நூலறிமுகம் - பெருமாள்முருகன் அவர்களின் போண்டு

போண்டு

பெருமாள்முருகன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்!

வாய்ப்பினை அளித்த நணபர் எழுதாளர் அ.ப்ரகாஷ் அவர்களுக்கும் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கும் Critical Revelutionaries மற்றும் அயோத்திதாசர் மாணவர்கள் அமைப்பிற்கும் நன்றி.

பெருமாள்முருகனின் போண்டு சிறுகதைத் தொகுப்பு மனிதர்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்குமான உறவைச் சொல்கின்ற கதைகள். இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2024 லும் இரண்டாம் பதிப்பு ஜூலை 2025 லும் வெளியாகியுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இந்தத் தொகுப்பின் பதினோரு கதைகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி வரைக்கும் பல்வேறு அச்சு இணைய இதழ்களில் வெளியானவை.

சில கதைகளை அவை வெளியானபோதே வாசித்திருந்தேன். குறிப்பாக போண்டு, இளன், பொங்கி கதைகள் வாசிக்கத் தொடங்கியதும் நினைவில் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் அவை தனித்தனியாக வாசிக்கப்பட்டதைவிட மேலும் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருவதாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. சிறுகதைகளை தொகுப்பாக வாசிக்க வேண்டியதன் அவசியத்தை இத்தொகுப்பு எனக்கு உணர்த்தியுள்ளது. பெருமாள்முருகனின் வளர்ப்பு பிராணிகள் குறித்த கதைகளின் முதல் தொகுப்பு 2023 ல் வெளியான வேல் ஆகும். அதுவும் இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

பெருமாள்முருகன் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அரை நூற்றாண்டிற்கு முன்பான காலத்தில் விவசாயச் சூழலில் விலங்குகளுக்கு முக்கிய இடம் இருந்தது. அவை அடிப்படையில் பயன்பாட்டுக் காரணங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் அந்த விலங்குகளின் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்தனர். ஒரு தோட்டம் என்றால் இரண்டு நாயாவது இருக்க வேண்டும். உழவுக்கு எருது, கண்ணுபோட மாடு, ஆசாரத்தில அட்டி போட்டு வைத்திருக்கும் மூட்டைகளை எலிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு பூனை. அந்தஸ்தின் அடையாளமாக ஒரு குதிரை வண்டி, ஓரிரு குதிரைகள். இதெல்லாம் ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது . பெருமாள்முருகனின் இதயத்தில் வளர்ப்புப் பிராணிகள் ஒரு முக்கிய இடததை பிடித்திருப்பதில் வியப்பில்லை. அவர் சிறந்த ஒரு படைப்பாளியாகவும் இருக்கின்ற காரணத்தால் அவற்றை முன்வைத்து சிறப்பான கதைகளையும் சொல்கிறார்.

முதல் சுவாரசியமாக நான் சொல்ல விரும்புவது வளர்ப்பு விலங்குகளின் பெயர்கள். கரும்புலி, போண்டு, மதி, பீம், சுட்கி, செம்மி, குர்குர், இளன், பொங்கி, முனி, புடுக்காட்டி, சுடா இப்படி. இவற்றில் பல காரணப் பெயர்கள். அந்த விளக்கங்களும் கதைகளில் உள்ளன. இதில் இளன் எனும் பூனையை இளா எனத் தான் அழைக்க வேண்டும்,

‘எளா ன்னா நம்பட புள்ளைக்கு ஆகாது’.

விலங்குகளின் மீதான இந்த எதிர்பார்ப்புகளற்ற அன்பு சில நேரங்களில் வியப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘பொங்கி’ கதை அப்படியான ஒரு அன்பைச் சொல்கிறது. ஆனால் அதைச் சொன்ன முறை அருமை. பொங்கி என்பதும் காரணப் பெயர்தான்.

குலசாமி கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவுக்கு வயசு ஏறிகிட்டே போகுது.

