Skip to main content

கலவரம் - ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம்

கலவரம்

அரவிந்த் வடசேரி

ஆங்கிலத்திலிருந்து

நாங்கள் மேம்பாலத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கிறோம், நானும் மோளியும், விளக்குகளை அணைத்து, இஞ்சினை ஓடவிட்டு, குன்றின் மீதமைந்த வீடுகளின் வரிசைகளை கார்க்கண்ணாடியின் வழியாக வெறித்தபடி.

மோளியின் மடி மீது ஸ்டியரிங் வீலின் மேல் சாய்த்து வைத்திருந்த கிளிப் வைத்த அட்டையில் அந்தத் தெருவின் முகவரிகள், மொத்தம் ஐம்பது, பக்கத்தில் தொடர்பான விபரங்கள்- பெயர், வயது போன்றவை, இன்டர்நெட்டிலிருந்து திரட்டியது அவளின் திருத்தமான கையெழுத்தில், அவள் புறநகரின் சிறந்த பள்ளியொன்றில்தான் படித்திருகக்கிறாள் என்பதன் ஆதாரமாக. இருட்டிக்கொண்டிருக்கிறது குளிரவும் தொடங்கியது, சில சம்பிரதாயமான - கடுமையான வாக்கியங்களைத் தவிர வேறெதுவும் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசவில்லை, அவளின் பக்கத்து கண்ணாடியை மேலேற்றியதற்காக அவளுக்கு நான் நன்றி சொன்னது போன்று, ஏதோ அவள் எனக்கு பெரிய உதவி செய்தது போல.

“யூ ஆர் வெல்கம்”, அவள் சொன்னாள், ஆனால் அவள் அதை பாதி தான் மூடினாள்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுமே தகராறு தொடங்கியது; முதலில் விவாதம், பிறகு கத்தத் தொடங்கினோம், அப்புறம் அவள் படுக்கையறையில் புகுந்து கதவினை கடுமையாக அறைந்து சாத்தினாள், பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக, உடையணிந்து, கிளம்பத் தயாராக வெளியே வந்தாள்.

இன்றைய குறிப்பிட்ட சண்டை நடக்கக் காரணம் அற்பமானது – சாப்பிட்ட பாத்திரத்தை சிங்கில் யார் போட்டு வைத்தது – ஆனால் அது ஒரு பெரிய பிரச்சனையின் அறிகுறி என்பது தெள்ளத்தெளிவு. மேலும், சமீபத்திய தேர்தல் நிலவரம் அதை பன்மடங்காக பெருக்கியது, அதன்படி எங்கள் வேட்பாளர் மூன்று புள்ளிகள் பின்தங்கி இருந்தார், தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தன.
“அந்தரங்கமும் அரசியல் தான்” மோளி எப்பொழுதும் சொல்வாள், நாங்கள் பிரிந்தால் அதற்கு அவள் பொறுப்பில்லை என்று சூசகமாக தெரிவிக்கிறாள்.

அதே நேரம், நகரத்தின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, எல்லாமுமே மோசமாகிக் கொண்டே போகிறது- பொதுப் போக்குவரத்து, தபால் பட்டுவாடா, குப்பை அகற்றுதல்- மேயருக்கு நன்றி, ஆறு முறை பதவி, இருந்தும், சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

”புள்ளி விபரம் இருக்கே” அவள் என்னிடம் சொல்கிறாள், ஆனால் அவள் குறிப்பிடும் புள்ளி விபரம் எது என எனக்குத் தெரியவில்லை.

அவள் தான் இந்த உறவில் அரசறிவியலில் பட்டம் பெற்றவர், எண்களை மென்று துப்பும் சமூகச் செயற்பாட்டாளர், நானோ பள்ளியின் விளையாட்டுச் சாம்பியன், மூன்று விளையாட்டுக்களில் சரித்திரம் படைத்தவன், அதற்காக சில நேரங்களில் என் பாட மதிப்பீடுகளையும் பலி கொடுப்பேன்.

சில நநாட்கள் நான் நடுராத்திரியில் எழுந்து பார்த்தால், என் பக்கத்தில் லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டு முகத்தில் தரவு விளக்கப்படம் ஒளிர அமர்ந்திருப்பாள் அவள். ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக இருந்த காலத்தில், இது எனக்கு பெரும் உடல் கிளர்ச்சியை உண்டாக்கும், அவளுடைய அர்ப்பணிப்பும் புத்திகூர்மையும் போர்வைக்கடியிலிருந்து சுடர் விடும். இப்போதெல்லாம் அவள் எப்பொழுதும் வேலையாகத் தான் இருக்கிறாள். வீணாக்க நேரமில்லை இப்பொழுது. அவள் சொல்வாள்,

” This mayor is ipso jure illegal”

(இந்த மேயர் சட்டப்படி சட்டவிரோதமானவர்). சட்ட வல்லுனர்களைப் போல இலத்தீன் மொழியெல்லாம் பேசுவாள்.’populace’ போன்ற ஆங்கில வார்த்தைகளையும் கூட சாதாரணமாகப் புழங்குவாள். அவள் பேசுவது ஏதோ அடிக்குறிப்புகள் நிறைந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வரைவது போலத் தெரியும். எல்லாம் முடிந்து பார்த்தாலும் எனக்கு ஏதும் விளங்காது.

“ இன்னும் இருக்கும் ஒரே கேள்வி”,அவள் சொல்கிறாள் ”மக்கள் தமது பிரச்சனைகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் வலிமைகொண்டு இருக்கிறார்களா என்பது மட்டும் தான்.”

“சந்தேகம் தான்”, நான் சொன்னேன்.

“நம்பிக்கை வேண்டும்”, அவள் சொன்னாள்.

இருட்டும் குளிரும் மேலும் அதிகமாயிற்று. பாலத்தினடியில் சருகுகள் சலசலக்கின்றன, மரங்கள் எதுவும் கண்ணுக்கு தென்படவில்லை எனினும்.

தரவுகளின்படி இதுதான் பிரச்சாரம் செய்ய தோதான நேரம் – முன்மாலைப் பொழுது, மோசமான வானிலை. மோளி கார் கண்ணாடியை முழுதுவதுமாக மூடினால் தேவலாம்போல் இருந்தது எனக்கு, ஆனால் அது ஒரே வேண்டுதலை இரு முறை கேட்பதாகி விடும். எங்களின் மௌனம் ஒரு இருத்தலியல் அனுபவமாக தீவிரம் பெற்றிருந்தது. அது காரின் உள்ளே நிலவிய அமைதி மட்டுமன்று – அது பரிச்சயமற்ற அந்தப் பகுதியிலிருந்து எங்களிடம் மிதந்து வரும் அமைதி, வளைந்து செல்லும் தெருக்களில் பரிச்சயமற்ற வீடுகள், பரிச்சயமற்ற வீடுகளில் பரிச்சயமற்ற உறுப்பினர்கள்.

நான் சட்டென்று அசிங்கமாக பாய்ந்து மோளியின் மடியிலிருந்த அட்டையைத் தட்டி விட்டு எங்களுக்கு நடுவில் இருந்த தடுப்பைத் தாண்டி எட்டினேன், என்னுடைய முழங்கை அவளது தொடையின் மீது உரசியது. நான் பொத்தானை அமுக்க கண்ணாடி சறுக்கி மேலேறியது. அவள் நிறைவாக சீறினாள். “அடுத்த முறை இன்னும் பொருத்தமாக உடை உடுத்து.” அவள் சொல்கிறாள்.

“இன்னுமொரு முறை இருக்காது” நான் சொல்கிறேன்.

இதுவும் அவளுக்கு பிடித்திருக்கிறது.

ஏ சியின் திறப்பிலிருந்து வெளியாகும் வெப்பக் காற்று என் தலையைச் சுற்றி வீசுகிறது, காருக்குள்ளே சிக்கிக்கொண்டு, கார்க் கண்ணாடியில் ஆவி படிய, புற இருளை திரையிடுகிறது.

நான் எனது இருக்கையின் சாய்மானத்தை ஒரு பல் பின்னால் நகர்த்துகிறேன், பிறகு இன்னும் பல பற்கள் பின்னோக்கித் தள்ளி கண்களை மூடும்பொழுது மனிதன் உருவாக்கிய ஒரு செயற்கை தடாகத்தின் கரையில் கடற்கரை நாற்காலியில் கிடப்பேன், உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவில் எங்கோ மிதந்துக் கொண்டு. என் திரிசங்கு நிலையில் இனிமையான கடந்தகாலத்தை நினைவுறுத்தியபடி கனவில் என்பது போல மோளியின் தொடை என் முழங்கையில் பதிந்ததை உணரமுடிகிறது. நான் காலை ஆறு மணிக்கு விழித்தெழுந்தது - ஒரு கப் கூழ் சாப்பிட்டேன், வால்மார்ட்டிற்கும் காலி இடத்திற்கும் நடுவில் வரிசையாக கடைகள் அமைந்த வணிக வளாகத்திலிருக்கும் உயர்தர உடற்பயிற்சி மையத்தில் வேலைக்கு செல்லும் முன். நல்ல வேலை தான், கூட்டிக்கழித்துப் பார்த்தால் : வார விடுமுறை, பண்டிகை நாட்களிலும் வேலை இல்லை, இலவச பல் மருத்துவமும். கடைசிச் சலுகை ‘மேயருக்கு நன்றி’ அல்லது கூட்டாளி பொதுஜனத்திற்கு பங்கு, நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து. நாள் முழுவதும் வருங்கால வாடிக்கையாளர்கள் என் அறையினுள் எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள், எங்கள் மையத்தில் உறுப்பினாராவது பற்றிய விபரங்கள் அறிய, முதல் மாதம் இலவசம். “நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள்”. நான் அவர்களிடம் சொன்னேன், அவர்களை மயக்க முயன்று, உடற்பயிற்சி உடையில் ஒரு விற்பனை பிரதிநிதி. நான் அவர்களது உடல் குறித்த அந்தரங்கமான விடயங்களை கேட்டறியும்பொழுது புகழ்மிக்க என் உயர்நிலைப் பள்ளி நாட்களிலிருந்த சட்டமிடப்பட்ட என் படங்கள் சூழ அவர்கள் எனது மேஜை முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். உயரம், எடை, bmi. ஒரு படத்தில் நான் எனது கால்பந்துச் சீருடையில். இன்னுமொன்றில் நகராட்சி அளவிலான போட்டியில் வென்ற கோப்பையினை ஏந்திக் கொண்டு. வேறு ஒன்றில் பந்து வீசத் தயாராக. என்னுடைய மேனேஜர் தான் சொன்னார் இந்தப் படங்களை மாட்டி வைப்பது விற்பனைக்கு உதவும் என்று. “மறைமுக விளம்பரம்”, அவர் சொன்னார். அவர் பள்ளி நாட்களில் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், எனக்குமுன் பணியிலிருந்த மேனேஜரைப் போன்று. பதினெட்டு வயதிலேயே எங்கள் துறையின் உச்சத்தை அடைந்துவிட்டோம் என்பதை நாங்கள் யாரும் உணரவில்லை.

திடீரென என்பக்கத்து கண்ணாடியில் ஓங்கித் தட்டுவதைக் கேட்டேன், கண்ணாடியே உடைந்து விடும் போல திடமாக, என் கண்கள் திறந்தன, இதயம் தறிகெட்டு துடித்தது, எனக்கு ஏற்கனவே தெரிந்தது உறுதியாகிவிட்டது – நாங்கள் மேம்பாலத்தின் அடியில் உட்காரக் கூடாது, அதுவும் விளக்கணைத்து, இஞ்சினை ஓடவிட்டு. ஈரம் படிந்த கண்ணாடியின் வழியாக சீருடை அணிந்த ஒரு ஆளின் மங்கலான நிழலுருவம் தெரிந்தது, என்னுடைய பார்வையில் பேருரு, எழடி உயரம் கொண்டு ஏதோ ராட்சதக் கதையிலிருந்து வெளிப்பட்டவர் போன்று, ஒரு காவல் அதிகாரி இல்லையெனில் துணை இராணுவம். என்பக்கத்துக் கண்ணாடியை உடனே கீழே இறக்க வேண்டுமாம், குளிர்ந்த காற்று என் முகத்தில் மோதுகிறது, கூடவே அவரது டார்ச் விளக்கிலிருந்து ஒளி என் பார்வையை குருடாக்குகிறது.

“ஏதாவது பிரச்சனையா சார்?” நான் சாய்ந்து படுத்தபடியே கேட்கிறேன்.

“எப்போ என்ன பண்ணணும்னு நான் சொல்லறேன்”, அவர் சொல்கிறார். நான் கார் கதவைத் திறக்கக் கூடாது, என் ஓட்டுனர் உரிமத்தைக் காட்ட வேண்டாம், நான் நிமிர்ந்து உட்காரவும் கூடாது.

“இங்கே என்ன பண்ணறீங்க?”, அவர் என்னிடம் கேட்டார்.

“நாங்க பிரச்சாரத்துக்கு வந்திருக்கோம்.”

“அப்படீன்னா?”

“நாங்க தேர்தலுக்காக வந்திருக்கோம்னு."

“தேர்தலுக்கு இன்னும் மூணு நாள் இருக்கே?”

“தெரியும்”, நான் சொல்கிறேன், “நாங்க பிரச்சாரத்துக்கு வந்திருக்கோம்.”

“அப்படீன்னா?”

நான் முதல் கட்டத்தில் இருந்து நகர முடியவில்லை, அங்கேயே இருப்பது தான் அவரது விருப்பமும் கூட.

நான் ஏதோ பொய் சொல்வதை கண்டுபிடித்ததாக அவர் நினைக்கிறார். காரின் பின்னிருக்கையில் இருக்கும் வால்மார்ட் பையில் என்ன இருக்கிறது என அவருக்குத் தெரியவேண்டும்.

“செங்கற்கள், ஒரு காலி மனையிலிருந்தவை”, நான் சொல்கிறேன்.

“காலி மனையிலிருந்த செங்கற்களை எதற்கு எடுத்தீர்கள்?” அவர் கேட்கிறார்.

நாங்கள் செங்கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கப் போகிறோம் என அவர் ஊகித்திருக்கலாம் – தேர்தலுக்கு முன்னான அரசியல் அச்சுறுத்தல்.

“நகரை சுத்தப்படுத்த” நான் சொல்கிறேன்.

அவருக்கு நான் சொல்வதை நம்பலாமா எனச் சந்தேகமாக இருக்கிறது. அவரது துப்பாக்கி இடுப்பில் தொங்குகிறது, கை அந்த உறையின் பக்கத்தில் இருக்கிறது. இதோ கார்க் கதவைத் திறந்து என்னை ஓடச் சொல்லப் போகிறார், கொஞ்ச தூரம் ஓட விட்டு நான் இந்த பாலத்தின் அடியிலிருந்து வெளியேறும் முன் என் முதுகில் சுடப் போகிறார்.

அதற்கு முன் அவர் காரினுள் டார்ச் அடிக்கிறார் – டாஷ் போர்ட், கிளிப் வைத்த அட்டை, இருக்கைகளுக்கு மத்தியிலான தடுப்பு, மோளியின் முகம்.

மோளி கத்துவது கேட்கிறது, ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டு பயந்து.

அவள் அனுமதியில்லாமலே காரிலிருந்து வெளியேறுகிறாள், அதிகாரியை நோக்கி ஓடுகிறாள், அந்த அதிகாரியும் ஓடி வர இருவரும் நெருங்குகின்றனர், அவளை கைகளால் சுற்றி அணைத்து கால்கள் தரையில் படாத உயரத்திற்கு தூக்குகிறார், அவள் இவ்வளவு உயரமாக வளர்ந்துவிட்டதை நம்பமுடியவில்லை என்கிறார், அவள் நாணுகிறாள், புறநகர் ஞாபகங்கள் முழு வீச்சில் திரும்புகின்றன. அவளது தாயும் தந்தையும் எப்படி இருக்கிறார்கள் என அவர் விசாரிக்கிறார், அவளது சகோதரன் நலம் தானே, அவள் எல்லாவற்றையும் சுருக்கமாக சொல்கிறாள். நாங்கள் பாலத்தின் அடியில் இருப்பதால் பேசுவதெல்லாம் மெல்லிய எதிரொலியோடு கேட்கிறது,

"அம்மா, அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா".

