மொழிபெயர்ப்புக் கதை - ஆப்பிள்கள் சிவக்கும் இடம்
ஆப்பிள்கள் சிவக்கும் இடம் ஆங்கிலம் - க்ரிஸ் காட்டம் இன்னுமொரு பெட்டி ஆப்பிளை ஆப்பிள் ஸ்டோரின் வெண்ணிறக் குளுமைக்கு சுமந்துகொண்டு வரும்போது க்ளெம் கேட்கிறான், எனக்கு பதினைந்து வயது நிரம்பிவிட்டதா, எனக்கு வேலை பிடித்திருக்கிறதா, எனக்கு வீட்டில் தனிப் படுக்கை இருக்கிறதா, பிரார்த்தனைையின்போது முழங்காலைப் பாதுகாக்க எனக்கு விரிப்பு இருக்கிறதா, என்பதாக. இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம் எனவும், ஒரு நாள் ஒரு பணக்கார மாதுவின் தனி உதவியாளராக ஆன பிறகு குடிசையில் தன் கையே தனக்கு உதவி எனத் தூங்கும் நேர்த்தியற்ற ஒரு தோட்டக்காரப் பையனை ஒரு போதும் நான் கவனிக்கப் போவதில்லை எனவும் சொல்லியிருப்பேன். ஆனால் க்ளெம்முக்கு திருகல் பாதங்கள் இருந்தன, அதனால் அவனை ஃப்லாண்டர்ஸ் (Flanders) சேர்த்துக் கொள்ளவில்லை, எனவேதான் நான் ஒன்றும் பேசாமல் அடுத்த வரிசை பச்சை ஆப்பிள்களை அதற்கான மர ஷெல்ஃபில் அடுக்கிக் கொண்டிருந்தேன், சரியாக அவன் செய்து காட்டியதைப் போலவே - ‘உறவினர்களைப் போல நெருக்கமாக ஆனால் தொட்டுக்கொள்ளாமல்’. ‘டான்டனின் சிவந்த சேடி’ என ஒரு வகை உள்ளதாம், அவன் சொல்கிறான், வெளிறின வைக்கோலைப் ப...