Skip to main content

அக்காள் சிறுகதை

அக்காள்

எம் டி வாசுதேவன் நாயரின் மலையாளச் சிறுகதை ஓப்போள் இன் மொழியாக்கம்

அக்காள் அழுதுக் கொண்டிருக்கிறாள். அக்காள் அழுவதைக் காண அப்புவிற்கு பிடிக்காது. வடக்குப்பக்க அறையின் ஜன்னல் திண்டின் மீது நெற்றியை அழுத்தி வைத்துக் கொண்டு அக்காள் அழுகிறாள். அவருக்கு எப்பொழுதும் அழுகையோ அழுகைதான்! ஒரு வேளை, பாட்டி திட்டியிருப்பாள். பாட்டி அப்புவையும் திட்டுவதுண்டு. அவனுக்கு அழுகையில்லை, கோபம்தான் வரும். அக்காளின் அளவிற்கு வளர்ந்திருந்தால் அவன் ஒரு கை பார்த்திருபான். அக்காள் இவ்வளவு பெரிதான பிறகும் பாட்டி திட்டுவதையெல்லாம் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பார். அப்பொழுது அக்காளின் முகம் வாட்டமடையும். கண்கள் நிறைந்துவிடும். அதைக் கண்டதும் அவன் மெதுவாக நழுவிச் செல்வதுதான் வழக்கம்.

அழும்போது அக்காளின் பக்கத்தில் நிற்க அவனால் முடியாது. அழுதுக் கொண்டே அக்காள் அவனை கட்டிக் கொள்வாள். அணைத்து இறுக்குவது அவனுக்கு பிடிக்கும்தான். ஆனால், ‘செல்லமே’ என முணுமுணுத்தபடி நெற்றியிலும் தலையிலும் முத்தமிடுகையில் சூடான கண்ணீர்த் துளிகள் அப்புவின் உடலின் மீது சொட்டும். அப்பொழுது அவனுக்கும் சும்மா அழத்தோன்றும்.

பாட்டி திட்டுவதையெல்லாம் அவன் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை. ஏராளமான திட்டு கேட்டாகிவிட்டது. காலையில் எழுந்ததிலிருந்து கேட்பதுதான். ‘மத்தியானமானாத்தான் பையன் படுக்கையை விட்டு எழுந்திருப்பான். உன் தலை தெரியும்போதே வீட்டு அஸ்திவாரம் ஆட்டம் கண்டுடிச்சே.’ திண்ணையின் கோடியில் அம்மிக்கல்லுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பல்விளக்கும்போது கொஞ்சம் தண்ணீர் சிந்தினால் போதும், பாட்டி தொடங்குவாள். ‘உருப்படாத பயலே, என் எலும்பும் முதுகும் நொறுங்கிப் போயித்தான் வீடு கூட்டித் தொடைக்கறேன்.’

முற்றத்தில் ஏதாவதொரு குப்பை போட்டால், கிணற்றில் ஒரு சிறு கல் எறிந்தால், செப்புக் குடத்தில் லேசாக மத்தளம் வாசித்தால், எல்லாவற்றுக்குமே திட்டுதான் பாட்டிக்கு, திட்டோ திட்டு. இப்பொழுது பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியதால் கொஞ்சம் நிம்மதி. பகலில் பெரிய உபத்திரவம் இல்லையே. அக்காளுக்கு பாட்டியை ரெண்டு போட்டால் என்ன? ஆனால் பாட்டியை பயப்படுவது அப்புவை விட அக்காள்தான். அப்புவை திட்டுவதை கேட்கையில் சில நேரம் அக்காள் சொல்வாள், “அவனை கரிச்சுக் கொட்டியே கொன்னுடுவீங்க அம்மா நீங்க.”

“த்தூ.” ஒரே துப்பு தான் அதற்கு பதில். அத்தோடும் நிற்காது. “அவ்வளவு இனிக்குதுன்னா அப்படியே முழுங்கிக்கோயேன்.”

“அவனவனதுன்னா...”

அப்பொழுது குட்டியை தொடச் சென்றால் கருப்பி மாடு கொம்பை குலுக்கிக்கொண்டு வருவதைப் போல பாட்டியின் ஒரு வரத்து இருக்கிறது.

“அதுக்கு கண்டவன்.. அய்யோ, அம்மா, என்ன ஏதாவது சொல்ல வச்சுறாதே.”

இந்த அளவு வந்ததும் அப்பு மெதுவாக முற்றத்துக்கு இறங்கிச் செல்வான். புழக்கடையில் பண்ணையாள் சக்கனின்கூட சுற்றிக்கொண்டிருப்பான். சில நேரங்களில் பூசணிக் கொடிகளின் நடுவே ஒளிந்து விளையாடும் சிவப்புவால் தும்பியை பிடிக்க ஒரு முயற்சி மேற்கொள்வான். என்றுமே அது அவன் கையில் சிக்கியதில்லை. என்னா கில்லாடி தெரியுமா, பட்டுக் கோவணம் கட்டி பறந்து திரியும் அந்த தும்பிப் பயல். நிறைய நேரம் கடந்துதான் அப்பு வீட்டிற்குள் புகுவான். இடையிடையே அவன் நினைத்துக் கொள்வான். வடக்குப் பக்க அறையின் ஜன்னல் திண்டின் மீது நெற்றியை அழுத்தி வைத்துக் கொண்டு அக்காள் தேம்பி அழுகிறாளாக இருக்கும்.

சந்த்யா வேளையில் பகவானின் திருநாமம் ஜெபிப்பது எனும் சிரமமான வேலை உள்ளது. இடைகழியில் அமர்ந்துதான் அப்பு ஜெபிப்பான். நிறையத் தடவை நமச்சிவாயா சொல்லவேண்டும். அது முடிந்ததும் அசுவினி, பரணி சொல்லவேண்டும். அதில் தவறேதும் வராது அப்புவிற்கு. மலையாள மாதங்கள் பன்னிரெண்டையும் சொல்லி முடித்தால் அதற்குமேல் அக்காளின் உதவி தேவை. ஆங்கில மாதங்களும் ஒன் டூ த்ரீ யும் அக்காள்தான் சொல்லித்தரவேண்டும். அக்காளுக்கு ஆங்கிலமெல்லாம் தெரியும். முன்னறையில் குழந்தைக் கண்ணனின் படம் போட்ட காலண்டரில் அச்சடித்திருக்கும் ஆங்கிலமெல்லாம் வாசிக்க அக்காளால் முடியும். அக்காள் எட்டாவது வரைக்கும் படித்திருக்கிறாளாம். எல்லாம் சொல்லி முடிந்ததும் அவன் அக்காளின் பக்கத்தில் சென்று உட்காருவான். பேச்சொன்றும் இருக்காது. அக்காளின் விரல்கள் அவனது முடிக்குள்ளே அலைந்துக் கொண்டிருக்கும். அப்பொழுதுதான் பக்கத்து வீட்டில் இருந்து பாட்டு கேட்கும். பக்கத்து வீடு மிகவும் பெரியது. அவன் அங்கே சென்றதில்லை. வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து பார்த்தது மட்டும்தான். அங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அங்கேயிருந்து பாட்டு கேட்கத் தொடங்கியது சமீபத்தில்தான். பாட்டு பாடவும் பேசவும் செய்யும் ஒரு பெட்டி அங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். பெட்டி எப்படி பாடவும் பேசவும் செய்யும்!