சின்னப் பெண் முழுவதும் வளர்ந்து நிற்பதைக் காண்கிறார் அவர். காலத்தின் போக்கில் வளர்ந்த உடலைக் காண்கிறார் அவர். இப்பொழுது என்னை சட்டை செய்யவே இல்லை அவர். பிரச்சாரம் என்றால் என்ன என்பதையோ வால்மார்ட் பையில் என்ன இருக்கிறது என்பதையோ சட்டை செய்யவில்லை. அவர்கள் ஞாபகங்களிலிருந்து மீண்ட பிறகு, தழுவி முடித்த பிறகு என்னுடன் கை குலுக்குகிறார்,

"தவறாக எண்ண வேண்டாம், சந்தித்ததில் மகிழ்ச்சி.”அவரது பிரம்மாண்ட கையுறை என் நிர்வாணக் கையை விழுங்குகிறது.

மோளி காரில் ஏறுகிறாள், கன்னம் சிவக்க புன்னகைத்து விடை கொடுத்து கையசைக்கிறாள், அவர் நடந்து சென்று இருளில் மறைவதை நாங்கள் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவள் காரின் கியரைப் போடுகிறாள். மெதுவாக ப்ரேக்கை விடுவிக்கிறாள்.

“கவலைப்படாதே”, அவள் என்னிடம் சொல்கிறாள், “இவனைத்தான் முதலில் தூக்குவோம்.”

வட்ட விளக்கப்படம் சொல்வது என்னமோ ஆகட்டும் இருட்டில் குளிரில் பிரச்சாரம் செய்வது ஒன்றும் உத்தமமான வேலையில்லை. இது சாப்பாட்டு நேரம், இது சோபாவில் சாயும் நேரம், இது தொலைக்காட்சி நேரம். நாங்கள் இருப்பது மலிவுவிலைக் குடியிருப்பு என்றழைக்கப்படும் இடத்தில், மிகவும் ஏழ்மையில்லை – மேயருக்கு நன்றி.

வீடுகளின் உச்சியிலிருக்கும் சேட்டிலைட் டி வி ஆன்டெனாக்களைப் பார்த்தால் சொல்லலாம். வீதியோரம் நிற்கும் கார்களைப் பார்த்தால் சொல்லலாம். நான் வளர்ந்த இடமும் இது போன்றதல்லாத ஒன்றல்ல – என் கையெழுத்தைப் பார்த்தே சொல்லலாம்.

துருப்பிடித்த வாசல்களில் இருப்பது ஆளுங்கட்சியின் பிரச்சாரச் சின்னங்கள், ஆரஞ்சும் மஞ்சளும், எழுத்தெல்லாம் தேவை இல்லை, இந்த வண்ணங்கள் எதைக் குறிக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும். சொல்லப் போனால் நாங்கள் எதிரியின் எல்லைக்குள் புகுகிறோம். எங்கள் வேட்பாளரல்ல அவர்களின் வேட்பாளர்.

முதல் நான்கு வீடுகளில் நான் அழைப்பு மணி அடித்தும் யாரும் வந்து திறக்க மினக்கெடவில்லை, உள்ளே டி வி யின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“எனக்குத் தெரியும் அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள்” மோளி சொன்னாள், நாங்கள் நகரும் முன் அவள் அட்டையில் ஏதோ குறித்துக் கொண்டாள்.

“என்ன குறிக்கிறாய்?” நான் கேட்கிறேன்.

“தரவு”, அவள் சொல்கிறாள்.

எட்டாவது வீட்டை அடையும்பொழுது நான் எனது உடற்பயிற்சி உடையில் நடுங்கிக் கொண்டிருந்தேன், அழைப்பு மணி அழுத்துகையில் எனது கட்டைவிரல் மரத்துப் போயிருந்தது, முதலில் இரு முறை, பிறகு மீண்டும் இரண்டு தடவை. மணியோசை வீட்டுனுள் பரவுவது எங்களுக்கு கேட்டது, நான் காருக்கு திரும்பிவிடலாம் எனச் சொல்ல நினைக்கையில் கதவு கொஞ்சமாக திறந்தது, சங்கிலி பிணைக்கப்பட்டு, இரண்டு முகங்கள் எங்களை முறைத்தன, கணவனும் மனைவியும்.

“என்ன விஷயம்?” மனைவி உடனே கேட்டாள்.

அவள் குரலில் புகார் தெரிந்தது. அவள் கவலைப்படுவது பார்த்தாலே தெரிந்தது. அவளக்கு தெரிந்த வரையில் நாங்கள் மிரட்ட வந்தவர்கள், எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள் இல்லை...

நாம் வாழ்வது சந்தேகத்தின் காலத்தில் தானே, நான் அவளை குறை சொல்லவில்லை. அப்படித் தான் இதற்கு முந்தைய தேர்தலிலும் அதற்கு முந்தையதிலும் நிகழ்ந்தது – அந்தப் பகுதி முழுவதும் எரிக்கப்பட்ட வேலிகளும் உடைக்கப்பட்ட கதவுகளும் திருடப்பட்ட டிஷ் ஆன்டினாக்களும் – அந்த இரண்டு தடவையும் அதனால் வாக்குப் பதிவை குறைக்க முடிந்தது, கொஞ்சமாவது எனினும்.

“உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?”, மோளி கேட்கிறாள், மலர்ந்த சிரிப்புடன், அவளக்கு மனப்பாடமாகியிருந்த திரைக்கதையிலிருந்து முதல் வரியை வாசிக்கிறாள். ஓ! மனைவிக்கு எங்களிடம் பயம் எதுவுமில்லை, கணவனுக்கும் தான்,

“இதுக்கெல்லாம் நேரமில்லை எங்களுக்கு” அவன் சொல்கிறான்.

“நம்ம ஊரை நல்லதா மாற்ற கொஞ்சம் நேரம் இருக்கா?”, மோளி கேட்கிறாள்.

“ஊருக்கு என்ன குறை?” அவனுக்குத் தெரியணும்.

நான் ஏதோ அவனை திட்டியது போல என்னை முறைத்துப் பார்க்கிறான். அவன் சங்கிலியை எடுத்து எங்களை உள்ளே அழைக்க மாட்டானா என நான் ஏங்கிக் கொண்டிருந்தேன், அங்கே வசதியா அரசியல் பேசலாமே.

ஆனால் மோளியிடம் செயல்திட்டம் தயாராக இருந்தது: சாலையில் பள்ளங்கள், தேங்கி நிற்கும் சாக்கடை, தடைபடும் செல் சேவைகள் என, இது வெறும் ஆரம்பம் தான்.

“அவுங்களுக்கு நம்ம நோட்டீஸ் கொடுங்க” அவள் என்னிடம் சொல்கிறாள்.

கதவின் இடைவெளி வழியாக நான் நுழைக்கும் சிற்றேட்டில் எங்களது வேட்பாளர் ஆறு ஆட்சிக் காலங்களாக தரிசாகக் கிடக்கும் ஒரு காலி நிலத்தின் ஊடே நடந்து செல்லும் படம் போட்டிருக்கிறது – நம் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் பல காலி மனைகளில் ஒன்று – சட்டைக் கைகளை சுருட்டி மேலேற்றியபடி, அனைவரையும் ஈர்க்கும் “நம் நகரத்தை மீட்போம்’ கவர்ச்சி முழக்கத்தின் மேலாக பதியப்பட்டிருக்கிறது அவரது முகம்.

