கனத்த கம்பிளி ஆடை அணிந்திருந்தாள். அவளே தோல் கையுறைகளைக் கழற்றினாள். விரல்கள் வெளிறிப்போய் மீன்கள் போல் இருந்தன. கைகளை ஒன்றுடனொன்று உரசிக்கொண்டாள்.

“சூப் தானே சொன்னே?”

“ஏங்க, இந்த மாதிரி சூப் குடிச்சா குழந்தைக்கு புடிக்குமா?”

“ஏன்?”

“நம்மூர்ல சூப்பெல்லாம் இல்லைல்ல?”

“நம்மூர்ல சூப்பைத்தான் சோத்தில விட்டு சாப்பிடுறோம். சாம்பார் ரசம் குழம்பெல்லாம் சூப்புதான்… சாப்பிடு”

“கண்டதையும் சாப்பிடாதேன்னு அம்மா கூப்பிட்டு சொன்னா”

“கண்டதைத்தானே சாப்பிட முடியும்? காணாததையா சாப்புடுறது?”

அவள் மிரட்சியுடன் உணவகத்தை விழியோட்டிப் பார்த்துவிட்டு “சாப்புடுற இடம்தான். ஆனா என்ன மாதிரி அலங்காரம் பண்ணி வைச்சிருக்காங்க” என்றாள்.

“உள்ள கழிப்பறையைக்கூடத்தான் அலங்காரம் பண்ணியிருப்பாங்க”

“என்ன பேச்சு இது” என்று அவள் சலித்துக்கொண்டாள். “சாப்புடுற நேரத்திலே…”

“சூப்பு மட்டும் போதுமா?”

“அதிலே போட வெண்ணை குடுப்பான்ல? வெண்ணை குழந்தைக்கு நல்லது”

“உங்கம்மா சொல்லியிருப்பாங்களே?”

“ஆமா”

சூப் வந்தது. ராகவன் டீ சொல்லியிருந்தார். பால் இல்லாத, சீனி இல்லாத டீ. சூப் சிவப்பாக ரத்தம் போல இருந்தது. கோப்பைகளை எடுத்து வைத்த பரிசாரகப் பெண் “மேலும் ஏதாவது வேண்டுமா?” என்றாள்.

“வேண்டாம். தேவையென்றால் நான் அழைக்கிறேன்”

அவள் சென்றபின் அங்கே தீ எரிந்து விறகு வெடிக்கும் மென்மையான ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

*****************

“ஆமாம், இன்வெர்னெஸ்” என்று வழிகாட்டி சொன்னான். “சிலர் உள்ளூர இருப்பது, உள்ளமாக இருப்பது, ஆழத்தில் நிகழ்வது என்றெல்லாம் இதற்கு பொருள் கொள்வதுண்டு”

“இன்வெர்னெஸ்” என்று அவள் சொன்னாள்.

“இங்கே கோடைகாலத்தில்தான் பெருங்கூட்டம் வரும். இந்த சாலையிலேயே பலமணிநேரம் போக்குவரத்து தேங்கி நிற்கும். குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்காக வருவார்கள். ஆனால் அவ்வளவு கூட்டம் இல்லை. நாலைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கடும்குளிர் வந்து நெஸ் ஆறு உறைந்துவிடும். இப்போது உறைந்திருக்கிறது. அந்தச் செய்தியை தொலைக்காட்சியில் காட்டிய பிறகு ஏராளமானவர்கள் வருகிறார்கள்” என்றான் வழிகாட்டி.

“இங்கே பனிச்சறுக்கு செய்வார்களா?”

“பனிச்சறுக்கு எல்லாம் மலைகளில்தான். இங்கே அதற்கு அனுமதி இல்லை. ஆற்றுப்பாளத்தைப் பார்த்தால் மேலே சறுக்கிச் செல்லலாம் என்று தோன்றும். ஐரோப்பாவில் உறைந்த ஏரிகளின் மேல் விமானத்தையே இறக்குகிறார்கள். ஆனால் இங்கே அத்தனை குளிர் இல்லை. ஆறு அவ்வளவு உறுதியான பனிப்பாளமாக ஆவதில்லை. நடந்துபோனாலே எடைதாங்காமல் உடைந்துவிடும்…” என்று வழிகாட்டி சொன்னான். “நாம் நின்றிருக்கும் பனிப்பாளம் உடைந்தால் ஒன்றுமே செய்யமுடியாது. எத்தனை பனிச்சறுக்கு நிபுணராக இருந்தாலும் சரி, உள்ளே போய்விடுவார்கள். காலில் கட்டப்பட்ட சறுக்குப்பலகை எடைமிக்கது என்பதனால் நேராக மூழ்கிவிடுவார்கள். இரண்டு நிமிடம்கூட உயிருடன் இருக்க முடியாது. நுரையீரல் உறைந்துவிடும். சொல்லப்போனால் உடலையே மீட்கமுடியாது. பனிக்காலம் முடிந்தபின் உடலை எடுப்பார்கள். உறைந்து மெழுகுச்சிலைபோல கிடைக்கும். அந்த கடைசிநிமிடத் திகில்கூட முகத்தில் அப்படியே இருக்கும்”

காருக்கு இருபுறமும் வெண்பனி படிந்த கரிய பாறைகள் ஸ்காட்லாந்தின் பசுக்களைப் போலவே தோன்றின.