சக்கன் சொல்கிறான் அதனுள் ஆட்கள் புகுந்துக் கொண்டிருப்பார்கள் என. சக்கனுக்கு எதுவும் தெரியாது. அவன் பள்ளிக்குச் செல்வதில்லையல்லவா. அவனை மட்டும் கருப்பி முட்ட வராது. அது அவன் பெரிய இவன் என்பதால் எல்லாம் இல்லை. தார்க்குச்சியைக் கண்டுதான்.

அந்தப் பாடல்களெல்லாம் சினிமாவில் இருப்பவையாம். அப்பு சினிமா பார்த்ததில்லை. அவன் வகுப்பிலிருக்கும் யசோதாவும் மணியும் பார்த்திருக்கிறார்களாம். சினிமாவின் படங்கள் போட்ட ஒரு பையினை அவன் பார்த்திருக்கிறான். பாட்டு கேட்டதும் அக்காளின் மேல் பேய் இறங்கிவிடும். எது கேட்டாலும் பதில் பேச மாட்டாள். எதற்குத்தான் அப்படி பிணக்கு கொள்கிறார்? சில நேரங்களில் அப்படி பேசாமடந்தையாகி விடுவாள். என்ன ஒரு அக்காளோ.

இருந்தாலும் அக்காளை அவனுக்கு மிகவும் பிடிக்கும். காலையில் பள்ளிக்கூடம் செல்லும் முன் அவள்தான் அவனை குளிப்பாட்டுவாள். சொரசொரப்பான பீர்க்கங்காய் நார் கொண்டு உடம்பு முழுவதும் அழுத்தித் தேய்ப்பது அவனுக்கு பிடிக்காது. துவர்த்து முண்டின் முனையை திரித்து காதினுள் விட்டு குடைவது அவனுக்கு கிச்சுக்கிச்சு மூட்டும். அக்காள்தான் கஞ்சி பரிமாறுவாள். குடித்து முடித்து கை அலம்பியதும் ஈரமான துண்டினால் நெஞ்சின்மீதிருக்கும் தண்ணீரைத் துடைத்து முந்தின நாள் துவைத்து மடித்து வைத்த சட்டையும் வார் வைத்த டிரவுசரும் அணிவிப்பாள். தலை சீவி முடித்து முகத்தின் மீதிருக்கும் எண்ணெய் மினுப்பை ஒரு முறை கூட துடைத்து விட்டதும் அவன் பள்ளிக்கு போகலாம்.

இரவு அவன் சாப்பிட உட்கார்ந்தால் அக்காளும் பக்கத்தில் இருப்பாள். அக்காள் ஊட்டிவிடுவதுதான் அவனுக்கு பிடிக்கும். ஆனால் பாட்டியின் கண்பட அவள் ஊட்டிவிடமாட்டாள். ஏனெனில் ஒரு நாள் பாட்டி சொன்னாள்:

“வாயில திணிச்சு விடறா.. பச்சைப் புள்ளைக்கு.”

எப்போவாவது மட்டும்தான் அக்காள் பாட்டியை எதிர்த்துப் பேசுவாள். அக்காள் சொல்வதைக் கேட்டதும் பாட்டிக்கு எரிச்சல் அதிகமாகும். அப்புறம் சத்தம்தான். பேச்சு முற்றும்போது அக்காள் அழுவாள். சில நாட்களில் பாட்டியும். பாட்டி அழுதால் அவனுக்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு முறைதான் பாட்டி அழுவதைக் கண்டு அவனுக்கு வருத்தமாக இருந்தது. அது அக்காளுடன் சண்டையிட்டதனால் அல்ல.

அன்று நடந்ததை அப்பு இன்னமும் மறக்கவில்லை. பாட்டியை அழவைத்த அந்த ஆளையும்.

சக்கன் செய்து கொடுத்த ஓலைப் பந்தை முற்றத்தில் தட்டி விளையாடிக்கொண்டிருந்தான் அப்பு. அப்பொழுது நுழைவாசலிலிருந்து ஒரு அழைப்பு.

“அம்மா!”

பார்த்தால் ஒரு ஆள் வேலியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். முழுக்கை சட்டையும் கக்கத்தில் ஒரு பையும் இருந்தது. பாட்டி முற்றத்திற்கு இறங்கி வேலியை நோக்கி நடந்தார். பாட்டி என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

“பெத்த தாய் சொல்றேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு வீட்ட்டுகுள்ளே ஏறினால் என்ன, குமாரா?”

பாட்டி சொல்வது நியாயம்தான் என அப்புவிற்கும் தோன்றியது. என்ன இவ்வளவு பெரிய கெத்து? பாட்டியிடம் பேசுவதற்காக அவரை அங்கே அழைக்க வேண்டுமா? வீட்டின் உள்ளே வர வேண்டியதுதானே?

“இந்த வாசப்படியை மிதிக்கமாட்டேன்னு சொல்லிப் போயி அஞ்சாறு வருஷமிருக்குமா? இனி அது நடக்காதம்மா.” அவர் சொல்கிறார்.

பாட்டிக்கு நல்லதா நாலு கேள்வி கேட்டால் என்ன? எப்பொழுதும் கடிக்க உருமிக்கொண்டிருப்பவர் அந்தத் திமிர் பிடித்தவனிடம் மேலும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

“அதுவும் நான் பெத்தது தானே? கொல்ல முடியுமா என்னால?”

அதற்கு அந்த ஆள் சொன்ன பதில் அப்புவிற்கு புரியவில்லை.

“டேய் என் பாடை சுடுகாடு எட்டுற வரைக்குமாவது..”

“அதுக்கப்புறம் இதுவும் இருக்காது.”

அந்த ஆள் மேலும் வம்பு செய்கிறார்.

“இந்த வேதாந்தமெல்லாம் மக கிட்ட ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும்.”

அதன் நடுவே அந்த ஆள் அவனைப் பார்த்தார். அது அவ்வளவு இதமான பார்வை இல்லை. சமயம் வாய்த்தால் குழந்தைகளின் கழுத்தைத் திருகி சாக்கில் திணிக்க நடக்கும் அந்த கோசாயி சாமியார் இருக்கானே, அவன் பார்த்தபோது கூட அப்புவிற்கு இவ்வளவு பயம் தோன்றவில்லை. இந்த மனிதனும் கழுத்தைத் திருகுவானா? அவன் மெதுவாக வாசல் படியை தாண்டினான். அக்காள் உள்ளே சென்றுவிட்டிருந்தார். அடுக்களையில் பின்வாசல் கதவு வழியாக வாழைக் கூட்டத்தை பார்த்து நின்றுக்கொண்டிருந்தார். அவரது முண்டின் சுற்று மடிப்பை பிடித்து இழுத்தபடி அப்பு கேட்டான்:

“யார் அக்கா அது?“

அக்காள் அதை கேட்டதாகத் தெரியவில்லை.

“யார் அக்கா அது?“

அக்காள் எதையோ சொல்ல வந்தார் ஆனால் சொல்லவில்லை.

“யார் அக்கா?”

“அது..”