அந்த மனைவி அரைமனதுடன் சிற்றேட்டினை பிரித்துப் பார்க்கிறாள். எங்களது வேட்பாளரின் பத்தம்சத் திட்டம் தெளிவாகக் கிடக்கிறது, அவரது அரசியல் சாதனைகள், மாநகரத்தில் அவரது பழம்பெரும் குடும்ப வரலாறு, ஐந்து தலைமுறைகளாக, அணை கட்டுவதற்கும் முன், ஏரி உருவாக்கப்படுவதற்கும் முன்னரே.

“கரண்ட் பிரச்சனைக்கு என்ன பண்ணப் போறாரு?” கணவன் கேட்கிறான்.

மின்சாரப் பிரச்சனையை சரி பண்ணத்தான் போறாரு. கண்டிப்பாக. குப்பை சேகரிப்பதையும். எல்லாவற்றிற்கும் ஆமாம் சொல்கிறாள் மோளி. இல்லை என்பதே இல்லை.

“கூடுதல் வரி குறித்து என்ன செய்வார்?” மனைவியின் கேள்வி.

இது மோளி எதிர்பாராதது. அவளுக்கு திக்குகிறது, பெரிதாக முழிக்கிறாள். அவள் கூடுதல் வரி குறித்து நினைக்கவில்லை, அவள் நகர்புறத்தைச் சார்ந்தவள்.

கூடுதல் வரி கிடையாது, அவள் உறுதியளிக்கிறாள், ஆனால் அது தவறான விடை. கூடுதல் வரி உண்டு. ஆனால் காலம் கடந்து விட்டது, பின் வாங்க முடியாது இப்பொழுது. அவர்களுக்கு கேட்டவரைக்கும் போதும். ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். நாங்கள்வேறு குளிர்ந்த காற்றை வீட்டிற்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். கணவர் நோட்டீஸை திருப்பித் தருகிறான், விரல் நுணியால் பற்றி.

“அது உங்களுக்கு தான். வெச்சுக்கோங்க”, நான் சொல்கையில் சிறு வெள்ளை புகைமூட்டங்களாக வெளியேறுகிறது காற்று.

“வேண்டாம். நன்றி.”

காருக்கு திரும்பியதும் நான் கைகளை ஏ சி திறப்பின் முன் காட்டி தேய்த்துக் கொள்ளும்போது மோளி அட்டையில் குறித்துக் கொண்டிருந்தாள்.

“கூடுதல் வரி ....த்தா”, நான் சொன்னேன். விரக்தியின் சிரிப்பு.

மோளி அட்டையை ஸ்டியரிங் மீது வீசி அடித்தாள், ஹாரன் சத்தம் எழுப்பியது.

“நீ இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணணும்னு எதிர்பார்க்கறேன்டீ,மோளீ” இந்த மாலையில் இரண்டாவது முறையாக கத்துகிறாள் மோளி.

“ஷ்ஷ்ஷ், பக்கத்திலே இருக்கறவுங்க கேக்கப் போறாங்க.”

“நல்லா கேக்கட்டும்”,

அவள் சொல்லும்போது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் எங்களைக் கடந்து நடந்து செல்கிறார்கள், வால்மார்ட் பைகளை தூக்கிக் கொண்டு, ஆனால் அவர்கள் எங்களை கவனிக்கவில்லை, ஒரு பொருட்டில்லை, எல்லாம் அவர்கள் ஏற்கனவே கேட்டது தான். மோளி அவளது சிகப்புப் பேனாவால் என் விரைத்த முகத்தை சுட்டுகிறாள். அவளது முறைப்பு கூர்மையாகி கொலைவெறி கொண்டு குற்றம் சாட்டுவதாக இருக்கிறது, அதிகாரியின் கையிலிருந்த டார்ச் விளக்கின் ஒளியைவிட மோசமானதாக.

நாங்கள் ஒருவருக்கொருவர் சரியானவர்கள் இல்லை என்பதை வெகு காலம் முன்னரே உணர்ந்திருக்க வேண்டும் என்பேன் நான், எங்களது முதல் சந்திப்பிலேயே, 'ஆப்பிள் பை' யில் டின்னர் சாப்பிட, என் தேர்வு தான், ஸ்டார்பக்கிற்கும் காலிமனைக்கும் அடுத்தது, ஒரு பெரிய மேஜையின் இருபுறமும், மிகப் பெரிய இடைவெளியை உணர்ந்தபடி, இப்பொழுது இருப்பதிலிருந்து பெரிய வித்தியாசமின்றி.

அப்பொழுதே மேயரின் மூன்றாவது ஆட்சிக் காலம், ஆனால் உள்ளாட்சி அரசியல் குறித்த எனது அறிவு எவ்வளவு குறைவானது என்பது பற்றி அவள் கண்டுகொள்ளவில்லை. எனக்கு ஆட்சியாளரின் பெயர் மற்றும் முக்கிய தேதிகளெல்லாம் தெரிந்திருந்தன, நகராட்சி உருவான நாள் போன்றவை, பள்ளிகளில் கற்பிக்கப்படும் அடிப்படைகள், புறநகர் பள்ளியாக இல்லாவிட்டாலும் கூட, ஆனால் அதையும் தாண்டினால் என் நிலைப்பாடு உதாசீனத்திற்கும் அறியாமைக்கும் இடைப்பட்டதாக இருந்தது. மோளி பேசும்பொழுது ‘இன்ன பிறர்’, ‘தொடர் நிகழ்வு’ போன்ற வாரதைகள் எல்லாம் பயன்படுத்துவாள். நான் பேசினால் உயர்நிலைப்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் பற்றித்தான் பேசுவேன். நாங்கள் ரெட் ஒயின் சாப்பிட்டுக் கொண்டே இருந்ததில் எங்களுக்கிடையேயான பொருத்தம் கூடியது, ஆப்பிள் பை யின் மேஜை சுருங்கியது, மேஜைக்கு அடியில் அவளது கால் முட்டி என் முட்டியில் பட்டது.

‘அந்தரங்கமும் அரசியல் தான்’, அவள் சொன்னாள்.

நாங்கள் மௌனமாக அப்பகுதியை சுற்றி வந்தோம், கார் குழிகளில் விழுந்து எழும் ஓசை மட்டுமே. அதிர்ஷ்டவசமாக அடுத்த நான்கு வீடுகளிலும் உடனடியாக கதவு திறக்கப்பட்டது, ஆனால் பிறகு நடந்ததெல்லாம் வழக்கம்போலத்தான் : கருத்து விளக்கம், சிற்றேடு திருப்பியளிப்பு.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு பனி பெய்யத் தொடங்குகிறது, காற்று ஏரி மொத்தத்தையுமே என் முகத்தில் வீசி அடிப்பதாக உணர்கிறேன். இம்முறை கதவு திறந்தது எங்கள் வயதினையொத்த இளம் தம்பதியராக இருந்தனர், படுக்கப் போக தயாராக இரவு உடை அணிந்திருந்தனர், மோளிக்கு ஏதாவது சொல்ல வாய்ப்பு கிட்டும் முன் நான் உடனடியாக வேட்டையினைத் தொடங்குகிறேன்,

”உங்களுக்கு நம் நகரத்தினை மீட்டெடுக்க வேண்டுமா?”, நான் கேட்கிறேன்.

நான் திரைக்கதையிலிருந்து விலகிச் செல்கிறேன், விற்பனை பிரதிநிதியல்லவா, நிலமையை கணித்து, வாடிக்கையாளரின் பாஷையில், என் மேலதிகாரி கற்றுத் தந்ததைப் போல.

“ஆமாம்”, அவர்கள் சொல்கிறார்கள். “மீட்க வேண்டும்!” அவர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் கேட்க விரும்புகிறார்கள்.

நான் அவர்களிடம் எங்களது வேட்பாளரின் படம் பதித்த சிற்றேட்டினை அளித்து தன்னம்பிக்கை தொனிக்க தொடர்கிறேன்,

“உண்மையில் அவர் இந்தப் படத்திலிருப்பதைவிட வயதானவர்”.

