நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் Louise Gluck அவர்களின் A fantasy எனும் கவிதை என் மொழிமாற்றத்தில்

ஒரு கனவு

லூயிஸ் க்ளக்
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி


நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்:
தினமும் யாராவது இறக்கிறார்கள்.
அது ஒரு ஆரம்பம் மட்டும் தான்.
ஒவ்வொரு நாளும் மயானங்களில்
புதிதாக விதவைகள் பிறக்கிறார்கள்,
புது அனாதைகள்.

அவர்கள் தலையினை கையில் தாங்கி அமர்ந்திருக்கிறார்கள்,
தங்கள் புது வாழ்வினை முடிவு செய்ய முயன்றபடி.
அவர்களில் சிலர் முதல் முறையாக வருகிறார்கள்
மயானத்திற்கு.
அவர்கள் அழக்கூட பயந்தவர்களாயிருக்கிறார்கள்,
சில நேரங்களில் அழாமலிருப்பதற்கும்.
யாரோ அவர்களின் காதில் கிசுகிசுக்கிறார்கள்
அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று,
சில மந்திரங்களை உச்சரிக்க அல்லது
திறந்திருக்கும் குழியில் ஒரு பிடி மண் அள்ளிப்போட.

அதன் பிறகு
அனைவரும் அவள் வீட்டிற்கு வருகிறார்கள்,
திடீரென வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள்.

விதவை கட்டிலில் அமர்ந்திருக்கிறாள்,
வெகு பாங்காக,
வந்தவர்கள் வரிசையாக அவளிடம் வரத் தோதாக,
சிலர் அவள் கையினை பற்றிக்கொள்கின்றனர்,
சிலர் மென்மையாக அணைக்கின்றனர்.

அவளிடம் அனைவருக்கும் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது,
நன்றி, உதவிக்கு நன்றி.
அவள் நெஞ்சினுள்,
அவர்கள் அனைவரும்
சீக்கிரம் போய்விடமாட்டார்களா என ஏங்குகிறாள்.

அவள் திரும்பிப் போக விரும்புகிறாள்,
மயானத்திற்கு,
அவன் நோய்பட்டுக் கிடந்த அந்த அறைக்கு,
அந்த மருத்துவமனைக்கு.

அவளுக்குத் தெரியும் அது முடியாதென்று.
ஆனால் அது ஒன்று மட்டும் தான்
அவளுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது,
காலத்தை பின் நகர்த்தும் ஆசை.
ரொம்பவும் வேண்டாம்
கொஞ்சம்,
கல்யாணம் வரை இல்லை,
முதல் முத்தம்.

Comments

  1. அருமை அரவிந்த்.
    தொடரட்டும் இதே போன்ற முயற்சிகள்.

    ReplyDelete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை