உலகத் தாய்மொழி நாள் உரை

சாகித்திய அகாதெமி சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக்கத்தில்



மலையாளம்

ஆரம்பத்தில், திராவிட மொழிதான் இலங்கையின் வடக்குப் பிராந்தியம் தொடங்கி பலூசிஸ்தான் வரையிலான நிலப்பரப்பில் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்கிறார் உள்ளூர் எஸ் பரமேஸ்வர ஐயர் கேரள சாகித்ய சரித்ரத்தில். ஆரியர்களிடம் தோற்ற திராவிடர்களின் மொழி, தென்னிந்தியாவைத் தவிர்த்த இந்திய நிலப்பரப்பில், அதிகாரத்தின் மொழியாகவும் வளமை மிக்கதாகவும் இருந்த சமஸ்கிருதத்தினால் வழக்கொழிந்து போயிற்று. தமிழ் எனும் சொல் தான் மருவி சமஸ்கிருதத்தில் திராவிடம் என மாறியது என்கிறார் உள்ளூர். இந்தியாவின் பிற பகுதிகளைப் போலல்லாமல், தெற்கில், ஆரியர்கள், போரில் வென்று இடம் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் வைத்தியர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும், விரும்பி அழைக்கப்பட்டு, மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். அவர்களுடனான ஊடாடல் வாயிலாக வடமொழிச் சொற்களை தற்பவப்படுத்தி, மொழிக்கு மேலும் வளமையும் வலிமையும் ஏற்படுத்தும் வகையிலான நட்புணர்வுடன் செயல்பட வாய்த்தது.

திராவிட மொழியான தமிழை பழந்தமிழ் எனக்கொள்ளலாம். இது காலப்போக்கில் வட திராவிடம் எனவும் தென் திராவிடம் எனவும் பிரிந்தது. பொ யு மு ஒன்றாம் நூற்றாண்டிலேயே வடக்கே திருவேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடலும் எல்கையாகக் கொண்டது தமிழ்நாடு என பனம்பாரனார் பாயிரம் மற்றும் புறநானூறு பாடல்களிலிருந்து அறிய வருகிறது. திரேதாயுகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ராமாயணக் கதையில் சீதையைத் தேடி கேரளதேசத்திற்கும் ஆள் அனுப்பப்பட்டதாக வால்மீகி ராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமயந்தி சுயம்வரம், சீதா சுயம்வரம், சாவித்திரி சுயம்வரம் போன்ற நிகழ்வுகளில் கேரள ராஜாக்களும் பங்கேற்றனர் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தக் காலத்தில் மலையாளம் தனித்துவம் மிக்க ஒரு மொழியாக இருந்ததா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார் மலையாள பாஷா சரித்ரம் எனும் நூலில் அதன் ஆசிரியர் கோவிந்தப் பிள்ளை.

பொ யு மு மூன்றாம் நூற்றாண்டில் இலக்கியத்திற்கான செம்மைபடுத்தப்பட்ட தமிழ், செந்தமிழ், பாண்டியநாட்டில் உருவாயிற்று. செந்தமிழிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பல வட்டார வழக்குகளைக் கொண்ட, அன்றாட பயன்பாட்டு மொழி கொடுந்தமிழ் என அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் செந்தமிழில் இயற்றப்பட்டன.

சேர மன்னர்களுக்கு சோழ பாண்டிய மன்னர்களுடன் நெருக்கமான உறவு பாராட்டும் அவசியம் இருந்தது. தமிழ் பிரதேசங்களான சேலம், கோயமுத்தூர் ஊர்களின் மீது அதிகாரமும் அவர்களிடம்தான் இருந்தது. மேலும், பாரம்பரியத்தைப் பேணும் பொருட்டும் செந்தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பயிலவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. பொ யு பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வென்று கேரளாவை பல குறுமன்னர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வரை இந்நிலை நீடித்தது. கேரளாவைச் சார்ந்தவர்களுக்கு செந்தமிழ் கற்பிக்கப்பட்டிருந்தாலும் புழங்கு மொழியிலிருந்து அது பெரிதும் மாறுபட்டிருந்ததால் பெரிய ஆர்வம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் சேரமன்னர்களின் அரசவைக் கவிஞர்களாக சேரநாட்டினர் அல்லாதவர்கள் இருந்திருக்கின்றனர் என எண்ணுவதில் தவறு இருக்க முடியாது.