நிச்சயமாக அது அவர்களுக்கு பிடித்து விட்டது, ஏமாற்றுவதை நேர்மையாக ஒத்துக் கொள்வது. நான் அந்த உயர்தர உடற்பயிற்சி மையத்தில் திறமையாகச் செய்வது தான் இது, முதலில் இடித்துரைப்பது பிறகு மேலே தூக்குவது.

நான் மின்சாரப் பிரச்சனையிலிருந்து ஆரம்பித்தேன், ஒளி மங்கும் விளக்குகள், வார விடுமுறை நாட்களின் மின்னழுத்தக் குறைப்பு, நான் தொடங்கியதுமே அவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்த மாபெரும் மின்தடைக் கதைகளை பகிர்ந்தனர், இன்னமும் அனைவரும் பேசிக் கொண்டிருப்பது, இரண்டு மாதங்கள் மின்சாரமும் தண்ணீருமின்றி அல்லல் பட்டது.

“டி வி இல்லை”, நான் சொல்கிறேன்.

நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறோம், இரவு உடை அணிந்த அந்த இணையரும் நானும், நான் கூடுதல் வரி பற்றிய எங்கள் வேட்பாளர் என்ன செய்யப் போகிறார் என விளக்கும் முன்னரே அவர்கள் முடிவுக்கு வந்து விட்டனர். அவர்கள் என்னுடைய விரைத்துப் போன கையைப் பற்றி குலுக்குகின்றனர். சிற்றேட்டினை தங்களிடமே வைத்துக் கொள்கின்றனர்.

அடுத்த வீட்டிலும், அதற்கும் அடுத்த வீட்டிலும் அப்படியே. நான் தோல்வியுறும் போதெல்லாம் மோளி குறித்துக் கொள்கிறாள். நாங்கள் அட்டையில் இருந்த கடைசி முகவரியை அடைந்த போது பத்து மணி, தரையில் இரண்டு அங்குலம் கனத்தில் பனி மூடியிருகக்கிறது, கேன்வாஸ் ஷூ அணிந்திருந்த என் கால்கள் ஈரத்தில் ஊறிக்கொண்டிருக்கின்றன.

உள்ளே மணியடிப்பது எங்களுக்கு கேட்டது, மோளி மீண்டும் அடிக்கும்படி சொன்னாள், ஆனால் அதற்குள் காலடியோசை நெருங்கி வருவது கேட்டது, பிறகு கொஞ்சமாக திறந்தது கதவு, அங்கே பார்த்தால் ப்ரைஸ், எவ்வளவோ பேர் இருக்க, என்னை உற்றுப் பார்த்தபடி, உயர்நிலைப் பள்ளியிலிருந்த ப்ரைஸ், மாரிசன் மேடத்தின் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவன், அங்குதான் பின் வரிசையிலிருந்து நான் சும்மா சீண்டிக்கொண்டிருப்பேன் அவனை, நான்தான் பெரிய விளையாட்டு வீரனாயிற்றே.

“என்ன விஷயம்?”, அவன் கேட்கிறான்.

இன்னமும் ரொம்ப ஒல்லியாகத்தான் இருக்கிறான், சங்கிலி எடுக்காமலேயே இடுக்கு வழியாக வந்து விடுவான் போல.

“ப்ரைஸ்”, நான் சொல்கிறேன், “நான் தான் பா.”

அவனுக்கு என்னைத் தெரியவில்லை. கண் கண்ணாடிக்கு பின்னால் இருந்து முழிக்கிறான்.

“என் பெயர் எப்படித் தெரியும்?” அவன் என்னைப் பார்த்து கேட்கிறான்.

“இந்த அட்டையில் இருக்கிறது” மோளி சொல்கிறாள்.

“ஸ்கூல்லிருந்தே தெரியுமே” நான் சொல்கிறேன்.

பனி என் முகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது, ஏதோ ஒரு கணத்தில் அவன் நினைவு என்மேல் குவிந்து விட்டது போலும், அவன் சங்கிலியை விலக்குகிறான், அது ஒரு பக்கத்தில் சரிந்து தொங்குகிறது, கதவை விரியத்திறக்கிறான், இப்பொழுது நான் கடந்தகால நினைவுகளில் மூழ்குகிறேன், ப்ரைஸ் என்னை இறுக்கி அணைக்கையில் அவனது மெலிந்த கரங்கள் முறிந்து விடுவது போல உணர்கிறேன்.

மாரிசன் மேடத்தின் வகுப்பு குறித்த நல்ல நினைவுகளையே அவன் கொண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது, நான் அவனது பின் கழுத்தில் பென்சில் கொண்டு குத்தியதை எல்லாம் மறந்து. அதெல்லாம் சும்மா விளையாட்டு தான் இல்லையா? இப்போழுது அதையெல்லாமா ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

அவன் என்னை வீட்டினுள் நடத்துகிறான், இப்பொழுது வெதுவெதுப்பு என்னைப் பொதிகிறது – மேயருக்கு நன்றி. அவனது முன்னறை பெரும்பாலும் காலியாக இருந்தது - ஒரு சோபா, ஒரு நாற்காலி, டி வி இல்லை- ஒளிர்ந்துக்கொண்டிருந்த ஒற்றை விளக்கு வெறுமையான சுவர்களின் மீது மங்கலான வெளிச்சத்தை சிந்திக் கொண்டிருந்தது. ப்ரைஸ் அவனது முதல் மதிப்பெண்களைக் கொண்டு ஏதாவதை அடைந்திருந்தானென்றால் அது அவனது வீட்டில் புலப்படவில்லை. சோபாவில் உட்கார்ந்தபோது அது தொங்கிப் போயிருந்தது. மோளியும் உட்கார்ந்ததும் நாங்கள் கிழித்துக் கொண்டு உள்ளே போய் விடுவோம் போல் இருந்தது.

என் ஷூவிலிருந்த பனி உருகத் தொடங்குகிறது, அது தரை விரிப்பில் படர்ந்துக் கொண்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் ப்ரைஸ் அதை கவனிக்கவில்லை. அவன் அந்தக் கால இனிய தருணங்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறான், என்னுடைய நல்ல தருணங்களை, ஆண்டுமலர் முழுவதும் என் முகமாக இருந்தது, நகரின் விளையாட்டரங்கில் இறுதிப் போட்டியில் விளையாடியது, மூவாயிரம் பார்வையாளர்கள், மேயர் உட்பட, அது அவரது இரண்டாவது ஆட்சிக்காலம், வாக்குறுதிகள் புதுக்கருக்கோடு இருந்தன.

“என்ன விளையாட்டு?“ மோளி அறிய விரும்பினாள்.

“பேஸ் பால்” ப்ரைஸ் சொல்கிறான்.

“எனக்கு பிடிக்காத விளையாட்டு பேஸ் பால்”, மோளி சொல்கிறாள்.

மேயர் பற்றி பேச்சு வந்ததும் அவர் போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறைக்கு வந்து வாழ்த்தியதை அவர்களுக்குச் சொன்னேன், எங்களுடைய அணியின் தொப்பி அணிந்துக் கொண்டு, செயற்கை ஏரியின் மீது மறையும் சூரியனின் படம் பொறித்தது.

“விளம்பரம்” மோளி சொன்னாள்.

மேயர் ஒவ்வொருவருடனும் கை குலுக்கினார்- அணித்தோழர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி முதலவர்- இறுதியாக என்னிடம் வந்த போது எனக்கு கை அசைக்கவே முடியாதது போல இருந்தது, நான் ஆறு இன்னிங்ஸ் பந்து வீசியிருந்தேன். அவர் என் பக்கமாக சாய்ந்து எங்களது தொப்பிகளின் மேல்மறைப்புகள் தொட்டுக்கொள்ள கிசுகிசுத்தார், அவர் என்னிடம் மட்டும் தான் அப்படி சொல்லியிருப்பது போல,

“உன்னைப் போன்றவர்கள் தான் இந்த நகரத்திற்கு அவசியம் மகனே”.