“கழுத்தைத் திருகுவாரா?”

“யாரு?”

“குழந்தைகளோட கழுத்தை திருகுவாங்க இல்லே?”

அக்காவுக்கு மூச்சு முட்டுவதைப் போல தெரிந்தது.

“அது உன் மாமா டா.”

இது நல்லா இருக்கே! மாமாவாக இருந்துக் கொண்டு இப்படியா செய்வது? வெளிவாசலில் நின்று பாட்டியை மெதுவாக அழைப்பது. பிறகு பயப்படுத்தும்படி அப்புவை பயங்கரமாக பார்ப்பது.. நல்ல மாமா!

அக்காள் சும்மா சொல்லியிருப்பாரோ?

“நெசமாவா அக்கா?”

“ஆமா.”

“மாமா ஏன் உள்ளே வரல?”

அதற்கு அக்காள் பதில் சொல்லவில்லை.

“மாமா வரமாட்டார்.”

திரும்பவும் கேட்கலாம் என நினைக்கையில்தான் அக்காள் கண்களைத் துடைக்கிறார்.

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்..”

அப்பொழுது பாட்டி வீட்டினுள் வந்தார். பாட்டியைக் கண்டதும்தான் அப்பு திடுக்கிட்டான். பாட்டி தேம்பி அழுதுக் கொண்டிருந்தார். கண்ணீருக்கு நடுவே என்னென்னவோ புலம்பிக் கொண்டுமிருந்தார். அப்புவிற்கு வருத்தமாக இருந்தது. என்னதான் திட்டினாலும் அவனுடைய பாட்டி அல்லவா? சிறிது தைரியமாக அவன் வாசலுக்கு வந்து வேலிப்பக்கம் பார்த்தான். மாமா போய்விட்டிருந்தார்.

ஒரு மாமா இருப்பது நல்லதுதான். ஆனால் இப்படி பார்வையாலேயே மிரட்டக் கூடாது. வெளி வாசலில் வந்து நின்று பாட்டியை அழைத்து அதுமிதும் பேசி அழவைக்கக் கூடாது. மேல வீட்டில் ஜானுவிற்கு ஒரு மாமா இருக்கிறார். எங்கேயோ தூரமான இடத்தில் இருக்கிறார் அவர். ஏழு கடல் தாண்டிச் சென்றால்தான் அவர் இருக்குமிடத்தை அடைய முடியும். அங்கே பட்டுச் சட்டையும் மொட்டுக்குடையும் தாராளமாக உள்ளது. அவர் வந்தபோது ஜானுவிற்கு இது இரண்டும் கிடைத்தது. மொட்டுக்குடை மிகவும் அழகு. எடையே இல்லை. அம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும்போது மட்டும்தான் அவள் அதை எடுப்பாள். சட்டை அளத்தி போதாததால் பெட்டிக்குள் வைத்துள்ளாள். வீட்டிலேயே இருக்கும் மாமா அவளுக்கு எதுவும் கொடுத்ததில்லை. அவளுக்கு எழு கடல் தாண்டி வரும் மாமாவைத் தான் பிடிக்கும். அவர் அடுத்த ஆண்டும் வருவாராம்!

அப்புவின் மாமா இப்படி பிரச்சினை பண்ணுபவராக இருப்பதில் அவனுக்கு வருத்தம் உண்டு. அந்த ஆள் வரமாட்டார் என்றுதான் அக்காள் சொன்னார். அவர் வசிக்குமிடத்தில் மொட்டுக்குடை கிடைக்குமோ என்னமோ? கிடைத்தாலும் அவர் கொண்டுவர மாட்டார். பார்ப்பதைப் பாரேன்! பாட்டியையே அழ வைத்துவிட்டார். வீட்டிற்குள் வராதது கோபத்தினால் இருக்கும். யார் மீது கோபம்?

அடுத்தமுறை வரும்போது கேட்கவேண்டும் என தீர்மானித்திருந்தான். ஆனால் மாமா வரவில்லை.

மாமா எங்கே இருக்கிறார்? அக்காள் சொல்லவில்லை. ஜானுவிற்கு அப்படி ஒருவரை தெரியவே இல்லை. அவனுக்கும் ஒரு மாமா இருக்கிறார் என்பதை நம்புவதே அவளுக்கு சிரமமாக உள்ளது. சக்கனுக்கு கொஞ்சமெல்லாம் தெரியும்.

“அவர்களுக்கு பொய்க்கரையில் வீடும் தோட்டமும் உள்ளது.”

சக்கன் பார்த்ததுண்டாம். அவன் அவ்வழியாக சென்ற காலத்தில்தான் புது வீட்டிற்கு ஓடு வேய்ந்துக் கொண்டிருந்தனர்.

“மாமா ஏன் இங்கே வருவதில்லை?”

“அவர் சண்டைபோட்டு போனவர் தானே?”

எதற்குச் சண்டை என சக்கனுக்கும் தெரியவில்லை.

யோசித்துப் பார்த்தால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பல சந்தேகங்களையும் அவனுக்கு தீர்க்க வேண்டியுள்ளது. ஆனால் யாரைக் கேட்பது? அக்காள்தான் அவனது சந்தேகங்களை தீர்த்து வைப்பாள். இரவு படுக்கையில் பக்கத்தில் படுத்திருக்கும்போதுதான் அது.

அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் வடக்கு அறையில் மெத்தை விரித்து வைத்திருப்பார். சிவப்பில் பெரிய வெள்ளைப் பூக்கள் கொண்ட ஒரு பழைய சாரிதான் படுக்கை விரிப்பு. அதனால்தான் அவனுக்கு அந்தப் படுக்கையில் படுக்க பிடிக்கும். அது அக்காளின் சாரி. அக்காளுக்கு இன்னுமொரு சாரி கூட இருக்கிறது. அது பெட்டியில் மடித்து வைக்கப்பட்டுள்ளது. அக்காள் அதை உடுத்துவதை அப்பு பார்த்ததில்லை. அந்தப் பெட்டியைத் திறந்தால் வாசனையாக இருக்கும். தாழம்பூ மணம். தாழம்பூ மணம் பரப்பும் சாரி உடுத்தி அக்காள் நடந்தால் நன்றாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் அப்பு படுத்துக் கொள்வான் எனினும் அக்காள் வரும் வரையில் தூங்கமாட்டான். பாத்திரம் துலக்கி அடுக்களையை கூட்டி சுத்தம் செய்த பிறகுதான் அக்காள் வருவார். அக்காளை கட்டிப் பிடித்து படுத்திருக்கும்போது அவன் ஒவ்வொரு சந்தேகங்களை கேட்பான். ஜானு அன்று சொன்னதெல்லாம் பொய் தானா என்பதுதான் பல நாட்களிலும் அவனுக்கு தெரியவேண்டி இருந்தது. என்னமாக பொய் சொல்கிறாள் அவள்! ஒன்பது குழந்தைகளை விழுங்கிய பாம்பு உள்ளதாம் அவர்களது தெற்கு மூலையின் சர்ப்பக்காவில். அது சுத்தப் பொய்தானே? பாம்பின் வயிற்றில் ஏழு குழந்தைகளுக்கு கூட இடம் போதாது!