“இன்வெர்னெஸ்” என்று அவள் சொன்னாள்.

“ஆமாம். ஒரு சிறிய ஊர்தான் இது. ஒரு காலத்தில் மரவியாபாரம் நன்றாக நடந்து வந்தது. அதன்பிறகு சுற்றுலாதான் முதன்மையான தொழில். இரண்டாயிரம் ஆண்டில்தான் நகரமாக அங்கீகாரம் பெற்றது. இந்த கௌண்டியின் பெயரும் இன்வெர்னெஸ்-ஷயர் என்பதுதான். ஸ்காட்டிஷ் ஹைலாண்ட் அதாரிட்டியின் தலைமையிடம் இங்கேதான் இருக்கிறது”

“இன்வெர்னெஸ்” என்று அவள் சொன்னாள். “இன்வெர்னெஸ்”

“ஆமாம், அழகான பெயர்தான், பலர் இந்தப் பெயரை விரும்புகிறார்கள். உறைபனிநிலமாக இருந்தாலும் இங்கே ஏழாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் உள்ளன…”

“இன்வெர்னெஸ்” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். “எனக்கு பிடித்திருக்கிறது இந்த பெயர்”

“ஆமாம், நல்ல பெயர். இந்த ஊர்….”

அவள் இடைமறித்து “இன்வெர்னெஸ்” என்றாள்.

ராகவன் தணிந்த குரலில் காரை ஓட்டிக்கொண்டிருந்த வழிகாட்டிக்கு மட்டும் கேட்கும்படி “அவள் அப்படித்தான். அந்த வார்த்தையையே சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றார்

வழிகாட்டி திகைத்து திரும்பி பின்னிருக்கையில் இருந்த அவளைப் பார்த்துவிட்டு தலையசைத்தான்.

“இன்வெர்னெஸ்!” என்று அவள் கண்களை மூடிக்கொண்டு புன்னகையுடன் சொன்னாள். அவளுடைய மூச்சே அந்த சொல்லாக ஒலிப்பது போலிருந்தது.

“எவ்வளவு காலமாக?” என்று வழிகாட்டி கேட்டான்.

“இருபத்தெட்டு ஆண்டுகளாக…”

“மருத்துவம் பார்க்கவில்லையா?”

“மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த வார்த்தை ஓடிக்கொண்டே இருக்கும். மூச்சு போல” ராகவன் சொன்னார். “தூக்கத்திலும் அவள் அதைச் சொல்வாள்”

வழிகாட்டி திரும்பிப் பார்த்தபோது அவள் உதடுகள் அசைந்துகொண்டிருப்பதைக் கண்டான். “அதைத்தான் சொல்கிறார்கள்”

“ஆமாம்” என்றார் ராகவன். “பழங்கால புனிதர்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்வதுபோல அதை உச்சரித்துக்கொண்டே இருப்பாள்”

கார் சென்றுகொண்டிருந்தது. வழிகாட்டி “பொதுவாக இந்த குளிரில் முதியவர்கள் வருவதில்லை” என்றான். “முன்பு எப்போது வந்தீர்கள்?”

“நானும் இவளும் இதுவரை இங்கே வந்ததில்லை. வரும் எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் சட்டென்று வந்தாலென்ன என்று தோன்றியது.” என்று ராகவன் சொன்னார். “நெஸ் உறைந்திருக்கிறது என்று சொன்னார்கள்…”

“ஆமாம், நீண்டகாலத்திற்குப் பிறகு உறைந்திருக்கிறது”

“அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். உடனே கிளம்பலாம் என்று தோன்றியது”

“அவர்கள் பார்த்துவிட்டு கேட்டார்களா?” என்று வழிகாட்டி திரும்பி தூங்கிக்கொண்டிருக்கும் அவளைப் பார்த்துவிட்டு கேட்டான்.

“இல்லை, அவளுக்கு இன்வெர்னெஸ் என்றால் வேறேதோ. அவள் உள்ளம் அச்சொல்லை ஓர் ஊருடன் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் அழைத்துவரலாம் என்று நினைத்தேன். இதுதான் இன்வெர்னெஸ் என்று காட்டலாம். ஒருவேளை…”

“இன்வெர்னெஸ்!”