ப்ரைஸ் தலையாட்டி மறுக்கிறான். “எனக்கு இந்த மேயரை பிடித்ததே இல்லை”,

இதற்காகத் தான் மோளி காத்துக் கொண்டிருந்தாள், அது சரி தான். அவள் மிகுந்த சிரமப்பட்டு நகர்ந்து சோபாவின் விளிம்பிற்கு வருகிறாள், ப்ரைஸின் கண்ணாடியைப் பார்த்து பேசுகிறாள், கருத்தொருமித்தவர்கள், மின்சாரப் பிரச்சினை குறித்து, குப்பை சேகரப்பின் போதாமைகள் குறித்து, ப்ரைஸ் ஒவ்வொரு எட்டிலும் அவளுக்கு இணையாக நடக்கிறான்- குடிநீர் குழாய்கள், பொதுப் போக்குவரத்து. ஆமாம் ஆமாம் ஆமாம் அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள், முற்றிலும் வழிமொழிதல்.

ஒரு காலத்தில் வேறு எங்காவது குடி போவதாக எவ்வளவு கனவு கண்டான் எனச் சொல்கிறான் ப்ரைஸ், முடிந்தால் ஏரிக்கு மறுபுறம் இருக்கும் நகரத்திற்கு. பதிலாக இங்கு வால்மார்ட்டில் தான் வேலை செய்கிறான், அவனது முதல் மதிப்பெண்கள் அவ்வளவு தூரம் தான் இட்டுச் செல்லும் இங்கு. எதேச்சையாக என் உடற்பயிற்சி நிலையத்தின் வணிகவளாகத்திற்கு பக்கத்தில் இருக்கும் வால்மார்ட் தான், இந்த மாலையின் மேலும் ஒரு ஆச்சரியம்.

“நேரம் கிடைக்கும்போது வாயேன் “ நான் சொல்கிறேன். “உனக்கு முதல் மூன்று மாதங்களுக்கு பாதிக் கட்டணம் வாங்கித் தருகிறேன்.”

இதாவது நான் செய்ய வேண்டும் அவன் தேர்வுகளில் காப்பியடிக்க உதவியதற்கு. அவனைச் சீண்டியதற்கு பரிகாரமாகவும் கொள்ளலாம்.

“எனக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காது” அவன் சொல்கிறான், ”ஒரு வேளை செய்தாலும் செய்யலாம். ” அவன் அநேகமாக செய்ய மாட்டான்.

மோளிக்கு எங்களின் விசாரிப்புகளும் விளையாட்டுப் பேச்சும் போதுமென்றாகியிருக்கும். அவள் பேச்சை திசை திருப்ப முனைகிறாள்.

“நமது நகரத்தை மேம்படுத்த உங்களுக்கு நேரம் இருக்கிறதா?”

அவள் ப்ரைஸை கேட்கிறாள், சிற்றேட்டினை கையளிப்பதற்கு எனக்கான குறியீடு அது, ஆனால் நான் கொடுப்பதற்கு முன் ப்ரைஸ் எனக்கு ஒரு சிற்றேட்டினை தருகிறான், அது எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை – மூன்றாவது வேட்பாளருக்கான சிற்றேடு அது, கொஞ்சமும் வெற்றிவாய்ப்பற்ற, அனைவருக்கும் அனைத்தையும் சிக்கலானதாகச் செய்யும் ஒருவர்.

“நகராட்சி முதலில்” அதில் நீலத்தில் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கிறது – அதன் பொருள் என்னவோ ஆகட்டும்.

தங்களது வேட்பாளர் எதை என்ன செய்யப் போகிறார் எனச் சொல்ல இப்பொழுது ப்ரைஸின் முறை, கூடுதல் வரி, குடிநீர்க் குழாய் பிரச்சனை என நகரின் அனைத்துக் குறைகளுக்கும் அவரிடம் திட்டம் உண்டு.

அவருடைய திட்டங்கள் அல்ல எங்களுடையது. மோளி எங்கள் திட்டங்களை விளக்க முற்படுகிறாள், ஆனால் எங்களது திட்டங்களை ப்ரைஸ் முன்னமே அறிந்து வைத்திருக்கிறான். எங்களது திட்டங்கள் குறித்து எங்களுக்கு தெரிந்ததைவிட அதிகமாக அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

“ஒவ்வொன்றுக்கும் அவரிடம் ஒரு திட்டம் இருக்கிறது”, ப்ரைஸ் சொல்கிறான்.

“நாம் ஒத்துக்கொள்ள முடியாது என ஒத்துக்கொள்வோம்”, மோளி சொல்கிறாள்.

அவள் அந்த தொய்ந்த சோபாவிலிருந்து எழுந்து அந்த சிற்றேட்டினை திருப்பிக் கொடுத்தாள், அதிலிருந்த 12 அமிசத் திட்டம் உட்பட, எங்களைவிட இரண்டு திட்டங்கள் அதிகம்.

“அது நீங்களே வைத்துக் கொள்ளத்தான்”, ப்ரைஸ் சொல்கிறான்.

“வேண்டாம், நன்றி” மோளி சொல்கிறாள்.

வாயிலை கடந்ததும் பனி விழுவது கடுமையாகியிருக்கிறது, எரியிலிருந்து வீசியடிக்கும் காற்றும் தான், மோளி அட்டையில் குறித்துக் கொள்கிறாள்.

“இவனையெல்லாம் பேசி ஜெயிக்க முடியாது”, அவள் சொல்கிறாள்.

இரவு முழுவதும் பனி கொட்டுகிறது, மறுநாளும் தொடர்கிறது, அதைவிட மோசமானது எங்களை வந்தடைந்த செய்தி : எங்களது வேட்பாளர் ஒரு புள்ளி தான் முன்னேறியிருக்கிறார், அதைவிடக் குறைவாகவும் இருக்கலாம், எந்தத் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடுகிறோம் என்பதைப் பொறுத்து, மூன்றாவது அணியின் வேட்பாளர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மோளியும் நானும், இருவரில் யாரோ ஒருவர் மீண்டும் சிங்கில் ஒரு பாத்திரத்தை போட்டு வைத்திருந்த போதிலும் நாங்கள் கத்தவோ கூச்சலிடவோ இல்லை. அதை பெரிதுபடுத்த எங்களுக்கு மனமிருக்கவில்லை, எந்தக் கதவும் அறைந்து சாத்தப்படவும் இல்லை. வாக்குவாதம் செய்யும் நிலையை தாண்டிவிட்டோம். நாங்கள் இறக்கத்தில் போய்க் கொண்டிருக்கிறோம் போல, வெளிவாயிலை நோக்கி, தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும்போது.

நிலைமையை மேலும் மோசமாக்க முனிசிபாலிட்டியின் வண்டி வந்து தெருக்களில் இருந்த எட்டு அங்குல பனியினை அகற்றியது. சாதாரணமாக இது நல்லது தான், ஆனால் மோளியின் பார்வையில் இது மேயரின் தந்திரம், தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளவும் அனைவரையும் வாக்களிக்கச் செலல வைக்கவும். இம்முறை வாக்காளர்களுக்கு இடையூறு எதுவும் இல்லை.

“வெற்றி பெறுபவர்கள் தான் தெருவில் பனியினை அகற்றுவார்கள்”, மோளி சொல்கிறாள்.

என்னைப் பொறுத்தமட்டும் காலைநேர நகரத்தினூடே வேலைக்கு காரோட்டிச் செல்வதில் சிக்கலில்லை, ஹீட்டரை உச்சத்தில் வைத்து, கார் கண்ணாடிகளை முழுவதும் மேலேற்றி, வெற்று மனைகள் காலியாயிருக்க. அரை மணிநேரத்திற்கு பிறகு நான் உடற்பயிற்சி நிலையத்தினை அடைந்தபோது என் அலுவலக அறையில் ப்ரைஸ் எனக்காக காத்துக் கொண்டிருப்பதை காண்கிறேன், வால்மார்ட் உடையணிந்து– “Proud Walmart Associate” எனப் பொறித்த ஒரு நீல நிறக் கோட்டு. அந்தச் சீருடையில் அவன் இன்னும் ஒல்லியாகத் தெரிகிறான்.

