நான் யார்?
ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்
அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை.
1.
ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு,
மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று.
பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல்
என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம்,
கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும்
நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற
பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக்கின்ற
மனமும் நானன்று. எந்த அறிவுமற்று எந்த செயற்பாடுமற்று , அன்றாட செயல்களில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கும் அறிவீனமும் நானன்று.
2.
மேற்சொல்லிய யாவும் நானல்ல வென்று இதுவல்ல இதுவுமல்ல என்றுணர்ந்து தனித்து நிற்கும் அறிவே நான்.
3.
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம் (உண்மை இதுவென உணர்தலின் இன்பம்).
4.
வெளித்தோற்றமாகிய காணுலகம் மறையும்போது உண்மையாகிய
சொரூப தரிசன முண்டாகும்.
5.
முடியாது.
6.
உண்மையும் மாயத்தோற்றமும், கயிறும் சரப்பமும் போன்றவை. கற்பிதமான சர்ப்பமெனும் மாயை விலகினால் ஒழிய கயிறெனும் உண்மை விலங்காதது போல, கற்பிதமான
உலகியல் பார்வை நீங்கினாலொழிய அடிப்படையான உண்மையின் தரிசனமுண்டாகாது.
7.
அனைத்து அறிவிற்கும் அனைத்து செயல்களுக்கும் காரணமாகிய
மனம் அடங்கினால் ஜகம் மறையும்.
8.
மனம் என்பது ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் ஓர் அதிசய
சக்தி. அது தான் அனைத்து சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றது.
சிந்தனைகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய்
மனமென்றோர் பொருளில்லை; ஆகையால் சிந்தனையே மனம். சிந்தனையைத் தவிர்த்து உலகமென்றோர்
பொருள் தனியாக இல்லை; தூக்கத்தில்
நினைவுகளில்லை, ஜகமுமில்லை; மனம் காணும் கனவுகளில்
நினைவுகளும், ஜகமும் உண்டு. சிலந்திப் பூச்சி எப்படித்
தன்னிடமிருந்து, வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள்
இழுத்துக் கொள்ளுகிறதோ, அப்படியே மனமும்
தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும்
தன்னிடமே ஒடுக்கிக் கொள்ளுகிறது. மனம் சுய அறிதலிலிருந்து விலகும்போது ஜகம் தோன்றும்.
ஆகையால், ஜகம் தோன்றும்போது உண்மை தோன்றாது;
சொரூபம்(உண்மை) தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது;
மனதின் உண்மையை தேடிக் கொண்டே போனால் மனம்
தானாய் அழியும். தான் என்பது சுய அறிதலே. மனம்
எப்போதும் ஒரு வெளித் தோற்றத்தை அணுகியே நிற்கும்; தனியாய்
நிற்காது. மனமே கண்ணுக்குத் தெரியாத உயிரென்றும்
சொல்லப்படுகிறது.
9.
இந்த உடலில் நான் என்று கிளம்புவதெதுவோ அஃதே
மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்த
இடத்திள் தோறோன்றுகிறது என்று விசாரித்தால்,இதயத்திலென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று எண்ணம் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற்
கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் சிந்தனைகள்
எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு.
இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன.
தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள்
தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைகள் இல்லை.
10.
நான் யாரென்னும் விசாரணையினாலேயே மனம்
அடங்கும்; நான் யாரென்னும் நினைவு மற்ற நினைவுகளை
யெல்லாம் அழித்து பிணம் சுடும் தடிபோல் முடிவில் தானும்
அழியும். பிறகு உண்மையின் தரிசனம் உண்டாகும்.
11.
பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை நிறைவு செய்ய எத்தனியாமல் அவை “யாருக்கு உண்டாயின”?என்று கண்டறிய வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் கவனமாக ஒவ்வோரு எண்ணமும்
கிளம்பும்போதே “இது யாருக்குண்டாயிற்று?” என்று
விசாரித்தால் “எனக்கு” என்று தோன்றும். “நான் யார்” என்று
விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும்;
எழுந்த எண்ணமும் அடங்கி விடும். இப்படிப் பழகப் பழக
மனதிற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி
அதிகரிக்கின்றது. கண்ணுக்கு புலப்படாத மனம், மூளை மற்றும் புலன்கள்
வாயிலாய் வெளிப்படும்போது வெளித்தோற்றமுடைய உருவங்கள் (வெளிப்படுத்தும் செயல்கள்) உருவாகின்றன; மனதில் தங்கும்போது செயல்படுத்துவது தடைபடுகிறது. மனத்தை வெளிவிடாமல் இதயத்தில்
வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம்(உள்நோக்கு) அல்லது
அந்தர்முகம் என்று பெயர்.இதயத்திலிருந்து
வெளியிடுவதற்குத்தான் பகிர்முக (வெளியேற்றம்) மென்று பெயர்.