கேரளத்தை ஆண்ட சேர மன்னர்கள் குறித்து சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து சேரமன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்து புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இளங்கோவடிகள் அரசு துறந்து குணவாயில் கோட்டத்தில் இருந்ததாக நம்பிக்கை உள்ளது. இது தற்போது கேரள மாநிலத்தில் திருவஞ்சிக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இளங்கோவடிகளின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார் சேர மன்னர்களின் மரபில் தோன்றியவர். அறுபத்து மூவரில் விறன்மிண்ட நாயனாரும் சேரமான் பெருமான் நாயனாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடல்கள் இயற்றிய ஒன்பது பேரில் வேணாட்டு அடிகள் கேரள நிலப்பகுதியில் வாழ்ந்தவர். பன்னிரண்டு ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் கேரளாவின் திருவஞ்சிக்குளத்தில் பிறந்த சேர மன்னர் ஆவார். சைவத்தலங்களில் ஒன்றும் வைணவத்தலங்களில் பதின்மூன்றும் கேரளாவின் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

ஒரு மொழி அதன் தோன்றுமொழியின் இலக்கணத்திலிருந்து மாறுபடுவதை பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகக் கொள்ளலாம் என்பது மொழியியல் கருதுகோள். தொல்காப்பியத்தில் 399 ஆம் சூத்திரத்தில் சொற்களின் முடிவில் ஆதி நின்ற அகரம் செந்தமிழில் ஐகாரமாய்த் திரிந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மலையாள மொழி இன்றளவும் தல, மல, வல என அகாரத்தையே கைக்கொண்டுள்ளது. தமிழில் செய்யுளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள சுட்டெழுத்துக்களான ஆ , ஈ போன்றவை மலையாளத்தில் புழங்கு மொழியிலும் நீடித்திருப்பது மலையாளத்தின் தொன்மையையும் அதன் தனித்துவத்தையும் சுட்டுவதாக எண்ணுவதில் தவறில்லை. அதே போன்று சங்ககால தமிழ்ச் சொற்கள் பலவும் இன்றும் மலையாளத்தில் அன்றாடம் புழங்கும் சொற்களாக இருக்கின்றன. எனவே கேரள நிலப்பரப்பில் பேசப்பட்டு வந்த கொடுந்தமிழ்தான் பிற்காலத்தில் மலயாளமாக மாறியது எனவும் தமிழின் தொன்மை மலையாளத்திற்கும் உண்டு எனவும் மொழி வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாறிடத் துலவு வேற்படை வஞ்சி
மன்னவ; செந்தமிழ் மயில்யாம்;
கூறுமூ வேந்தர் திருமுடி துளக்க
குலவினோம்; நின்குலத் தொருவன்
ஆறுசேர் சடையா னவைமுனம் நம்மை
அணிசெய்தா; னாரியப் பொதுப்பெண்
சீறுமென் றுணர்ந்தாய் நீயிவண் மதியாய்;
திருமுனி மலயமே குதுமே.

பொ யு 1758 தொடங்கி 1798 வரை ஆட்சி செய்த திருவிதாங்கூர் மகாராஜா கார்த்திகைத் திருநாள் தர்மராஜாவின் அரசவைக்கு வருகை புரிந்த திருவாடுதுறை ஆதீனத்தின் இந்தப் பாடல் மலையாளம் தமிழிலிருந்து எவ்வளவு தூரம் விலகி சம்ஸ்கிருதத்திற்கு நெருக்கமாக போய்விட்டது என்பதை சுட்டுகிறது.