வழிகாட்டி அவரை வெறும் கண்களுடன் பார்த்தான்.

“…ஒருவேளை இது ஓர் ஊர்தான் என்று அவள் ஏற்றுக்கொள்ளலாம். அந்த வார்த்தையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளலாம்… “

“இன்வெர்னெஸ்! இன்வெர்னெஸ்!”

வழிகாட்டி அமைதியிழந்தவனைப் போல “எத்தனை ஆண்டுகளாக என்று சொன்னீர்கள்?” என்றார்.

“ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள்”

“ஒவ்வொரு மூச்சிலும்…” என்றபின் “என்னாலேயே இப்போது அந்தச் சொல்லை தாளமுடியவில்லை” என்றான்.

ராகவன் ஒன்றும் சொல்லவில்லை

“இன்வெர்னெஸ்! இன்வெர்னெஸ்! இன்வெர்னெஸ்! இன்வெர்னெஸ்”

வழிகாட்டி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்து “உங்களுக்கான வில்லா இந்த வளைவுக்கு அப்பால்தான். இப்போது சீசன் அல்ல. ஆகவே மலிவான விலைக்கே நல்ல வில்லாவாக பிடிக்க முடிந்தது” என்றான்.

“நன்றி”

“நான் வழக்கமாகப் பனிச்சறுக்குக்குத்தான் கூட்டிச்செல்வேன். நீங்கள் இங்கே நெஸ் ஆற்றங்கரைக்குத்தான் வரவேண்டும் என்று சொன்னீர்கள்”

“நாங்கள் இந்தியர்கள். வெப்பநாட்டைச் சேர்ந்தவர்கள். நான் ஐஸ்கிரீமைத்தான் இங்கே வருவதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்”

வழிகாட்டி “ஆனால் இப்போது லண்டனில் பாதிப்பேர் இந்தியர்கள்தான்” என்றான்

ராகவன் “உங்கள் நாட்டுக்கு நாங்கள் டாக்டர்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

கார் நின்றது. “இப்போது எவ்வளவு வெப்பநிலை இருக்கிறது?” என்று ராகவன் கேட்டார்.

“செண்டிகிரேடில்தான் இந்தியர்கள் கேட்பீர்கள்” என்றான் வழிகாட்டி. “மூன்று டிகிரி செண்டிகிரேட்”

“இரவில் உறைநிலைக்கு கீழே போகும் இல்லையா?”

“நேற்றிரவு உறைநிலைக்குக் கீழே நான்கு…. அதற்கு முந்தைய நாள் உறைநிலைக்குக் கீழே ஏழு”

“ஓ”

ஆனால் நல்ல வெயில் இருந்தது. காற்றில் இருந்த நீராவி கரிப்புகையையும் தூசையும் சேர்த்துக்கொண்டு உறைந்து கீழிறங்கியமையால் வான்வெளி தூய்மையடைந்து கண்கள் கூசுமளவுக்கு ஒளி நிறைந்திருந்தது எங்கும். பக்கவாட்டுக் கட்டிடங்களின் முதலைத்தோல் போன்ற கற்சுவர்களில் ஈரம் சுடர்கொண்டிருந்தது. நேர் எதிரிலிருந்த கட்டிடத்தின்மேல் படர்கொடிகள் தொற்றி ஏறி முழுமையாக மூடியிருந்தன. அந்தப் பசுமை கண்களுக்கு இதமாக இருந்தது.

வெளியே காற்று வீசுவதை பெரிய கண்ணாடிச் சன்னல் வழியாகப் பார்க்கமுடிந்தது. சன்னல்கண்ணாடியில் நீர்த்துளிகள் அறைபட்டு இழுபட்டு வழிந்தோடின. ஆனால் சில நிமிடங்களில் காட்சி முற்றிலும் தெளிவாக ஆகியது. ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடி. ஆகவே நெடுந்தொலைவுக்கு காட்சி தெரிந்தது.

துல்லியமான வெண்ணிறத்தில் விரிந்த பனிபரப்பு. அதற்குமேல் வானம் மரகதநீலம். வானமும் பனிப்பரப்பும் தவிர வேறேதுமில்லை. வெறுமைக்கு மேல் வெறுமை கவிந்திருந்தது. அந்த முழுவெறுமையை பார்த்தபடி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.

அவள் சூப்பை குடித்தாள். ஒவ்வொரு உறிஞ்சும் ஒலியுடனும் அவள் குரல் மந்திரம் போல ஒலித்துக் கொண்டிருந்தது. இன்வெர்னெஸ்.

