குருதி
திரைப்படம் - மலையாளம்
திரைச்சுவை : அரவிந்த் வடசேரி
“கடவுளா பாத்து அவன நமக்கு முன்னாலே தொங்க விட்டுத் தந்தார்.”
“ஒரு கத்தி இருந்திருந்தா குத்திக் கொன்றிருக்கலாம் இல்லையா?”
“கத்தியால குததுறதும் துப்பாக்கியாலே சுடுறதும் யார் வேணா செய்யலாம். கொல்ல வேண்டியவுங்கள கொல்லவேண்டிய நேரத்தில கொல்ல சில பேரால் மட்டும் தான் முடியும். தர்மயுத்ததில் அர்ஜுனன் போல.”
“தர்மயுத்தமா?”
“ஆமா, இப்போ உலகம் முழுக்க நடக்குதே அது தான் தர்மயுத்தம். முடிவே இல்லாத யுத்தம்.”
“இப்போ நீ சொன்னியே அது மட்டும் சரி தான். மனுஷன் ரெண்டு கால்லே நடக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறுத்தாம பண்றது ஒண்ணு மட்டும் தான். சண்டை போடறதும் கொல்லறதும்.”
“அப்போ இது எல்லாம் நடக்கறதுக்கு காரணமே இல்லேங்கறீங்களா?”
“இருக்குமே. எப்பவும் ஒரு காரணம் இருக்கத்தானே செய்யும்.”
“என்ன?”
“வெறுப்பு. மனுஷனுக்கு எப்பவும் வெறுக்க ஏதாவது ஒண்ணு வேணும். அந்த வெறுப்பை நிலைநிறுத்த நமக்குள்ளே என்னைக்கும் இருக்கும் ஒரு ‘அவர்களும்’ ஒரு ‘நாமளும்’.வெறுப்பு ஒரு பொறி போதும். அது கனன்று ஒரு பெருநெருப்பா எரியும் . ஒரு தடவ எரிஞ்சுதுன்னா அப்புறம் அது அணையாம இருக்க நாம வெறுத்துகிட்டே இருப்போம். கடைசீல ஜெயிச்சுட்டோம்னு நமக்கு நாமே பொய் சொல்லி அந்த நெருப்பிலேயே எரிஞ்சு அழிஞ்சு போவோம் .”
இதை வாசித்தால் ஏதோ செவ்விலகக்கியத்திலிருந்து மேற்கோள் போல் தெரிகிறது இல்லையா? ஆனால், இது ஒரு திரைப்படத்தின் வசனம். இத்தனைக்கும் அது ஒரு ஜனரஞ்சகப் படம். அது குருதி எனும் மலையாளத் திரைப்படம். இவ்வளவு வலுவான வசனங்கள் வெகு இயல்பாக பேசப்படுவது தான் என்னை மிகவும் கவர்ந்தது.
ஒரு பெரிய இந்து முஸ்லீம் மதக் கலவரம் உருவாக அனைத்து சாத்தியங்களும் கொண்ட நிகழ்வுகள் நடந்த ஒரு கிராமம் தான் கதையின் களம். பின்புலமாக ஒரு ஆண்டிற்குமுன் நடந்த நிலச்சரிவும்.
தான் செய்வது அனைத்தும் மறுமையில் சொர்க்கத்தை அடைய ஏதுவாக இருக்க வேண்டும் எனும் தீர்க்கமான ஆவல் கொண்டவன் கதாநாயகன். அதற்கு அவனுக்கு இருக்கும் காரணமும் வலுவானது தான். நிலச்சரிவில் சொர்க்கத்தை அடைந்த தன் மகளை மீண்டும் ஒரு முறையாவது அங்கு போய் காண வேண்டும். அவனுக்கு மிகவும் பயமாய் இருக்கிறது அதை நினைத்தால். தான் செய்வது சரியா என பல வேளைகளில் சந்தேகம் வருகிறது. சந்தேகம் விசுவாசத்தின் அறிகுறி என்கிறார் மதகுரு. பிரார்த்தனை செய்தால் சரி எது எனும் தெளிவு கிடைக்கும் என அறிவுறுத்துகிறார். அவனுக்குத் தான் எவ்வளவு பெரிய சோதனை வந்து சேர்கிறது. அவன் வெல்கிறானா? என்பதைச் சொல்கிறது கதை. காட்சியமைப்பும் வசனங்களும் ஒரு இலக்கணமாகக் கொள்ளக்கூடியவை என்பது என் எண்ணம்.இவ்வளவு கனமான கதையில் எவ்வளவு இயல்பான நடிப்பு. அனைவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தாலும் மம்முக்கோயாவும் முரளி கோபியும் அசாத்தியமாக நடித்திருக்கிறார்கள். கோல்ட் கேஸ் திரைப்படத்தில் வந்த பிரித்வி ராஜ் தானா இது? அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Superb
ReplyDeleteநன்றி
Deleteஉங்கள் பணி தொடரட்டும்
ReplyDelete