வினைச் சொற்களில் பால் விகுதியினைக் கைவிட்டது தமிழிலிருந்து மலையாளம் தனித்துவம் பெற்றதன் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எவ்வாறாயினும் பொது யுகம் ஒன்பதாம் நூற்றாண்டில் மலையாளம் தனித்துவம் மிக்க தனி மொழியாக உடலெடுத்திருந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே இலக்கியச் செயற்பாடுகள் கேரள நாட்டில் நடப்பில் இருந்தன. சமஸ்கிருத நூல்களுக்கான விளக்கங்களை மலையாளத்தில் கற்பிப்பது, சாக்கியார் கூத்து, பாலக்காடு பகுதிகளில் இருந்துவரும் கண்ணியார்களி போன்ற வழிபாடுகளுக்கான கொடுமலையாளத்தில் இயற்றப்பட்ட பாடல்கள் போன்றவை எழுத்து வடிவில் பதிவு செய்யப்படாத ஆதிகால இலக்கியங்கள் எனலாம், செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் முக்கிய நிகழ்வுகளை எழுத்தில் பதிவது போன்ற உரைநடை செயல்பாடுகளும் ஆதிகாலத்தில் மலையாளத்தில் இருந்தன.

பொ யு ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் படைத்த பக்தி இலக்கியங்கள்தான் புழங்கு மொழிக்கு நெருக்கமான தமிழ் இலக்கியப் படைப்புகள் எனச் சொல்லலாம். இந்தக் காலத்திற்கு முன்னரே கூட மலையாள நாட்டின் கொடுந்தமிழில் இயல்பாக நிகழ்வது போல உரைநடைக்கு முன்னரே பாட்டு எனப்படும் பாடல்கள் எழுதப்பட்டன. வேடிக்கையாகவும் வீரச்செயல்களையும் வழிபாட்டுமுறைகளைச் சொல்பனவாகவும் இவை இருந்தன. இவை பெரும்பாலும் முறையான கல்வி கிடைக்கப் பெறாதவர்களால் புனையப்பட்டவை. அறிஞர்களின் பார்வையில் இதற்கு இலக்கிய மதிப்போ இசை மதிப்போ இல்லையெனினும் இந்தப் படைப்புகளுக்கு ஒரு மழலையின் இனிமை உள்ளது எனலாம். இவை எழுதப்படாத வாய்மொழி இலக்கியங்கள். தீயாட்டு, களம்பாட்டு, ஓலப்பாவக்கூத்து பாட்டு, நாற்றுப்பாட்டு , கூடைமுடைதல் பாட்டு, நிழல்கூத்து பாட்டு, வடக்கன் பாட்டு, கிருஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பாட்டுகள் என பல வகையான பாட்டுகள்தான் முதலில் படைக்கப்பட்டன. ஆனால் தமிழ் பக்தி இலக்கியங்களின் சாமானியர்களுக்கு நெருக்கமான படைப்புகளின் உந்துதலால் மலையாளத்திலும் கற்றவர்கள் பாடல்களை எழுத முனைந்தனர். பெரும்பாலான அந்தப் பாட்டுகள் தற்போது தொலைந்து விட்டன.

பதிநான்காம் நூற்றாண்டின் இறுதியில் லீலாதிலகம் எனும் இலக்கண நூலை இயற்றிய ஆசிரியர் செந்தமிழ் இலக்கண நூலகளில் நன்கு தேர்ச்சி கொண்டிருந்தார். ஆனால் பிற்காலத்தில் கேரள நாட்டினர் எவரும் இப்படியான மேற்படிப்புகளை செந்தமிழில் மேற்கொள்ளவில்லை. அறிஞர்களான நம்பூதிரிகளுக்கு செந்தமிழின்பால் எந்த நாட்டமும் இருக்கவில்லை. மாறாக அவர்கள் சம்ஸ்கிருதத்தை கற்பதிலும் அம்மொழியில் இலக்கியங்களைப் படைப்பதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். செந்தமிழைப் போலவே சாதரணர்களுக்கு புரியாத சமஸ்கிருத மொழியின்பால் அதிகப்படியான மக்களின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும்பொருட்டு சம்ஸ்கிருதத்துடன் மலையாளம் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழிநடைதான் மணிப்பிரவாளம். பாட்டு மற்றும் மணிப்பிரவாளத்துக்கான இலக்கணமாக லீலாதிலகம் இயற்றப்பட்டது. பாட்டு முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி எழுதப்படவேண்டும் என்பது இந்நூல் வகுக்கும் விதி. தமிழ் இலக்கணத்தைச் சார்ந்தே இதற்கான இலக்கணமும் அமைந்திருந்தது. மாணிக்கமும் பவளமும் ஒரே நூலில் கோர்த்தது போன்று மலையாளமும் சம்ஸ்கிருதமும் அழகாக கோர்க்கப்பட்ட மொழியாக இருக்கவேண்டும் என்பது மணிப்பிரவாளத்துக்கான அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மலையாள வார்த்தைகள் பாமரனுக்கும் புரியக்கூடியவையாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் சமஸ்கிருதத்திலும் மனிபிரவாளத்திலும் பல நூல்களும் இயற்றப்பட்டுள்ளன.