ஒருநாள் ஜானு சொன்னாள் அவள் கடவுளைப் பார்த்ததாக. அப்புவால் நம்ப முடியவில்லை. அவன் கண்டதில்லை. சக்கணும் கண்டதில்லை. அக்காளும்கூட பார்த்ததில்லை. ஜானு ராத்திரியில்தான் கண்டாளாம். வருடாந்திர விருந்துக்கு காவடியாடி வரும் பூசாரியை விட தாடியும் மீசையும் இருந்ததாம் கடவுளுக்கு. அவள் சொல்வது பொய் தானா என அறிய அப்பு கேட்டான்.

“தலையில என்ன இருக்கும்?”

“யார் தலையில?”

“கடவுளோட தலையிலே?”

ஜானு தீவிர யோசனைக்குப் பிறகு சொன்னாள்” “தலைமுடி.”

“ஊ ஊ" அப்பு கேலியாக ஊளையிட்டான். “கடவுளோட தலையில கிரீடம்தான்.”

ஜானு அதை கண்டிருக்கவில்லை. அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது.

பொய் சொல்வாள் எனினும் அவளை அவனுக்கு பிடித்திருந்தது. அவள் இருக்கும் வரையில் விளையாட துணை இருந்தது. இப்பொழுது அவளும் இல்லை. அவளது அப்பா கூட்டிச் சென்று விட்டாராம். காடும் மலையுமெல்லாம் இருக்கும் இடத்திற்குதான் கொண்டுசென்றிருக்கிறார். ஆனால் கடல் கடக்க வேண்டுமே. ஏழு கடல் தாண்டிப் போவது அவளின் மாமவின் இடத்திற்குத்தானே. அப்பாவுடன் செல்லும்போது அவள் இரயிலில் இருப்பாள். இரயில் பெரிய குன்றின் வயிற்றைத் துளைத்துக் கொண்டு பாயுமாம்.

போவதற்கு முதல் நாள் ஜானு அப்புவின் வீட்டிற்கு வந்தாள். அவளது அம்மாவும் உடனிருந்தார்.

“நாங்க நாளைக்கு இரயிலேறிப் போவோமே” என அவள் சொன்னபோது அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. என்னவெல்லாம் பார்க்கலாம் அவளுக்கு! அவள் போகுமிடத்தில் நல்ல இரப்பர் பந்தும் சைக்கிளும் இருக்கும்.

அப்புவிற்கும் எங்காவது போனால் தேவலை என்றிருந்தது. யாரும் வந்து அழைத்துப் போகவில்லையென்றால் அவன் என்ன செய்ய முடியும்! மலைமேல் காவும் தாலப்பொலி பாலையும் நிற்கும் குன்றினைத் தாண்டி அவன் போனதில்லை. எழுகடல் தாண்டி இருக்கும் ஊர்கள். பெரிய மலைகளின் வயிற்றைக் குடைந்து விரையும் இரயில்கள். மொட்டுக் குடையும் பட்டுச் சட்டைகளும் நிரம்பிய அந்த ஊரின் குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஜானுவின் அம்மா அக்காளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். அவர்கள் ஒன்றாக படித்தவர்களாம். ஜானுவின் அப்பாவுடன் பல ஊர்களுக்கும் போயிருக்கிறாளாம்! ஒரு தமாஷ் என்ன தெரியுமா? ஜானுவின் அப்பாவை அவள் “அமமூங்கப்பா” எனத்தான் சொல்கிறாள்! ஜானுவின் அம்மா போனதும் அக்காளின் கண்களில் நீர் நிரம்பியது. ஒருவேளை அக்காளுக்கும் மலையைத் துளைத்து பாய்ந்தோடும் இரயிலில் போகவேண்டும் என்றிருக்கும்!

அக்காள் எங்கேயும் போவதில்லை. கோயில் குளத்தில் குளிக்கக்கூட. வீட்டின் கிணற்றடியில்தான் குளிக்கிறாள். பக்கத்தில் பகவதிக்காவில் பாட்டும் தாலமும் நடந்தபோது பாட்டி போனாள். அபபுவும் போனான். ஆனால் அக்காள் வரவில்லை.

“அக்காள் வரவில்லையா பாட்டி?”

அப்பொழுது பாட்டி கோபித்துக் கத்தினாள், “டேய், பேசாம இருந்துக்கோ.”

கடந்த வைகாசியிலிருந்துதான் அப்பு பள்ளிக்கூடத்திற்கு போகத் தொடங்கினான். இனியும் இரண்டு மாதங்கள் போனால் பரீட்சை வரும். அதில் ஜெயித்தால் பிறகு அவன் இரண்டாம் வகுப்பிலதான் உட்காருவான். ஜானு அப்பாவின் இடத்திற்கு போனாலும் பள்ளிக்கூடம் போக முடியுமாம். அங்கேயும் பள்ளிக்கூடம் இருக்கும். கேளு வாத்தியார் இருப்பாரோ என்னமோ? இல்லாமலிருக்கட்டும், அடி வாங்காமல் இருக்கலாமே.

வகுப்பில் அவனுக்கு ஒரு கூட்டாளி இருக்கிறான். குட்டிசங்கரன். வயல்களின் மறுகரையில்தான் குட்டி சங்கரனின் வீடு. அவர்கள் ஒன்றாகத்தான் பள்ளிக்கு போவதும் வருவதும். கேளு வாதியார் சில நேரம் குட்டிசங்கரனை குட்டிச்சாத்தான் என கூப்பிடுவார். எல்லோரும் சிரிப்பார்கள். அவனுக்கு அப்படித்தான் வேண்டும். இருந்தாலும் கேளு வாத்தியார் அடிக்கும் அடி தாங்க முடியாது. குட்டிசங்கரன் ஒருநாள் அவனுக்கு ஒரு எலுமிச்சம்பழம் பரிசு தந்தான். அது அவன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். முந்தைய தினம் அவர்களின் வீட்டில் நிறைய எலுமிச்சம்பழங்கள் இருந்ததாம். அவனின் சின்னக்காளின் கல்யாணமாம்.

“கல்யாணத்துக்கு எதுக்கு எலுமிச்சம்பழம்?”

“முட்டாள் இதுகூடத் தெரியாதா?” அவன் கேட்டான்.

என்னவோ நிறைய கல்யாணங்களைப் பார்த்த மாதிரித்தான் அவன் நினைப்பு. கல்யாணத்தைப் பற்றி குட்டிசங்கரன் விளக்கினான். நிறைய ஆட்கள் வீட்டிற்கு வருவார்கள். பந்தலில் உட்காரந்திருப்பவர்கள் மீது குப்பியில் பன்னீர் நிறைத்து தெளிப்பார்கள். பன்னீர் நல்ல வாசனையாக இருக்கும். பிறகு களபமும் எலுமிச்சம்பழமும் எல்லோர்க்கும் கொடுப்பார்களாம்.

இதெல்லாம் நிஜமென அப்பு நம்பவில்லை. பொய் என வெளிப்படையாகச் சொன்னால் அவன் கேட்பான்.

“நீ கல்யாணம் பாத்திருக்கியா?”

அப்பொழுது இல்லையென ஒத்துக்கொள்ள வேண்டிவரும். குட்டிசங்கரனை சமாதானப்படுத்த அப்பு சொன்னான்.