இதுதான் இன்வெர்னெஸ். மெய்யாகவே திகைக்கச் செய்யும் ஒரு பெயர். புதைந்துபோவது, மூழ்கிப்போவது, உள்ளே சென்றுகொண்டே இருப்பது என்றெல்லாம் அர்த்தம் சொல்லிவிடலாம். ஏதாவது இந்திய தியானப்பயிற்சியாளர் இன்வெர்னெஸ் என்று தன் பயிற்சியொன்றுக்கு பெயரிடலாம். இன்வெர்னெஸ். அந்த வார்த்தையை அப்போதுதான் முதல்முறையாகக் கேட்பதுபோல இருந்தது. அல்லது அதை நெடுங்காலம் முன்னரே மறந்து சட்டென்று நினைவுகொள்வதுபோல.

கூரைகளில் இருந்து பனி உருகிய நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. சாலையின் செங்கல்பரப்புகளின் ஈரத்தில் வெயில் ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. சாலையில் எவருமே இல்லை. ஒருவர் கூட. இந்த பனியுறைதலைப் பார்க்க எவரும் வரவில்லை. நெஸ் ஆறு அப்படி அடிக்கடி உறைவது அல்ல. ஆனால் அங்கே அன்று எவருமே வரவில்லை. அல்லது வந்தவர்களும் அப்படி ஏதோ விடுதிக்குள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்த பனிப்பரப்பின் வெறுமையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு வயதாகியிருக்கவேண்டும். எதிர்காலம் என்று எதுவுமே இருக்கக்கூடாது. நிகழ்காலம்கூட இருக்கக் கூடாது.

மெல்லிய முனகலுடன் கூரைமேல் இருந்து ஒரு மெல்லிய பனிப்பாளம் நகர்ந்து வந்து உதிர்ந்து உடைந்து சிதறியது.

“இந்த எடம் பேரு என்ன?” என்று அவள் கேட்டாள்.

ராகவன் சட்டென்று படபடப்பு அடைந்தார். கையில் இருந்த கோப்பை நடுங்கியது. அதை மேஜை மேல் வைத்துக்கொண்டு “இன்வெர்னெஸ்” என்றார்.

அவள் புரியாததுபோல பார்த்துக்கொண்டிருந்தாள். புருவங்கள் நடுவே முடிச்சு. பழுத்த கண்களில் என்ன உணர்வு என அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

****************

பேசியபடியே அவள் எழுந்து வெளியே சென்றாள். அவர் அவளை கூப்பிட வாயெடுத்து பின் அடக்கிக் கொண்டார். தன்னை கட்டுப்படுத்திக்கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. உடல் முழுக்க நிறைந்திருந்த களைப்பு அத்தனை தசைகளையும் தளரச் செய்திருந்தது. கையை தூக்கவோ, உதடுகளை அசைத்து எதையாவது சொல்லவோ ஏராளமான ஆற்றல் தேவைப்பட்டது. ஆனால் உள்ளம் உறைந்து செயலற்று கிடந்தது.

அவள் கண்ணாடிக் கதவை திறந்து வெளியே செல்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். எதிரில் இருந்த அகலமான சாலையை குறுக்காகக் கடந்து அதற்கு அப்பாலிருந்த பனிப்பாளப் பரப்பில் ஏறி நேராகச் சென்றுகொண்டிருந்தாள்.

வெயில் நன்றாகவே ஏறிவிட்டிருந்தது. பனிப்பரப்பு வெயிலாகவே மாறி ஒளிவிட்டது. அந்த வெளிச்சத்தில் பனிப்பாளத் தரை சற்று நீலப்பச்சை நிறம் கொண்டு கண்ணாடிப்பரப்பு போல ஆகிவிடும். அதற்கு அடியில் அலைகொள்ளும் நீரையும் அதில் நீந்தும் மீன்களையும்கூட பார்க்கமுடியும். உள்ளே ஒளி கசிந்திறங்கி நிறையும்போது நீரின் ஆழம் ஜொலிக்கும். மூழ்கியவை எல்லாமே ஒளியால் தொட்டு எழுப்பப்படும். பழைய நினைவுகள் போல.

அவள் அந்த வெண்ணிற வெளிச்சத்தில் நீண்டதூரம் போய்விட்டிருந்தாள். அவளுடைய கரிய கம்பிளியாடை அணிந்த உருவம் அந்த வெளிச்ச அலைகளில் நிழல்போல ததும்பியது. சிறிதாகிக்கொண்டே சென்று மறைந்தது.

அவர் கால்களை மேலும் நீட்டி, கைகளை வயிற்றின்மேல் கட்டி, தலையை முன்னால் தாழ்த்தி, முகவாய் மார்பில் படிய அமர்ந்திருந்தார். தன் குரட்டையொலியை தானே கேட்டு விழித்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.

Comments

Popular posts from this blog

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...