இராமாயண கதையைச் சொல்லும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக நம்பப்படும் ராமசரிதம் எனும் நூல்தான் மலையாள மொழியில் இயற்றப்பட்டதில் பாட்டு வகையைச் சார்ந்த முக்கியப் படைப்பாகும். இதைப் போல பல நூல்கள் இயற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது எனினும் அனைத்தும் அழிந்து போயின என நம்பப்படுகிறது. செந்தமிழை ஒத்த மொழியில் தமிழ் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்பட்டவை ஆரம்பகால மலையாள இலக்கியங்கள். கம்பர் கேரளாவிற்கு வந்து பல சபைகளில் இராமாயணம் பாடியுள்ளார். அதன் தாக்கத்தால் ராமசரிதம் இயற்றபட்டிருக்கலாம் என நமபப்படுகிறது. திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீவீரராம வர்மா தனது படைவீரர்களின் வீர எழுச்சிக்காக இதைப் பாடியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. வடகேரளாவில் காலங்காலமாக வணங்கப்பட்டுவந்த நூல் இது எனவும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு. இதன் மொழியானது மலையாளமாக பரிணமித்த பழந்தமிழ் என்பது மொழிவல்லுனர்களின் கூற்று. இருப்பினும் இதே காலத்து பொ யு பதின்மூன்றாம் நூற்றாண்டு தாமிர பட்டயங்களிலும் கல்வெட்டுக்களிலும்கூட காணப்படும் மொழியில் ஏராளமான மலையாள வார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. எனவே கவிதைமொழி அலுவல் மொழிக்கு மாறாக பழந்தமிழைச் சார்ந்திருந்தது என நம்ப ஏதுவாகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னராக இயற்றப்பட்ட மலையாள உரைநடை நூல் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தின் மொழியாக்கம் கௌடலீயம். ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக நம்பப்படும் இந்நூலின் ஆசிரியர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கூத்து, கூடியாட்டம் போன்ற நிகழ்த்து கலைகளுக்கான வழிகாட்டுதல்களாக இயற்றப்பட்ட ஆட்டப்ரகாரம் எனும் நூல் வகைகள் மலையாள மொழியின் தொன்மையான உரைநடை நூலகளின் ஒரு வகை. பழமை வாய்ந்த மந்திராங்கம், மத்தவிலாசம் போன்ற ஆட்டப்பிரகாரங்கள் பத்தாம் நூற்றாண்டை அடுத்து வாழ்ந்து வந்த தோல கவியின் படைப்புகள் ஆகும்.

பதிநான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மாதவப்பணிக்கர், சங்கரப்பணிக்கர், ராமப்பணிக்கர் ஆகிய மூவரும் நிரணம் கவிகள் என அறியப்படுகின்றனர். மலையாளக் கவிதையில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்த இவர்கள் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத்கீதை நூல்களை இயற்றினர். அதுவரையிலான செந்தமிழ் சார்ந்த மொழியை விடுத்து சமஸ்கிருத தற்பவ வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்தினர்.