‘வெள்ளாட்ட ஏறி முதிக்க சமுத்துக்கெட்டுப் போறதுக்குள்ளயாச்சும் கொண்டோயி வெட்டீட்டு வாங்கடா’
என்கிறார் தாத்தா.

மூன்று மகன்களும் மூன்று மகள்களும் தாத்தாவுக்கு. அனைவருக்கும் விவசாயம் தான் தொழில். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முடியாத தொழிலல்லவா விவசாயம் என்கிறார் பெருமாள்முருகன். இதற்கெல்லாம் விளக்கங்கள் உண்டு அவரது வளமையான நடையில். எப்படியோ ஒன்றுகூடி வண்டிகட்டி கிளம்பினார்கள்.

ஒவ்வொரு முறை வண்டி நிறுததும்போதும் பிள்ளைகள் வண்டி மாறி மாறி ஏறுகின்றனர். இந்தப் பயண விவரணையெல்லாம் அதை அனுபவித்தவர்கள் மட்டும்தானே சொல்லமுடியும். அனுபவம் மட்டும் போதாதே. எழுத்துத் திறனும் வேண்டுமே.

கோவிலுக்குப் போன இடத்தில் தூரத்தில் இரயில் போகும் சத்தம். இரயில் போகட்டும், இரயில் தண்டவாளங்களைக் கூட கண்டிராதவர்கள் பிள்ளைகள். அங்கெல்லாம் போகக் கூடாது என அம்மை அப்பன்கள். தாத்தாதான், பாட்டியை உடன் அனுப்பி பத்திரமாக பார்த்துவர ஏற்பாடு செய்கிறார். போகும் வழியில் பாட்டி சொல்லும் கதையா சம்பவமா எனத் தெரியாத ஒன்று கதைக்குள் வரும் பொங்கியின் கதை.

வேண்டாம், வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் அந்த ‘பொட்டக் குட்டியை’ எடுத்து வருகிறாள் செல்வந்த விவசாயியின் மூன்று மகன்களுக்குப் பிறகு பிறந்த ராசியான மகள் பூவாசுரி. பெயரே வித்தியாசமாக இருக்கிறதுதானே. இந்தப் பெயர் கொங்கு வட்டரப் பகுதியில் நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை இந்தக் கதையின் காரணமாக இந்தப் பெயர் வைப்பது நின்று போயிற்றா தெரியவில்லை. (பிரச்சனைகளைத் தவிர்க்கவே இது போன்ற வழக்கத்திலில்லாத பெயர்களை வைப்பதாக பெருமாள் முருகன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.)

பூவாசுரியும் பொங்கியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பூப்பெயதினர். பூவாசுரி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், பொங்கி இரவுகளில் வேட்டைக்குப் போகிறாள். வேட்டையாடும் எலிகளை பல்லுபடாமல் கொன்று எஜமானர்களுக்கு கொடுக்கிறாள். பூவாசுரியைத் தவிர அனைவரும் அதை ருசித்து சாப்பிடுகின்றனர்.

பூவாசுரிக்கு பொங்கியைப் போன்ற இன்னொரு விலங்கினைத் தின்ன மனம் ஒப்புவதில்லை. ஒரு முறை கொண்டுவந்த ஒரு பெரிய முயலின் உடலில் மட்டும் ஒரு பல் பட்டிருந்தது.இப்போது நாம் என்ன நினைப்போம். 'ஓ பூவாசுரியைத் தவிர எல்லோரும் முசல் கறி தின்று இறந்து விடுவார்கள்' என்றுதானே. அதுதான் இல்லை. பிறகு என்ன ஆச்சு.பூவாசுரியும் பொங்கியும்தான் இப்போது கெடா வெட்ட வந்திருக்கும் கோயிலில் தெய்வமாக நிற்கின்றனர். ஏன்? கதையைப் படித்தால் தெரியும்.

