மொழிபெயர்ப்புக் கதை - ஆப்பிள்கள் சிவக்கும் இடம்

ஆப்பிள்கள் சிவக்கும் இடம்

ஆங்கிலம் - க்ரிஸ் காட்டம்

இன்னுமொரு பெட்டி ஆப்பிளை ஆப்பிள் ஸ்டோரின் வெண்ணிறக் குளுமைக்கு சுமந்துகொண்டு வரும்போது க்ளெம் கேட்கிறான், எனக்கு பதினைந்து வயது நிரம்பிவிட்டதா, எனக்கு வேலை பிடித்திருக்கிறதா, எனக்கு வீட்டில் தனிப் படுக்கை இருக்கிறதா, பிரார்த்தனைையின்போது முழங்காலைப் பாதுகாக்க எனக்கு விரிப்பு இருக்கிறதா, என்பதாக.

இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம் எனவும், ஒரு நாள் ஒரு பணக்கார மாதுவின் தனி உதவியாளராக ஆன பிறகு குடிசையில் தன் கையே தனக்கு உதவி எனத் தூங்கும் நேர்த்தியற்ற ஒரு தோட்டக்காரப் பையனை ஒரு போதும் நான் கவனிக்கப் போவதில்லை எனவும் சொல்லியிருப்பேன். ஆனால் க்ளெம்முக்கு திருகல் பாதங்கள் இருந்தன, அதனால் அவனை ஃப்லாண்டர்ஸ் (Flanders) சேர்த்துக் கொள்ளவில்லை, எனவேதான் நான் ஒன்றும் பேசாமல் அடுத்த வரிசை பச்சை ஆப்பிள்களை அதற்கான மர ஷெல்ஃபில் அடுக்கிக் கொண்டிருந்தேன், சரியாக அவன் செய்து காட்டியதைப் போலவே - ‘உறவினர்களைப் போல நெருக்கமாக ஆனால் தொட்டுக்கொள்ளாமல்’. ‘டான்டனின் சிவந்த சேடி’ என ஒரு வகை உள்ளதாம், அவன் சொல்கிறான், வெளிறின வைக்கோலைப் போன்ற நிறத்தில் பளபளக்கும் தோலோடு’, சில நேரங்களில் ‘ கொஞ்சம் வெட்கச் சிகப்பு’, நான் அவனுடைய வெட்டிப் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை, ஒவ்வொரு ஆப்பிளாக, ஒவ்வொரு வரிசையாயக, வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மத்தியானத்தின் கண்கூசும் வெயிலில் ஒருசில பெட்டிகளை, சுவரோரமாக, பக்கம்பக்கமாக திருப்பிப்போட்டு,என்னை உட்கார அழைத்தான் க்ளெம். ‘வேத வசனத்தில் சொன்னதைப்போல, நமது வேலையின் பழத்தை உண்போம்’ என்றான். ஆப்பிள் ஒன்றை எடுத்து சொர்க்கத்தை நோக்கிப் போட்டு கிரிக்கெட் வீரரைப் போலப் பிடித்து சட்டைக்கையில் தேய்த்து பளபளப்பாக்கி எனக்குத் தந்தான், ‘சாமர்செட்ஷைரின் சிறந்த வகை, பார்ட்லெட்ஸ் க்லோரி . ’

இன்னொரு ஆப்பிளை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது அவன் தவறவிட்டதைக் கண்டு நான் சிரிக்கிறேன். அதற்கு பின்னால் அவன் நொண்டிக்கொண்டு ஓடும்போது, தேவனுக்கு குருடர்களிடத்தும் முடவர்களிடத்துமான அன்பை எண்ணிக் கொள்கிறேன். மற்ற பெண்பிள்ளைகள் வேண்டுமானால் கூடுதலாக எதிர்பார்ப்பார்களாக இருக்கும், ஆனால் பரிசுத்தமான இதயம்தான் மற்ற அனைத்தையும் விட முக்கியம், நான் எண்ணிக்கொண்டேன். க்ளெம் உட்காருகிறான், அவனுடைய சட்டையின் முன்பக்கம் வியர்வையால் நனைந்திருக்கிறது, அவனது உடலிலிருந்து புகையிலையின் நாற்றமடிக்கிறது, என் முகம் சிவப்பதை நான் உணர்கிறேன்.அவன் நகர்ந்து கிட்டத்தில் வரும்போது நான் நகர்ந்து போகவில்லை, வெறுமனே சூரிய ஒளியில் அமர்ந்து கொண்டு ஆப்பிளின் முதல் கடியைச் சுவைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

உலகத் தாய்மொழி நாள் உரை