“எங்க அக்காளுக்கு கல்யாணம் நடக்கும்போது நானும் எலுமிச்சம்பழம் தர்றேன் உனக்கு.”

ஆனால் குட்டி சங்கரன் சொல்கிறான், “அதுக்கு உனக்கு அக்காள் இருக்கா..?”

அதைக் கேட்டதும் அப்புவிற்கு கடுமையான கோபம் வந்தது. ‘குட்டிச்சாததான்’ என நான்கு முறை சொல்லி கன்னத்தில் அறைய வேண்டும்போல இருந்தது. குட்டிசங்கரன் அவனைவிட பெரியவன். அதனால் அப்படிச் செய்யவில்லை.

“அப்புறம் எங்க அக்காள் யாருடா?”

“முட்டாள், அது உன் அம்மா இல்லையாடா?”

அப்பொழுது குட்டிசங்கரனின் முட்டாள்தனத்தை நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது. சும்மா இல்லை கேளு வாத்தியார் குட்டிசங்கரனுக்கு மூளை இல்லையெனச் சொல்வது.

“போடா, உனக்கு ஒண்ணும் தெரியாது.”

“அப்புறம் உனக்குத்தான் தெரியுமாக்கும்? எங்கம்மாவே சொன்னாங்களே.”

“உங்கம்மாவுக்குத்தான் தெரியுமாக்கும்.”

பிறகு சண்டையாகிவிட்டது. குட்டிசங்கரன் எலுமிச்சம்பழத்தை திருப்பிக் கேட்டான். எலுமிச்சம்பழத்தை வீசியெறிந்து கொக்காணி காட்டினான் அவன்.

பள்ளி முடிந்து திரும்புகையில் அவன் எண்ணிப்பார்த்தான். அக்காள் எப்படி அம்மாவாக முடியும்? அவனுக்கு அம்மாவும் அப்பாவுமெல்லாம் இல்லை. அக்காளும் பாட்டியும் மட்டும்தான் உள்ளனர். அதில் பாட்டியை கணக்கில் சேர்க்க வேண்டியது இல்லை.

“டேய் அதைச் செய்யாதே, டேய் இதைச் செய்யாதே, டேய் உன் தலை தெரிந்ததுமே, டேய்..”

அவனுக்கு அக்காள் போதும். அப்புறம் அந்த அக்காளை அம்மா எனச்சொல்லும் குட்டிச்சாத்தானை என்ன செய்ய வேண்டும்?

அவனுக்கு அம்மா வேண்டாம்.

அம்மா இருப்பதன் பிரச்சினைகளை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். பாட்டி தானே அக்காளின் அம்மா. அக்காளுக்கு எப்பொழுதாவது நிம்மதி தருகிறார்களா?

கடந்த நான்கைந்து நாட்களாக அக்காள் இரவும் பகலும் அழுதுககொண்டே இருக்கிறார். பாட்டி திட்டுவதில்லை. இருந்தாலும் அழுகையோ அழுகை!

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்..”

அக்காளுக்கு அவனிடம் கோபம் எதுவும் இல்லை. இரவு கட்டிப்பிடித்து படுக்கும்போது அக்காள் நிறையச் சொன்னாள். கதையில்லை. அபபுவுக்கு கதை கேட்பதில்தான் விருப்பம். அக்காளுக்கு நிறைய கதைகள் தெரியும். மாணிக்கக் கல்லை கண்டுபிடித்த இளவரசனின் கதை. அதைக் கேட்ட பிறகு தான் மாணிக்கக் கல் கிடைத்தால் ஒளித்து வைக்கும் உபாயம் அவனுக்குத் தெரிந்தது. சாணி கொண்டுதான் பொதிந்து வைக்க வேண்டும். அப்பொழுது சோபை தெரியாது. பிறகு கல்லாகச் சமைந்த இளவரசியின் கதை. அவளை உயிர்ப்பிக்க குழந்தையை அறுத்து இரத்தத்தை கல்லின் மீது வார்த்ததைக் கேட்டபோது அவனுக்கு அழுகை வந்தது.

இப்பொழுது அக்காள் கதைகள் எதுவும் சொல்வதில்லை. பேசாமல் படுத்துக் கொண்டிருப்பார். சிறிது நேரம் கடந்ததும் கேட்பார், “தூங்கீட்டியாடா செல்லம்..”

“இல்லை.”

“நல்லா படிக்கணும்டா கண்ணு.”

“ஊம்.”

“நல்ல பிள்ளையா நடந்துக்கணும் என்ன.”

“ஊம்.”

“பெரியவனான பிறகு அக்காளை நல்லா பாத்துப்பேதானே?”

இதென்ன அர்த்தமில்லாத கேள்வி?

இருந்தாலும் ஊம் கொட்டுவான்.

“அக்காளுக்கு நீ மட்டும்தான்டா இருக்கே.”

இரண்டு மூன்று நாட்களாக அக்காளுக்கு சுகமில்லை. குளிப்பாட்டும்போதும் சாதம் பிசையும்போதும் தலை சீவும்போதும் எதுவும் பேசுவதில்லை. வெறுமனே அவன் முகத்தை அப்படியே பார்க்கும். பிறகு தன்னை மறந்த ஒரு இருப்புதான்.

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்..”

மத்தியானம் அக்காளும் பாட்டியும் நடு அறையின் நிலத்தில் படுத்துக் கொண்டிருக்கையில் பாட்டி சொன்னாள் “அவனை நெனச்சு நீ மனசை புண்ணாக்காதே.”

அக்காள் எதுவும் சொல்லவில்லை.

“நடந்தது நடந்துபோச்சு, அதையும் இதையும் யோசிச்சா ஒரு முடிவு இருக்காது. இது சரியாச்சுன்னா பொழச்சோம்.”

அதற்கும் அக்காளுக்கு பதில் எதுவும் இருக்கவில்லை.

“அதெல்லாம் சங்கரன் நாயர் நடத்துவாரு. அவரு ஆளும் தரமும் தெரிந்தவரு.”

“அம்மா, என்னம்மா சொல்லறீங்க?”

“நீயு” பாட்டியின் குரல் கொஞ்சம் மாறியது : “சும்மா எதையாவது செய்ய நெனக்காதே. இது தப்பினா அப்புறம் வாழ்க்கை முச்சூடும் இப்படியே இருக்க வேண்டியதுதான்.”

“இது எம்மாத்தறது இல்லையா?” அக்காள்தான் கேட்கிறாள்.

“அது உனக்கு தெரியாண்டாம்.”

“அப்புறம் அந்தக் குத்தமும் எனக்குத்தான்.”

“அதெல்லாம் சங்கரன் நாயருக்குத் தீர்மானமா தெரியும். வயநாட்டிலே கெடக்கற மனுஷனுக்குத்தானே இந்தச் செய்தி.”

“அம்மா.. அப்பு. “

“அபபுவும் சுபபுவும்.. நான் சொல்றதைக் கேளு. இந்தத் தொல்லையை விட்டொழிக்கலாம்னு பாக்கும்போது..”

அக்காள் பேசவில்லை.

மீண்டும் பாட்டியே பேசினாள் :”எல்லாம் சங்கரன் நாயர் பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கார்...”