“என் மனசு மாறிடுச்சு” அவன் சொல்கிறான்.

தேர்தல் குறித்தில்லை அவன் சொன்னது; உடற்பயிற்சி செய்வது பற்றித்தான். நாங்கள் எல்லாம் பேசி முடித்துவிட்டது போல அவன் என் கையினைப் பற்றி குலுக்குகிறான், இன்னும் கொஞ்சம் அழுத்தி நெரித்தால் நொறுங்கி விடும் போல் தெரிகின்றன அவன் விரல்கள்.

“நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள்” நான் எனது வழக்கமான முதல் வரியில் சகஜமாக ஆரம்பிக்கிறேன்.

நான் அவனை இருக்கையில் அமரும்படி வேண்டுகிறேன். அருந்த வைட்டமின் நீர் அளிக்கிறேன். அவனை அசர வைக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அவனுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

“நான் லஞ்ச் பிரேக் ல வந்திருக்கேன்”, அவன் சொல்கிறான். காலை ஒன்பது மணிக்கு லஞ்ச்.

நான் விற்பனை அறிமுகப் படலத்தை தவிர்த்து நேரடியாக மேலே அழைத்துச் செல்கிறேன், பார்பெல், கெட்டில்பெல், தரைக்கும் கூரைக்குமான கண்ணாடிகள் எல்லாம் காட்ட. சிலர் உடற்பயிற்சி செய்கின்றனர், கவர்ச்சியான வேர்த்த உடல்கள் – இது போன்ற விளம்பரம் விலை கொடுத்தாலும் கிடைக்காது.

“எங்களிடம் எல்லாம் இருக்கிறது”, நான் சொல்கிறேன். என் கையினை பெரிதாக காற்றில் வீசுகிறேன், அது அங்கு இருக்கும் ஆட்களையும் அடக்கியதாக இருக்கிறது.

நான் மிருதுவான விற்பனை முனைப்பாக குறைந்த கட்டண A லெவல் சேவையிலிருந்து தான் தொடங்குகிறேன். வேண்டுமென்றே அவனை நீராவிக்குளியல் அறையின் முன்பாக வழி நடத்திச் செல்கிறேன். எனக்கு முன்பாக அவன் நடக்கிறான், அவனது பின்புறத்திலும் வால்மார்ட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது, அஸ்ட்டெரிஸ்க்கிற்கும் புல்ஸ் ஐக்கும் நடுவாந்திரமாக.

“நீராவிக்குளியலும் இருக்கா?” அவன் கேட்கிறான்.

“அது லெவல் B” நான் சொல்கிறேன்.

அவன் விலைப்பட்டியலில் படிப்படியாக ஏறி உச்சத்தை எட்ட காத்திருக்கிறேன் நான் – சலவையும், அழகு நிலையமும் உட்பட.

“ஷேவிங் கிரீம் ஃப்ரீ யா ?”

கீழ்தளத்தில், என் அலுவலகத்தில், கம்ப்யூட்டரிலிருந்து நான் படிவங்களை எடுக்கிறேன், அடிப்படை கேள்விகளைத் தவிர்த்து.

“உன் நோக்கம் என்ன?” நான் கேட்கிறேன்.

அதே கேள்வியை அவன் என்னிடமும் கேட்கலாம்தான்.

அவனுக்கு வலிமை வேண்டும். செயல் திறன் வேண்டும்.

“வடிவான உடல் வேண்டாமா?” நான் கேட்கிறேன்.

இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்துக்கொள்ள அவன் விரும்புகிறான்.

“அதையெல்லாம் நாம பாத்துக்கலாம்”, நான் சொல்கிறேன், என்னமோ நாங்கள் இருவரும் சேர்ந்து அதைக் கணக்கிடப் போவது போல, செலவு எனக்கு ஏற்கனவே தெரியும்.

அவன் தடுமாறுவது தெரிகிறது – அவனின் வாழ்க்கைக் கதை – லஞ்ச் பிரேக் முடியப் போகிறது. எங்கள் தலைக்கு மேலே ஏரோபிக் வகுப்பு நடக்கும் சத்தம் கேட்கிறது, இருபது ஜோடி பாதங்கள் ஒரே போல தரையில் பதியும் ஒலி.

இந்த நேரம்தான் நான் வலுவான விற்பனை முனைப்பை மேற்கொள்ளுவேன், எனக்கு கமிஷனும் உண்டு, டெஸ்டாஸ்ட்ரான் குறித்து அவனிடம் சொல்கிறேன், எப்படி உடற்பயிற்சி டெஸ்டாஸ்ட்ரான் சுரப்பை அதிக்கப்படுத்துகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன, எப்படி டெஸ்டாஸ்ட்ரான் உங்களது குறிக்கோள்களை அடைய உதவுகிறது.

“தரவுகளைப் பாருங்கள்”, நான் சொல்கிறேன். அவன் தலையாட்டுகிறான், நான் சொல்வதில் அர்த்தம் இருப்பதாக, ஆனால், உண்மையைச் சொன்னால், இந்த நனமைகளையெல்லாம் அவன் அடைவான் என்ற நம்பிக்கையில்லை எனக்கு.

அநேகமாக சந்தா செலுத்திய முதல் வாரம் மட்டும் எல்லா நாட்களும் வருவான், பெரிய புது நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டு, பிறகு ஊக்கமிழந்து வருவது குறைந்துக் கொண்டே போகும், பிறகு புத்தாண்டு தினம் வரை வரவே மாட்டான், இருந்தாலும் அவனது கடன் அட்டையிலிருந்து மாதா மாதம் கட்டணம் வசூலாகிக் கொண்டுதான் இருக்கும். அதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை.

அவன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான், கண்ணாடிக்கு பின்னால் கண்கள் அலைபாய்கின்றன, நாங்கள் திரும்பவும் மாரிசன் மேடம் வகுப்பில் இருப்பது போன்று, நான் எனது ஸ்போர்ட்ஸ் ஷூவும் திரண்ட தசைகளுமாக, ப்ரைஸ் சரிந்த தோள்களும் ஒடுங்கிய நெஞ்சுமாக.

திடீரென எனக்கு அனைத்துமே மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த அரசியல். இந்த மேயர். என்னைச் சூழ்ந்திருக்கும் என்னுடைய பெருமை மிக்க நாட்களின் இந்தப் புகைப்படங்கள். ப்ரைஸிடம் உன் பணத்தை வீணாக்காதே என்று சொல்லத்தான் நான் விரும்புகிறேன், வேலை முடிந்ததும் ஏதாவது காலிமனைக்குச் சென்று ஸ்டீல் கம்பம் எதிலாவது தொங்கி பத்து புல் அப் செய். பத்து முடியவில்லை எனில் ஒன்று மட்டுமாவது செய். வீட்டிற்கு சென்றதும் என்னுடைய கால் ஈரம் படிந்த அந்த தரைவிரிப்பின் மேல் பத்து முறை ஜம்பிங் ஜாக் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால் அவனது பிரச்சனைகளை தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் எங்களது கட்டிடத்தில் மின்தடை ஏற்படுகிறது, மேலிருந்து ஏரோபிக் வகுப்பின் சத்தம் நிற்கிறது, இப்பொழுது ப்ரைஸ் ஓப்பந்தம் கையெழுத்திட நினைத்தாலும் என்னால் பிரிண்ட் எடுக்க முடியாது. “மேயருக்கு நன்றி”, மோளி இருந்தால் சொல்லியிருப்பாள்.

வெளியேறும் வழியினை அறிவிக்கும் சிவப்பு ஒளியில் மூழ்கி, நான் மேஜை இழுப்பறையை திறந்து பத்து ரேஸர்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை எடுக்கிறேன், உடற்பயிற்சி நிலையத்தின் அன்பளிப்பு.

“எடுததுக்கோ”, நான் சொல்கிறேன் “இது உனக்குத்தான்.”

அவனைச் சீண்டியதற்கு பரிகாரம், நான் நினைத்துக் கொள்கிறேன்.