இவ்விதமாக மனம் இதயத்தில் தங்கும்பொழுது , எல்லா
நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய்,
எப்பொழுது முள்ள தான் மாத்திரம் இருக்கும். எதைச்
செய்தாலும் நான் என்கிற அகங்கார மற்றுச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் எல்லாம் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
12.
விசாரணையைத் தவிர வேறு தகுந்த
மார்க்கங்களில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனம்
அடங்கினால் போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும்.
பிராணாயாமத்தாலும் மனம் அடங்கும்; ஆனால் மூச்சு
அடங்கியிருக்கும் வரையில் மனமும் அடங்கியிருந்து,மூச்சு
வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு அதன் இயல்பான வேட்கை கொணடு அலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே.
நினைவே மனதின் சொரூபம்; நான் என்னும் நினைவே
மனதின் முதல் நினைவு; அதுவே அகங்காரம். அகங்கார
மெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும்
கிளம்புகின்றது, ஆகையால் மன மடங்கும்போது பிராணனும்,
பிராணனடங்கும்போது மனமும் அடங்கும். ஆனால் உறக்கத்தில்
மனமடங்கி யிருந்தபோதிலும் பிராணனடங்கவில்லை.
தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும், தேகமானது மரித்து
விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர
நியதியால் ஏற்பட்டிருக்கிறது. விழிப்பு நிலையிலும் சமாதியிலும் மனம்
அடங்குகிறபோது பிராணனடங்குகிறது. பிராணன் மனதின்
வெளித்தோற்றம் எனப்படும். மரணகாலம் வரையில் மனம்
பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து, உடல் மரிக்குங்
காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது.
ஆகையால் பிராணாயாமம் மனத்தை அடக்க சகாயமாகுமேயன்றி மனோநாசம் செய்யாது.
பிரணாயாமம் போலவே மூர்த்தித் தியானம், மந்திர
ஜபம், ஆகார நியம மென்பவைகளும் மனத்தை அடக்கும்
சகாயங்களே.
மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனக்குவிப்பை
அடைய முடிகிறது. மனமானது எப்பொழுதும் அசைந்துக் கொண்டே
யிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக்
கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றாமல் அதையே
பற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ
ஒரு மந்திரம் அல்லது உருவத்தில் பழக்கினால் அதையே பற்றிக்
கொண்டிருக்கும். மனம் அளவு கடந்த நினைவுகளாய் விரிகின்ற
படியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது.
நினைவுகளடங்க அடங்க ஏகாககிரத்(குவிப்புத்) தன்மை யடைந்து,
அதனால் பலமடைந்த மனத்திற்கு சுயபரிசோதனை
எளிதாக முடியும். எல்லா கட்டுப்பாடுகளிலும் சிறந்த மித
சாத்வீக ஆகாரக் (மிதமான அளவில் உணர்ச்சியைத் தூண்டாத உணவுக்) கட்டுப்பாட்டினால் மனதின் சத்வ குணம் (சிறந்த பண்புகள்)
விருத்தியாகி சுயபரிசோதனைக்கு உதவுகிறது.
13.
சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு
களெல்லாம் அழிந்துவிடும்.
14 .
‘முடியுமா, முடியாதா?’ வென்கிற சந்தேக நினைவுக்கு
இடம் கொடாமல், சொரூபத் தியானத்தை (உண்மை குறித்த சிந்தனையை) விடாப் பிடியாய்ப்
பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும்,
‘நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப்
போகிறேன்?’ என்று ஏங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி
என்னும் எண்ணத்தையும் அறவே ஓழித்து சொரூபத் தியானத்தில்
ஊக்கமுள்ளவனாக இருந்தால் அவன்
நிச்சயமாய் உருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட
மனமென்றும் இரண்டு மனங்களில்லை; மனமொன்றே.
வேட்கையே சுப மென்றும், அசுப மென்றும் இரண்டு விதம்.
மனம் சுப சிந்தனை வயத்தாய் நிற்கும்போது நல்ல
மனமென்றும், அசுப சிந்தனை வயத்தாய் நிற்கும் போது
கெட்ட மனமென்றும் சொல்லப்படும்.
பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும்
மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்
களாயிருந்தாலும், அவர்களிடத்தில் விரோதம்
வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்
தக்கன. பிறருக்கு ஓருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே
கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால்
எவன்தான் கொடாது ஒழிவான்? தானெழுந்தால் சகலமும்
எழும்; தானடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்
கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு
நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கே
யிருந்தாலுமிருக்கலாம்.
15.
மனத்தின்கண் எதுவரையில் விஷயவாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார்
என்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத்
தோன்ற அப்போதைக்கப்போதே அவற்றை யெல்லாம்
உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க
வேண்டும். ஒருவன் சொரூபத்தை யடையும் வரையில்
நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின், அது
வொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகளுள்ள வரையில்
அதிலிருந்து வெளியே வந்துக் கொண்டிருப்பார்கள்; வரவர
அவர்களையெல்லாம் வெட்டிக் கொண்டே இருந்தால்
கோட்டை கைவசப்படும்.
16.
நிஜமாய் இருப்பது ஆத்மசொரூபம் ஒன்றே. உலகமும்,
உயிரினங்களும், கடவுள்களும் சிப்பியில் வெள்ளிபோல் (சிப்பி வெளிச்சம் பட்டு மின்னுவதை தொலைவிலிருந்து பார்த்து வெள்ளியென மயத்தோற்றம் கொள்வது போல) அதில்
கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக
காலத்தில் மறைகின்றன.
நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே
சொரூபமாகும். அதுவே மௌனமெனப்படும். சொரூபமே
ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம்
சிவ சொரூபமே.
17.
யாருடைய ஆசையோ வேண்டுதலோ செயலோ இன்றி எழுந்த சூரியன்
உதித்த வேகத்தில் காந்தக்கல்லில்(குவியாடி) நெருப்பாகக் கூடிய அக்னியை கக்குவதும், தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தம் காரியங்களைச் செய்து இயற்றி அடங்குவதும்,
காந்தத்தின் முன் ஊசி செயல்படுவது போல, ஈசன் சன்னிதானத்தின்
விசேஷ சக்தியால் நடக்கும் முத்தொழில் அல்லது ஐவகை தொழில்களுக்கு (உழவு, வியாபாரம், நூற்பு, எழுத்து மற்றும் யுத்தம்) உட்பட்ட மாந்தர்கள் தத்தம் கடமைகளுக்கேற்ப செயல்களை தொடங்குகின்றனர். அன்றி, அவர் விருப்பமெதுவும் கொண்டவரல்லர்; ஒரு செயலின் பலனும் அவரையொட்டாது. அது, உலகத்தின் செயற்பாடுகள் சூரியனை பாதிக்காததும், ஏனைய நான்கு
பூதங்களின் நிலைகள் பரந்திருக்கும் ஆகாயத்தை
பதிக்காததும் போன்றது.
18.
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில்
தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம
சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும்
இடங்கொடாமல் ஆத்மநிஷ்டாபரனாயிருப்பதே(ஆன்மிக சிந்தனைகள் மட்டுமே கொண்டவனாக) தன்னை
ஈசனுக்களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும்,
அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல
காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக்
கொண்டிருக்கிறபடியால், நாமும் அதற்கடங்கியிராமல், “இப்படிச்
செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு”மென்று எப்பொழுதும்
சிந்திப்பதேன்? புகை வண்டி அனைத்து பாரங்களையும் தாங்கிக்
கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு
போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற்
போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையில் தாங்கிக்
கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?
19.
எந்தெந்த நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ
அவற்றையெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி
ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம்.
முத்துக் குளிப்போர் தம் இடையில் கல்லைக் கட்டிக் கொண்டு
மூழ்கிக் கடலடியில் கிடைக்கும் முத்தை எப்படி
எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும்
வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம
முத்தையடையலாம்.
20.
கடவுளும் குருவும் முக்தியை அடைவதற்கு வழியைக்
காட்டுவார்களேயல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற்
சேர்க்கார்.
கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி
வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின்
அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே
யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும்,
ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள்
அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால்,
தானே அறியவேண்டுமேயல்லாமல், பிறராலெப்படி
அறியலாம்? ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக்
கண்ணாடி வேண்டுமோ?
21.
குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை
ஆராய்வதால் எப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னை
அறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக்
கொண்டிருக்கும் தத்துவங்களனைத்தையும் சேர்த்துத்
தள்ளிவிடாமல் அவை இத்தனை என்று கணக்கிடுவதாலும்,
அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை.
பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போல் எண்ணிக்கொள்ள
வேண்டும்.
22.
நனவு (ஜாக்ரம்) நெடுங்காலமும், கனவு (சொப்பனம்) சிறிது நேரமும்
நிகழ்வது என்பது தவிர வேறு பேத மில்லை. நினைவில் நடக்கும்
விவகாரங்களெல்லாம் எவ்வளவு உண்மையாகத்
தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே
கணவில் நடக்கும் விவகாரங்களும் அந்த நேரம்
தோன்றுகின்றன. கனவில் மனம் வேறொரு தேகத்தை
எடுத்துக் கொள்கிறது. கனவு நினைவு இரண்டிலும்,
நினைவுகளும் நாமரூபங்களும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
23.
எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க
வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனத்தை
ஒழிப்பதே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்துகொண்ட
பின்பு நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.
மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள்
விசாரிக்க வேண்டுமே அல்லாமல், எப்படி நூல்களில்
விசாரிப்பது? தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணால் தானே
அறிய வேண்டும். "தான்' பஞ்ச கோசங்களுக்குள்
ளிருப்பது ;(மனித உடல் உணவு, பிராண வாயு, உணர்ச்சிகள், பகுத்தறிவு மற்றும் இவை அனைத்திற்கும் மேலான கறையற்ற ஆனந்தம் ஆகிய ஐந்து அடுக்குகளால் ஆனது.) நூல்களோ அவற்றிற்கு வெளியிலிருப்பவை.
ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க
வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. கற்றவை
அனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.
24.
சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே; சுகமும் ஆத்ம
சொரூபமும் வேறன்று. பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக
நாம் நமது அறிவீனத்தால் நினைக்கின்றோம். மனம் வெளி
வரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது
எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய
நிலையான இடத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே
யனுபவிக்கிறது. அப்படியே, தூக்கம், சமாதி, மூர்ச்சை
காலங்களிலும், விரும்பின பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்த
பொருளுக்குக் கேடுண்டாகும்போதும், மனம் உள்நோக்கி
ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது. இப்படி மனம்
ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளே
திரும்புவதுமாக ஓய்வின்றி அலைகிறது. மரத்தடியில் நிழல்
சுகமாயிருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையாயிருக்கிறது. வெளியில் அலையும் ஒருவன் நிழலில் சென்று
குளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின்
வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமை தாங்காது, மறுபடியும்
மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலில்
போவதும், வெயிலினின்று நி̈ழலில் செல்வதுமாயிருக்கிறான்.
இப்படிச் செய்கிறவன் அறிவீனன். ஆனால் புத்திசாலியோ
நிழலை விட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும்
பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின்
மனமோ பிரபஞ்சத்தில் உழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம்
பிரம்மத்திற்குத் திரும்பி சுகமடைவதுமாய் இருக்கிறது. ஜகமென்பது நினைவே. ஜகம் மறையும்போது, அதாவது
நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றது;
ஜகம் தோன்றும் போது அது துக்கத்தை அனுபவிக்கின்றது.
25.
சும்மா இருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர்.
சும்மா இருப்பதாவது, மனத்தை ஆத்ம சொரூபத்தில்
லயிக்கச் செய்வதே; அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால
முணர்தல், தூர தேசத்தில் நடப்பன அறிதல் ஆகிய இவை
ஞானதிருஷ்டியாக மாட்டா.
26.
நிராசையே ஞானம். நிராசை வேறு ஞானம் வேறன்று;
உண்மையில் இரண்டுமொன்றே. நிராசையென்பது ஒரு
பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது. ஞானமென்பது
ஒரு பொருளும் தோன்றாதிருப்பது. என்றால்,
அன்னியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது
நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம்.
27.
விசாரணையாவது தன்னிடத்திலேயே மனதை வைத்துக்
கொண்டிருப்பது. தியானமாவது தன்னை பிரம்மமென்றும்
சச்சிதானந்தமென்றும் பாவிப்பது.
28.
பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன்
யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி.
Good one
ReplyDeleteThank you
Deleteநல்ல காரியம் தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDeleteநன்றி
Deleteசீக்கிரமே சாமியாராக வாழ்த்துகள்
ReplyDeleteஅத்தனைக்கும் ஆசைப்படும் சாமியார்தானே?
Deleteமிகவும அருமை.
ReplyDeleteநன்றி
Delete