இவ்வளவு நேரம் நான் சொன்ன கதயை ை எழுதினால் ஒரு பத்தி அளவுக்கு வரும். ஆனால் பொங்கி கதை சொல்லப்பட்டிருப்பது 15 பக்கங்களில். அவ்வளவு விரிவான விவரணை. சலிப்பூட்டுமா என்றால் சிறிதும் இல்லை. இந்தக் கதை மட்டுமல்ல எல்லாக் கதைகளுமே விரிவான நுட்பமான நேர்த்தியான சுவாரசியமான விவரணைகள் கொண்டவை. கதை எழுதுவது எப்படி என்பதற்கு எடுத்தக்காட்டுகளாகவும் விளக்கங்களாகவும் இந்தக் கதைகளைச் சொல்லலாம் என்று வாசித்து முடித்த பிறகு எனக்குள் தோன்றியது.

வளர்ப்பு விலங்குடனான மனித உறவின் மிகவும் மேன்மையான ஒரு பண்பினைச் சித்தரிக்கிறது பொங்கி கதை. அது எப்பொழுதும் அவ்வளவு மேன்மையானதாக உள்ளதா எனும் கேள்விக்கு விடையாக சில கதைகளும் உள்ளன. சிறந்த எடுத்துக்காட்டு குர் குர், பூனையின் காரணப்பெயர்.

அத்தை தன் வாழ்க்கையையே குர் குரைச் சுற்றி அமைத்துக் கொண்டவள். மிகுந்த சுயமரியாதை கொண்டவள். இல்லை அது அகந்தையா? பட்டணத்திற்கு மகனின் வீட்டிற்கு விருந்துக்கு போனால் இரண்டு மூன்று நாட்களிலேயே மனஸ்தாபம் ஏற்பட்டு திரும்பி வந்து விடுவார். அவள் இல்லாத நேரத்தில் ஒரு வாரம் குர் குரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பாலனிடம் ஒப்படைக்கிறார். திரும்பிவந்த போது குர் குர் பாலனின் மீது அதிக அன்பு செலுத்துவதை, அதற்கு காரணமும் உண்டு, அவளின் மேலதிக நுண்ணுணர்வு கொண்ட மனதால் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது இயல்புதானே. விலகிச் செல்லும், முன்னாள் காதலன் அல்லது காதலியைக் கொலை செய்யத் தூண்டும் மீயுடைமை மனப்பான்மை இதுதானே. அதை வெகு விரிவாக சித்தரிக்கும் வித்தையை கூர்ந்து பார்த்து இன்புறலாம் இந்தக் கதையை வாசித்து.

மிருகங்கள் இருந்தாலும் மனிதர்களை மையப்படுத்திய கதைகளும் உள்ளன இத்தொகுப்பில்.சுடா இவ்வகையில் சிறப்பான கனமான கதை.

சாதி வேற்றுமைகள் வலுவாக வேரோடியிருக்கும் நம் சமூகத்தை கம்யூனிசக் கோட்பாடான வர்க்க ஒற்றுமையால் ஒருங்கிணைத்து வர்க்கப் போராட்டத்தின் வாயிலாக புரட்சியை ஏற்படுத்த முடியுமா? எனும் கனமான கேள்வியினை ஆராய்கிறது இந்தக் கதை.

புதுமுக வகுப்போடு படிப்பிற்கு முழுக்கு போட்டு தந்தை, தாய், மனைவி, மக்கள் என அனைவரையும் பிரிந்து முழு நேர இயக்கப் பணியாளனாக மாறிய தோழர் பி.எம், இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வந்துவிடுமே பிறகு முழுநேரமும் குடும்பத்தை கவனிக்கலாம் எனும் எண்ணம் கொண்டிருந்தார். அவரிடம் மேற்சொன்ன கேள்வி எழுப்பப்பட்டபோது நிச்சயமாக வர்க்க ஒற்றுமை சாத்தியமே என நம்பினார். ஒரு சுய அனுபவதின் வாயிலாக தனக்கு மனதிற்கு நெருக்கமான அன்பையும் வர்க்க ஒற்றுமையின் மீதான நம்பிக்கையையும் ஒரு சேர இழந்து விட்டதால் அவர் இயக்கத்தை விட்டு விலக நேர்கிறது. இந்தக் கதை கட்டமைப்பில் ஒரு விஷயத்தை கவனித்தேன். தன்மையில் தொடங்குகிற கதை சட்டென படர்க்கைக்கு மாறி கதைக்கு மேலும் அழுத்தம் கூட்டுகிறது.

நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு கதை இளன். இளன் எனும் பெயர் கொண்ட பூனையை வீட்டில் யாரும் இல்லாத பத்து நாளைக்கு பார்த்துக்கொள்ள வரும் கல்லூரி மாணவரின் கவனக்குறைவால் பூனை வீட்டிற்கு வெளியே குதித்து விடுகிறது. இதுதான் கதையின் one-line. இதைப் பதினேழு பக்கங்களுக்கு விரித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். இதில் இருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துக்காட்டாக வாசிக்க நினைத்தேன். ஆனால் முழுக் கதையையும் வாசிக்க வேண்டும் எனும் ஆவல் எழுந்ததால் கைவிட்டேன். நீங்களே வாசித்திப் பாருங்கள்.

எனக்கும் வளர்ப்பு மிருகங்களை வளர்ப்பதும் தொடுவதும் கொஞ்சுவதும் வீட்டிற்குள் விடுவதும் உவப்பில்லாத செயல். இருப்பினும் இரண்டு நாய்க்குட்டிகளை குடும்ப உறுப்பினர்களின் நடத்தை காரணமாக நானே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அதை முழு மனதுடன் சிறப்பாகச் செய்தேன். அதில் ஒன்று குட்டியிலேயே இறந்து போனது. இன்னொன்றை வளர்க்க முடியாததால் வேறொருவரின் தலையில் கட்டிவிட்டோம்.

எனினும் அந்த நாய்களின் மீது எனக்கு மனதளவில் பெரிய அன்போ ஈடுபாடோ இல்லை. என்னைப் போன்றே குடும்பச் சூழல் காரணமாக ஒரு நாய்க்குட்டியினை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் கட்டாயத்திற்கு ஆளான ஒரு நடுத்தர வயதுப் பெண் இறுதியில் எப்படி அதன்மீது அன்பு செலுத்த நேர்கிறது என்பதை படிப்படியாக சொல்கிறது தலைப்புக் கதை போண்டு.

வளர்ப்பு விலங்குகள் செய்யக் கூடிய உயர்ந்தபட்ச உதவி எஜமானர்களின் உயிரைக் காப்பது. அந்த வகைமைக் கதை, முதல் கதையான கரும்புலி. ஆனால் அந்த நெகிழ்வு கதையின் உச்சகட்டம் மட்டும் தான். கதையின் நேர்த்தி கூறுமுறைதான்.

மதி என்பது ஒரு அரசு ஊழியரின் வளர்ப்பு நாயின் பெயர். ஓய்வுபெற்ற அவரின் மனநிலையினை சித்தரிப்பதன் ஊடே அவரது ஆளுமையையும் வெளிக்காட்டுகிறார் ஆசிரியர். யாரிடமும் முகத்திற்கு நேராக சண்டையிடத் தயங்கும் அவர் தன்னுடைய நாய்க்கு மதி எனப் பெயரிட்டு ஆறுதல் கொள்கிறார். அவருக்கு மட்டும் தெரிந்த அந்த ரகசியம் வேறு யாருக்காவது புரிந்திருக்குமா?

இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகள் குறித்தும் இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு மிகச் சிறந்த வாசிப்பனுபவம் அளித்த தொகுப்புகளில் ஒன்று போண்டு. சில கதைகளை அவை வெளியானபோதே வாசித்திருந்தாலும் கூட இந்தத் தொகுப்பை வாசிப்பது மேலதிக களிப்பளிக்கும் என்பதை மட்டும் சொல்லி, நீங்கள் அனைவரும் இதை வாசித்து மகிழ வாய்ப்பமையட்டும் என வாழ்த்தி பெருமாள்முருகன் அவர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்