இந்த சங்கரன் நாயர் யாரு? இவ்வளவு திறமைசாலியை ஒரு முறையாவது பார்க்கணுமே. இப்படி இருக்கையில் சங்கரன் நாயர் வரப்போவதாக ஒரு நாள் தெரிந்தது. சங்கரன் நாயர் நல்ல மனிதானகத் தெரிந்தார். அவர் திண்ணையில் உட்கார்ந்து பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அப்பளவட்டத்தை சுற்றி நிறுத்தியிருந்த அவரது நரைத்த தலைமுடியின் அழகைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவருக்கு பாட்டியுடன் நிறைய பேச இருந்தது.

அதெல்லாம் அவனுக்கு தெரியவேண்டியதில்லை. வயநாட்டிலேயே திருமணத்தை வைத்துக்கொள்கிறாராம். வைத்துக் கொள்ளட்டும். பையன் சமாச்சாரம் காதிற்கு எட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பார்த்துக்கொள்ளட்டும். அப்புவிற்கு அப்பள வட்டத்தில் நிறுத்தியிருந்த அந்த முடியினை ஒரு முறை நன்றாக பார்த்தால் போதும். அதன் நடுவே நீளமான நான்கு முடிகளை வைத்து விட்டால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. பள்ளியில் தோட்டத்தின் நடுவே தொட்டியில் குதிரைவாலி வைத்தது போல அழகாக இருக்கும்.

அப்பு தலையை வெளியே நீட்டி மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்தான். சங்கரன் நாயர் குரலை தாழ்த்தினார். பாட்டி திரும்பிப் பார்த்தபோது அப்புவைக் கண்டாள். “அப்பு, முற்றத்திலே போயி விளையாடு.”

அப்பு உள்ளே சென்றான். ஓ, அவர்களின் ஒரு பஞ்சாயத்து!

வயநாட்டில் கல்யாணம் நடந்தால் அவனுக்கு என்ன? ஒரு எலுமிச்சம்பழம் கூட கிடைக்காது. யாரு வேணும்னாலும் கல்யாணம் நடத்திக்கட்டும். அவனுக்கென்ன நட்டம்? உள் அறையில் அரிசியிட்டு வைக்கும் முருக்குமரப் பெட்டியினை ஒரு முறை திறந்து மூடினான். அதனுள்ளே இறக்கை முளைக்காத கரப்பான்பூச்சி ஒன்று முறைத்துப்பார்த்தது! ஜன்னலில் ஏறி நின்று சுவற்றில் ஆணியில் தொங்கவிட்டிருந்த கூடைக்குள் எட்டிப் பார்த்தான். சும்மா. அதில் கடுகு போட்டு வைத்திருந்தது. அடுக்களையில் வெண்கல தம்பளர் கீழே விழும் சத்தம் கேட்டது. அக்காள்தான் அடுக்களையில். பாட்டி கூப்பிட்டார்: “மாளூ.”

தம்பளர் விழுந்ததற்கு திட்டுவதற்கா?

“ஏய், புள்ளே மாளூ.”

அக்காள் வாசல் கதவிற்கு வந்து நின்றாள். என்னவெல்லாம் திட்டு விழப்போகிறதோ என பயத்துடன் அப்பு கவனித்தான்.

“அம்மா எல்லாம் சொன்னாங்க இல்லே?” சங்கரன் நாயர்தான் கேட்கிறார். “கவலைப்பட ஒண்ணும் இல்லை. எல்லாம் நான் பாத்துக்கறேன். அந்தாளு ஒரே ஒருவன் மட்டும்தான். தனியாளு. இதெல்லாம் அவருக்கு தெரியப்போறதில்லை.”

அக்காள் எதுவும் பேசவில்லை.

“அங்கேயே நடத்துவோம். சும்மா நாலுபேத்த கூப்பிட்டாப் போதும்.”

“அது வழக்கம் இல்லையேன்னு பேச மாட்டாங்களா?” பாட்டிக்குதான் சந்தேகம்.

“நீங்க என் சொந்தக்காரங்க. உங்களுக்கு யாருமே இல்லை. நான் பத்திருபது வருஷமா அங்கேதான் இருக்கேன். நான் சொல்றது புரியுது இல்லையா உங்களுக்கு?”

“என்னது சங்கரன் நாயரே?”

“ஹா ஹா ஹா, அப்படித்தான் நான் சொல்லி வெச்சிருக்கேன். அப்போ என்னோட இடத்திலே ரொம்ப எளிமையா ஒரு கல்யாணம் நடத்தினா என்ன தப்பு?”

“அது சரிதான். நீங்க மட்டும்தான் எனக்கு இருக்கற ஒரே ஆதரவு சங்கரன் நாயரே.”

“அதனாலே தானே நான் ஆடிப்பாடி இதை பிடிச்சுட்டு வந்திருக்கேன். அவருக்கு பொண்ணை ஒருமுறை பார்க்கணுமாம். அதுக்கு என்ன பண்ண?”

பாட்டி என்னவெல்லாமோ புறுபுறுத்தாள்.

“அதெல்லாம் காதுக்கு எட்டாம நான் பாத்துக்கறேன்.”

“எல்லாம் சரியானா கீழக்காவு அம்மனுக்கு ஒரு பாயாசம் படைக்கறேன்னு வேண்டிகிட்டிருக்கேன்.”

“எல்லாம் சரியாப் போகும். உங்க மகளுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. அவருக்கு அரசாங்கம் கொடுத்த நாலேக்கறா பூமியிருக்கு. பாடுபட்டா சௌக்கியமா இருக்கலாம்.”

அப்பொழுது ஜலதாரையின் கீழே வைக்கப்பட்டிருந்த காலியான தாம்பாளத்தினுள்ளே ஒளிந்திருக்கும் கொம்பிருக்கும் ஒரு மகானை அப்பு கண்டடைந்தான். கரப்பான் பூச்சியல்ல. இது புது வீரன். இவனை சும்மா விடக்கூடாது. வேண்டியபோது விளக்குமார் கைக்கு கிடைக்காது. ஒரு கனமான ஈர்க்குச்சி வேண்டும். வாசலில் இன்னமும் பேச்சுவார்த்தை நடக்கிறது. சங்கரன் நாயரும் பாட்டியும் பேசுகின்றனர். எல்லாம் ரகசியம். அதனால்தான் இவ்வளவு மெதுவாக. என்னமோ ஆகட்டும், எங்கே இந்த விளக்குமார்? ஒளிந்திருக்கும் கொம்பனை ஒரே அடி. விளக்குமாறைத் தேடி அடுக்களைக்கு போனபோது அங்கே அக்காள். கொஞ்சம் முன்னர்தானே சங்கரன் நாயரின் பஞ்சாயத்தை கேட்கப் போனார். அக்காளிடம் சீமார் எங்கே எனக்கேட்டதும் அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். நெற்றியிலும் தலையிலும் நிறைய முத்தங்கள் தந்தார். அக்காளின் கண்ணீர் அவனது முகத்திலும் உச்சியிலுமெல்லாம் வீழ்ந்தது.

சங்கரன் நாயர் எதுவும் திட்டவில்லை. கோபப்பட்டு பேசவில்லை. பின் எதற்கு அழுகிறார்.