நாங்கள் மேம்பாலத்துக்கு அடியில் உட்காரந்திருக்கிறோம், ,நானும் மோளியும், விளக்குகளை அணைத்து, இஞ்சினை ஓடவிட்டு, குன்றின் மீதமைந்த வீடுகளின் வரிசைகளை கார்க் கண்ணாடியின் வழியாக வெறித்தபடி. நாங்கள் இரண்டு இரவுகளுக்கு முன் இருந்ததைப் போலவே, ஆனால் இப்பொழுது நேரம் ஏறக்குறைய நடுநிசியை எட்டி விட்டது.

மோளியின் மடியில் கிளிப் வைத்த அட்டையில் குறிப்புகள், அவளது நேர்த்தியான கையெழுத்தில். இருட்டு, குளிர், விடிந்தால் தேர்தல் – ஆனால் நான் இம்முறை சரியாக உடுத்தியிருக்கிறேன் – கோட், தொப்பி, பூட்ஸ் – சொரணையுள்ள மாட்டுக்கு ஒரு சூடு.

மோளி காரை மெதுவாக நகர்த்தி அந்த மலிவு விலைக் குடியிருப்பு எனும் பகுதியை அடைகிறோம், மோளி தவறிப் போய் குழியில் இறக்கும் பொழுது மட்டும் அமைதி குலைகிறது.

“சாரி” அவள் சொல்கிறாள்.

குடியிருப்பு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது எனினும், ஒரிரு ஜன்னல்களில் தொலைக்காட்சியின் மின்னல் வெளிச்சம் தெரிகிறது, மக்கள் டிஷ் ஆன்டெனாவை உபயோகப்படுத்துகிறார்கள்.

குறிப்பேட்டில் இருக்கும் முதல் வீட்டின் பக்கத்தில் மோளி நிறுத்திக்கிறாள். இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் கதவு திறக்க முனையாதவர்கள், நான் குறைந்தது இருமுறையேனும் அழைப்பு மணியினை அழுத்தியிருந்தேன். பின் இருக்கையில் இருந்த வால்மார்ட் பையிலிருந்து நான் ஒரு செங்கல்லை எடுக்கிறேன், அது ஏனோ மிகவும் எடையற்றதாக உணர்கிறேன், உள்ளே காலியானதைப் போன்று, நான் காரின் கதவைத் திறக்கும் போது ‘கவனம்’ என்கிறாள் மோளி.

“சரி” என்கிறேன் நான்.

ஏரியிலிருந்து வீசும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாது நடைபாதையில் நின்று நான் அந்த செங்கல்லை எறிய அது இருளில் மறைகிறது, அது வேலியின் மீது விழுந்துவிட்டதோ என நான் நினைக்கும்போது திடீரென கண்ணாடி உடைந்து சிதறும் ஓசை எழுகிறது.

எங்கோ ஒரு நாய் குலைக்கிறது, வேறு எந்த எதிர்வினையும் இல்லை, எதிர்பார்த்தது போலத்தான்.

நாங்கள் நகர்ந்து செல்கிறோம், அந்தக் குடியிருப்பினூடே, கதவு திறக்காத ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று, ஒவ்வொன்றாக, கண்ணாடி சிதறும் ஒலி, பிறகு கதவு திறந்தாலும் சிற்றேட்டினை வாங்க மறுத்த அந்த இணையரின் வீடு, “கூடுதல் வரி இல்லை” மோளி சொன்னாள். அவள் சிறப்பாக செயல்படத்தான் முயன்றாள், சிற்றேட்டினை பெற்றுக்கொண்ட வீடுகளை நாங்கள் கடந்து சென்றோம்.

உண்மையிலேயே ஒரு ஜன்னலின் வழியாக செங்கல்லை எறிவதொன்றும் எளிதான செயல் அல்ல, சீக்கிரத்திலேயே என் முன் கையிலும் முழங்கையிலும் ஒரு மந்தமான கடுகடுக்கும் வலியெடுக்கத் தொடங்கியது, அது கை முழுக்கப் பரவி கழுத்தையும் முதுகையும் எட்டிய போது செங்கல்லின் எடை கூடியது போல் தோன்றியது, பிறகு அது மிகுந்த எடை கொண்டதாயிற்று, பிறகு அது செங்கல்லை ஐந்து பத்து மடங்கு எடை கொண்டதாக மாற்றியது, என்னமோ ஒரு கெட்டில்பாலை எடுத்து வீசுவது போல, என்னால் கல்லை கையினால் பற்றி எடுப்பதே சிரமமாக மாறியது. அவ்வப்போது என் குறி முற்றிலும் தவறி கற்கள் முற்றத்தில் தொம்மென விழுந்தன, பல அடிகள் முன்னாலேயே, பனிப்பொழிவின் மீது விழுந்த கற்களை கையில் கிடைக்கும் வரை கையினால் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் பெரும்பாலும் என் குறி தவறாத போது, நான் தான் விளையாட்டு வீரனாயிற்றே, ஒரே அடியில் கண்ணாடி உடையும்போது, ஒரு சில நேரங்களில் ஆச்சரியமான கூக்குரல் தவிர, சாதாரணமாக அமைதியாகத்தான் இருந்தது, தேர்தலுக்கு முந்தைய இரவில் தங்களது ஜன்னல் கண்ணாடியினை உடைத்து உள்ளே வரும் செங்கல்லின் மறைமுகமான முக்கியத்துவத்தினை அறிந்திருந்தனர் குடியிருப்பு வாசிகள்.

இருண்ட வானத்தில் செம்மை படரத் தொடங்கிய வேளையில் மோளி ப்ரைஸின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள், குறிப்பில் கடைசியில் இருந்தது அது தான். வீட்டினுள் ஒரு சிறு வெளிச்சம் இருந்தது, ப்ரைஸ் ஏற்கனவே எழுந்து தன்னுடைய வால்மார்ட் சீருடைய அணியத் தயாராகிறானாயிருக்கும், இலவசமாகக் கிடைத்த ரேஸர்களில் ஒன்றைக் கொண்டு சவரம் செய்துக் கொண்டு.

நான் கடைசிக் கல்லை எறியும்போது எனது முன்கையிலும் கைமுட்டியிலும் நெருப்பில் சுடுவது போல வலிக்கிறது, கண்ணாடி உடையும்போது என் பயிற்சி ஆசிரியர் வலியின் நிலையின்மை குறித்து போதிப்பதை நினைத்துக் கொள்கிறேன்,

‘மகனே, ஆனால் அந்த கர்வம் நிரந்தரமானது’, இது தான் என்னை போட்டிகளில் வெற்றிபெறத் தூண்டியது, நான் அவர் சொன்னதை நம்பினேன், எல்லாவற்றையும் விட ஒரு வெற்றியாளனாவதே எனக்கு வேண்டியிருந்தது. போதாதற்கு படிப்பு முடிந்ததும் அவர் என்னை அவரது இருக்கைக்கு அழைத்தார், நான் இறுதிப் போட்டியில் பந்தெறிவதை உற்றுநோக்கியபடி சிலர் அரங்கில் இருந்திருக்கிறாராகள் எனும் செய்தியினை அறிவிக்க.

“உடற்பயிற்சித் துறையில் வேலை செய்வது குறித்து என்ன நினைக்கிறாய்?” அவர் கேட்டார்.

காருக்குத் திரும்பிய போது நான் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தேன், நானும் மோளியும் ஒரு கணம் ஒன்றாய் அமர்ந்திருந்தோம், இருவரும் ஒன்றும் சொல்லாமல், சிறிது நேரத்திற்கு பிறகு நான் என்னுடைய கையினை அவளது தொடையிடுக்கில் நுழைத்தேன், வலியெடுக்காத என் கையை, அவள் மெதுவாக ப்ரேக்கை விடுவித்தாள், நாங்கள் மேம்பாலத்திற்கு அடியில் ஓடத் தொடங்கினோம், வீடு திரும்ப, சூரியன் நகரத்தின் மீது உதிக்கத் தொடங்கினான், அந்நாளின் பிற்பகுதியில் எங்கள் வேட்பாளர் அரை சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகும் நகரம்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...