நிரணம் கவிகளின் படைப்புகளைத் தவிர பதிநான்காம் நூற்றாண்டில் மலையாளத்தில் இயற்றப்பட்ட பல செய்யுள் மற்றும் உரைநடை நூல்கள் கிடைக்கப்பட்டுள்ளன . ராமாயண சுருக்கம், ஸ்ரீராம ஸ்தோத்திரம், பய்யன்னூர் பாட்டு, தூதவாக்கியம், அமபரீஷ சரிதம், ராமாயணம் தமிழ் போன்றவற்றைக் குறிப்படலாம். மலையாள உரைநடை இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது எனும் கூற்று சரியானதல்ல என்பதை நிரூபிப்பவை இந்தப் படைப்புகள்.

இந்தக் காலத்தில் சமஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் பல நூல்களும் இயற்றப்பட்டிருந்தன. மணிப்பிரவாளம் சமஸ்கிருதம் கலர்ந்த மலையாளம் என்பதால் சில முக்கிய படைப்புகளை குறிப்பிடுவது பொருத்தமானது. இந்தக் காலத்தில் சந்தேச காவியங்கள் எனும் தூது இலக்கியம் சிறப்பாக இயற்றப்பட்டது.உண்ணுநீலி சந்தேசமும் கோக சந்தேசமும் குறிப்பிடவேண்டிய படைப்புகள். சந்தமும் கவிதையும் தோய்ந்த ஏராளமான பழமொழிகளும் விடுகதைகளும் வாய்மொழி இலக்கியத்துக்கான எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.

மலையாளத்தின் ஆதிகால எழுத்து வட்டெழுத்து ஆகும். இது பிராமி எழுத்துக் குடும்பத்தைச் சார்ந்தது. எனினும் பிராமி எழுத்துக்களின் சமகாலத்திலோ அதற்கு முன்னரோ கூட வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் எனும் கருத்தும் உண்டு. இது சேரபாண்டிய எழுத்து எனவும் அழைக்கபடுகிறது.பதினைந்தாம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டியர்களை வென்றபோது பாண்டிய நாட்டிலிருந்து வட்டெழுத்து மறைந்துபோனது. இருப்பினும் சேரநாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரியிலும் கூட வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்தது மலையாள மொழியின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

மலையாள எழுத்துக்களின் முன்னோடி கிரந்த எழுத்து ஆகும். ஏழாம் நூற்றாண்டு பல்லவகால சாசனங்களில் கிரந்த எழுத்து காணப்படுகிறது. பிராமி மற்றும் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய எழுத்து எனவும் அழைக்கப்பட்ட மலையாள எழுத்துகள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. 1251 ஆம் ஆண்டின் ஆட்டூர் தாமிர சாசனம்தான் கிடைக்கப்பட்ட பழமையான மலையாள ஆவணம்.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் இயற்றப்பட்ட கிருஷ்ண காதா மலையாள மொழியின் முக்கியப் படைப்புகளில் ஒன்று. மிகவும் போற்றப்பட்ட சமஸ்கிருத காவியங்களுக்கு இணையான மொழியழகும் கவித்துவமும் இணைந்த ஒரு படைப்பை அன்றாட புழக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட மலையாள வார்த்தைகளைக்கொண்டு இயற்றியிருப்பதுதான் சிறப்பு என்கின்றனர் மொழி அறிஞர்கள். பாட்டிடை வைத்த குறிப்பு வகை இலக்கியத்திற்கு சமஸ்கிருதத்தில் சம்பு எனப்பெயர். பதிநான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் பல சம்புக்கள் மலையாள மணிப்பிரவாளத்தில் இயற்றப்பட்டுள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில் புனம் நம்பூதிரி மணிப்பிரவாளத்தில் இயற்றிய ராமாயணம் சம்பு ஒரு முக்கிய படைப்பாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு மலையாளத்தின் வழிபடப்படும் படைப்புகளில் ஒன்று. திருஞான சம்பந்தனாரின் தேவாரத்திலும் மாணிக்க வாசகனாரின் திருவாசகத்திலும் கிளியை பாட வைத்திருப்பது போன்று எழுத்தச்சனும் கிளி பாடுவதாக இதை எழுதியிருக்கிறார். இதைத்தவிர உத்தரராமாயணம், மகாபாரதம், தேவிமாகாத்மியம் போன்ற பல நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். பிரம்மாண்டபுரம் கிளிப்பாட்டு, சீதாவிஜயம் கிளிப்பாட்டு, ஸ்ரீமத்பாகவதம் கிளிப்பாட்டு நூல்களும் இதே காலத்தில் இயற்றப்பட்டவை.