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்... ”

இரவு அக்காள் கேட்டார். “நான் இல்லைன்னா பாட்டி கூட படுத்துக்கவே இல்லை.”

“நான் அக்காளோடதான்.”

“அக்கா போயிட்டா?”

“எங்கே போறீங்க அக்கா?”

அக்காள் பதில் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டதும் பதில் கிடைத்தது. “எங்கேயும் இல்லை. சும்மா சொன்னேன்.”

அப்பாடா, அப்புவிற்கு நிம்மதி.

ஒரு நாள் மாலையில் பள்ளியிலிருந்து வந்த அப்புவிற்கு ஓட்டடை (ஊத்தாப்பம்) கிடைத்தது. அது வழக்கமில்லை. இப்படி பிரத்தியேகமான ஏதாவது கிடைத்தால் அதை சக்கனுக்கு முன்னால் போயி சாப்பிட வேண்டும் என்பது அப்புவிற்கு கட்டாயம். சக்கன் ஏங்குவதைப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஏங்குவான் அவன். அவன் காண எதையும் சாப்பிடக் கூடாது என அக்காள் சொல்லியிருக்கிறாள். இருந்தாலும். அவனுக்கு தார்க்ககுச்சி செய்யத் தெரியும். கருப்பி மாடு அவனை மட்டும் முட்டாது. அவன் நினைத்தால் கருப்பியின் கழுத்தை கட்டிக்கொள்ளவும் முடியும்! அடை சாப்பிடாமல் ஒளித்துக் கொண்டு, அக்காளின் கண்ணில் படாமல் அப்பு முற்றத்திற்கு வந்தான். சக்கன் போரிலிருந்து வைக்கோல் வலித்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல எனக்கு இத்துனூண்டு சாமீ என அவன் கெஞ்சவில்லை.

“எனக்கு பெரியம்மா தந்தாங்களே.”

“பொய்யு.”

“அவுங்க வந்தபோது நான்தான் டீத்தூளும் ஜீனியும் வாங்கீட்டு வந்தேன்.”

“யாரது வந்தது?”

“ஒரம்பரை, இதப்பாருங்க சின்னையா.”

சக்கன் வேட்டி மடிப்பை அவிழ்த்துக் காட்டினான். மூன்று துண்டுபீடிகள்.

“அந்த வந்த மொதலாளி இழுத்துப் போட்டது.”

பீடி வலிப்பவன் தகுதியானவனாகத்தான் இருப்பான். சங்கரன் நாயருக்கு அப்பளவட்டதில் முடியிருந்தாலும் பீடி வலிக்க முடியாது. அவர் கடந்த வாரம் வந்தபோது பாட்டியைப்போல வெறுமனே வெற்றிலையினை சவைத்து துப்பினார், கேவலம். எங்கே விருந்தினர்கள்? அக்காளைக் கண்டு விசாரிக்க உள்ளே ஓடினான். அக்காள் புழக்கடையில் இருந்தாள். பாட்டி கிழங்கின் தோல் சீவிக்கொண்டிருந்தார்.

“எங்கே பாட்டி விருந்துக்கு வந்தவுங்க?”

“என்ன விருந்துடா.. இங்கே யாரு வருவா விருந்துக்கு, காலனா?”

சக்கன் பெயர் சொல்லவில்லை. காலனெனில் காலன். எங்கே? அதுதான் அவனுக்கு தெரியவேண்டும்.

“டேய், கெக்கேப்பிக்கேன்னுட்டு எங்கிட்டே வந்தே அடிச்சு செவுனிய திருப்பீடுவேன்.”

ஓ, அப்படியென்றால் அவனுக்கும் கேட்க ஆசையில்லை. விருந்துக்கு ஒருத்தர் வந்ததற்கான பவுசு பாட்டிக்கு! பிறகு அதைப்பற்றி அவன் கேட்கவில்லை.

இரவு ஒரு தூக்கம் முடிந்து கண்விழித்தபோது மெத்தையில் பக்கத்தில் அக்காள் இல்லை. அறையில் விளக்கு எரிகிறது. அக்காள் பெட்டியைத் திறந்து வைத்து என்னென்னமோ பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அறை முழுதும் தாழமபூவின் மணம். அவன் உறங்கும்போது அக்காள் பக்கத்தில் படுத்திருந்தார். பிறகு எதற்கு எழுந்து போனார்? இரவில் விளக்கேற்றி வைத்து பெட்டியில் முண்டும் ரவிக்கையுமெல்லாம் திணித்து அடைத்துக் கொண்டிருப்பது ஏன்? சத்தமில்லாமல் எழுந்து சென்று அக்காளின் கழுத்தைப் பிடித்து பயம் காட்ட வேண்டும் எனும் எண்ணம் எழுந்தது அப்புவிற்கு. ஆனால் எழுந்திருக்க இயலவில்லை. கண்கள் மெதுவாக மூடின. இளவரசன் மாணிக்கக் கல்லை கண்டெடுத்த காடு மனதில் எழுந்தது. தாழம்பூவின் மெல்லிய வாசம். அவன் மீண்டும் கண்களை மூடினான்.

காலையில் அப்பு எழுந்திருக்கவில்லை. அக்காள் எழுப்பிய பிறகுதான் விழித்துக் கொண்டான். கிணற்றடியில் குளியல் முடிந்து கஞ்சி குடித்ததும் அக்காள் சட்டை போட்டு விட்டாள். தலை வாரும்போது அவர் சொன்னார் :

“பள்ளிக்கூடம் போகும்போது பாத்துப் போகணும் செல்லம், மாடும் கண்ணுமெல்லாம் வரும்.” இது அடிக்கடி சொல்வதுதான். அவன் சரி என்றான்.

“பசங்களோட சண்டை போடக்கூடாது.”

“ஊம் ஊம்.”

“பாட்டி உன்னை நல்லா பாத்துக்குவாங்க.”

“ஊம்.”

“பாட்டி சொல்பேச்சு கேட்டு குறும்பு பண்ணாம இருக்கணும்.”

“பாட்டி கெட்டவ. எனக்கு அக்காள் போதும்.”

“செல்லமே”, மூச்சு தடுமாற அவனை மார்புடன் அணைத்து இடிந்த குரலில் அவள் அரற்றினாள் “என் செல்லமே.”

அக்காள் அழுதுவிடுவாளோ என்பதுதான் அப்புவிற்கு பயமாக இருந்தது. ஆனால் இம்முறை அக்காள் அழவில்லை. அதனால் அவனுக்கு பரபரப்பு இல்லை. அப்பொழுது அவனுக்கு என்னமோ சொல்லத் தோன்றியது.

“அப்புறம், அக்கா..”

“செல்லம் அம்மான்னு கூப்பிடுடா”

அது அவனுக்கு பிடிக்கவில்லை.

“எதுக்கு அக்கா?”

“சும்மாதான்.”

“அதுக்கு அம்மா எங்கே, அக்கா?”

அக்காள் அதற்கு பதில் சொல்லவில்லை. அக்காளின் கைகள் மெதுவாக தளர்ந்தன. அவர் முகத்தை திருப்பி பேசாமல் நின்றார். சிறிது நேரம் கழித்து ஆணியிலிருந்து பையை எடுத்து கையில் கொடுத்து சொன்னார் “போயிட்டு வா செல்லம்.”

அப்பு ஓலைக்குடையை தோளில் வைத்து, அதன் வண்ணம் பூசிய கைப்பிடியில் பையை தொங்கவிட்டு, முற்றத்திற்கு இறங்கி நடந்தான். படி தாண்டியதும் அவன் கால் தடுமாறினான். இருந்தாலும் விழவில்லை. யாராவது பார்த்தார்களா என அவன் திரும்பிப் பார்த்தபொழுது கதவைப் பிடித்துக் கொண்டு விழித்துப் பார்த்தபடி அக்காள் நின்றிருந்தார். கோசாயிகளின் பார்வை அக்காளுக்கு எப்படிக் கிடைத்தது. அவன் பார்த்ததும் அக்காள் ஆமையைப் போல தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்..”

வயலின் மறுகரையினை அடைந்தபோது கொட்டமுத்தின் இலை பறித்து கொப்புளம் ஊதிக்கொண்டு குட்டிசங்கரன் நின்றுக்கொண்டிருந்தான். அவன் பையில் இரண்டு நெல்லிக்காயகள் இருந்தன. அதில் சிறியதை எடுத்து அப்புவிற்கு கொடுத்தான். சிறியதென்றாலும் நல்ல இனிப்பாக இருந்தது. தண்ணீரில்லாத ஒரு ஓடையும் ஒற்றையடிப்பாதையும் குன்றும் கடந்துதான் பள்ளிக்கூடத்தை அடைய வேண்டும். குன்றினைத் தாண்டும்போதுதான் பயமாக இருக்கும். நிறைய எருமைகளும் பசுமாடுகளும் இருக்கும். அதுகூட பரவாயில்லை. சில நாட்களில் மனைக்காவின் பொலிகாளையும் இருக்கும். அப்பு அதை பார்த்ததில்லை. பார்க்காமலே இருக்கட்டும் கடவுளே..

மதியம் நாராயணனின் ஸ்லேட் பென்சில் அப்புவின் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது. அவன் அழத்தொடங்கினான். வாத்தியாரிடம் போக இருந்தவனை குட்டிசங்கரன்தான் சமாதானம் செய்து வைத்தான். கேளு வாத்தியாரிடம் கேஸ் போனால் அப்புவிற்கும் கஷ்டம்தான். கேஸில்லாமல் செய்ய நாளைக்கு நாராயணனுக்கு ஒரு முக்கால் (காலணா) கொடுத்தால் போதும். அப்புவிற்கு நிம்மதியாயிற்று.

ஒரு முக்கால் அக்காளிடம் கேட்டால் கிடைக்காமல் இருக்காது.

மாலையில் வீட்டை அடைந்ததும் பையினை திண்ணையில் எறிந்து அவன் விளித்தான்.

“அக்கோவ்.”

பதில் சொன்னது அக்காள் இல்லை. பாட்டிதான்.

பாட்டி அடுக்களையிலிருந்து வெளியே வந்து கேட்டாள், “இதென்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா?”

“என்ன இன்னைக்கு இவ்வளவு அன்பு?” என திருப்பிக் கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை. அடி விழுந்தால்?

“எங்கே அக்காள்?”

“கஞ்சி தயாரா இருக்கு. சட்டையைக் கழட்டீட்டு வா.”

அவனுக்கு வேண்டியது கஞ்சியில்லை. அக்காள்தான். நாளைக்கு ஒரு முக்கால் கிடைக்கவில்லை எனில் மானம் போய்விடும்.

“அக்காள் எங்கே?”

அவன் வடக்கு அறைக்குள் போனான். அங்கே அக்காள் இல்லை. தாழம்பூவின் ஒரு மெல்லிய வாசனை அங்கே சூழ்ந்து நின்றது.

“அக்காள் எங்கே பாட்டி?”

“அக்காள் இங்கே இல்லை.”

“எங்கே?”

“அக்காள் ஒரு இடத்துக்கு போயிருக்கா.”

“எங்கே?”

“அக்காள்.. அக்காள் வருவா? வரும்போது அபபுவுக்கு பந்து வாங்கீட்டு வருவா.”

பந்து கொண்டு வரட்டும். இருந்தாலும், அவனையும் கொண்டுபோகாமல் அவனிடம் சொல்லாமல் ஏன் போனார்?

அப்புவிற்கு கோபமாக வந்தது. நல்ல ஒரு அக்காள். அக்காள் இப்படி பண்ணினாள் அல்லவா இனி அப்பு பேசமாட்டான். இந்த அக்காளை என்ன பண்ணலாம்? அக்காளின் பெட்டியில் ஒரு முக்கால் இருக்கும். ஒரு முக்காலென்ன இரண்டு முக்காலாக எடுக்க வேண்டும். அதற்கு திட்டினால் அப்போ இருக்கு.

ஆனால், பெட்டி எங்கே?

அவனுக்கு அழுகை வந்தது.

பாட்டி மீண்டும் அழைத்தாள்.

அப்புவிற்கு கஞ்சி வேண்டாம்.

அவன் முற்றத்திற்கு இறங்கினான். வில்வ மரத்தடியில் பெயர்ந்து நின்ற கல்லை எடுத்து வாசல்படிக்கட்டின் மீது பலம் கொண்டு எறிந்தான். பிறகு மேற்குப்பக்கம் நடந்தான்.

“அப்பூ, பாட்டி செல்லத்துக்கு கஞ்சி ஊற்றித் தர்றேன்.”

அப்புவிற்கு பாட்டியின் அனுசரணை வேண்டாம்.

அக்காள் வரட்டும். இரப்பர் பந்து கையில் தந்ததும் வீசி எறியவேண்டும். அவ்வளவுதான்.

பாட்டி மீண்டும் அழைத்தாள்.

அப்புவிற்கு ஏதும் வேண்டாம். அவனுக்கு கொஞ்சம் அழுதால் போதுமென்று தோன்றியது. அக்காளின் மீதான கோபத்தையெல்லாம் திரட்டி சத்தமாக அழ..

அக்காள் வரும்போது கவர் போட்ட பந்தும் மிட்டாயியும் கொண்டுவந்தால் என்ன செய்வது?

என்ன இருந்தாலும் சொல்லிக்காமல் போனாள் அல்லவா? இப்படி ஒரு அக்காள்.

“இந்த அக்காளுக்கு பைத்தியம்தான்..”

Comments

  1. அடுத்து தங்கைகாள் சிறுகதை மொழிபெயர்கவும்

    ReplyDelete
    Replies
    1. அக்காள் என்பது கதையின் மலையாளத் தலைப்புடன் ஒத்துப்போவதால் வைத்தேன். மிகவும் உறுத்தலாக உள்ளதா என்ன?

      Delete
  2. வாசிக்க வாசிக்க அப்பு அக்காள் பாட்டி ஆகியோர்
    மனதை உருக்கிக் கொண்டே இருந்தனர். கதையின் சஸ்பென்ஸ் மிகவும் வலுவாக உள்ளது. இனி
    அப்புவின் துயரம் கொடுமையானது.
    நீங்கள் கேட்டதுக்கு என் விடை தார்க்காவில் என்கிற சொல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மன்னிக்கவும். சரியான விடை இல்லை.

      Delete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...