பான எனும் வகை பாடல்கள் மலையாளத்தின் தனித்தன்மையான கவிதை மரபு எனப்படுகிறது. திருஷ்டி பரிகாரமாக பத்ரகாளி கோயில்களில் நடத்தப்படும் வழிபாடு பான எனச் சொல்லப்பட்டது. அந்தப் பாடல்களின் பாணியில் இயற்றப்பட்ட செய்யுள்கள் பான எனும் பெயர் பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் பூந்தானம் நம்பூதிரி இயற்றிய ஞானப்பான எனும் நூல் இன்றும் பெருவாரியாக மேற்கோள் காட்டப்படுகிறது. இதைத் தவிர மேலும் சில பான வகை நூல்களையும் தோத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார்.

பதினாறாம் நூற்றாண்டில் சாதரணமானவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக உரைவடிவில் எழுதப்பட்ட ராமாயணம், உத்தரராமயணம் உரைவடிவம். ராமனுஜாரின் குரு யாதவ பிரகாசரின் வைஜயந்தி நிகண்டுவின் மொழியாக்கம், தேவி மாகாத்மியத்திற்கான விளக்கம் என பல உரைநடை படைப்புகள் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டன.

கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் கதகளியின் தொடக்ககால வடிவங்களான ராமனாட்டம், கிருஷ்ணனாட்டம் போன்ற நடனங்களுக்கான ஆட்டக்கதைகளும் துள்ளல் எனும் கலைவடிவத்திற்கான பாட்டுகளும் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. கோட்டயம் தம்புரானும் , குஞ்சன் நம்பியாரும் குறிப்பிடப்பட வேண்டிய ஆளுமைகள். பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட உண்ணாயி வாரியரின் நளசரிதம் ஆட்டக்கதை நான்கு இரவுகள் நடத்தக்கூடிய ஒரு ஆட்டததுக்கானது. இதே காலத்தில் ராமபுரத்து வாரியர் குசேல விருத்தம் எனும் காவியத்தின் வாயிலாக வஞ்சிப்பாட்டு எனும் மலையாள மொழிக்கு மட்டுமே உரித்தான ஒரு இலக்கிய வகைமையை தோற்றுவித்தார். வள்ளங்களை செலுததும்போது பாடக்கூடிய பாடல்கள் இவை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான வெண்மணி இயக்கம் இலக்கியத்தை சாதாரண மனிதர்களுக்கு நெருக்கமானதாகச் செய்தது. அன்றாட வழக்கில் இல்லாத சொற்களை முற்றிலும் விடுத்து சிருங்காரமும் நகைச்சுவையும் மிகுந்த படைப்புகளை இயற்றிய பூந்தோட்டத்து அச்சன், மகன் நம்பூதிரிகள், வெண்மணி அச்சன், மகன் நம்புதிரிகள் போன்றவர் இந்த இயக்க முன்னோடிகள். பல நேரங்களில் கண்ணியமற்ற பெண்ணுடல் வருணனைகள் இவ்வியக்கத்தின் மன்னிக்க முடியாத குறையாக இருந்தது. வெண்மணி இயக்கத்தின் குறைகளை நீக்கி அந்த இயக்கத்தின் தொடர்ச்சி எனும் வண்ணம் எளிய மொழியில் இலக்கியம் படைத்தவர்கள் கொடுங்கல்லூர் அரசர்கள். கொச்சுண்ணித் தமபுரானும் , குஞ்சுக்குட்டன் தமபுரானும் குறிப்பிட வேண்டியவர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பத்திரிகைகளும் வெளியாயின. 1884ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேரள பத்ரிக எனும் நாளிதழ் அறுபது ஆண்டுகளையும் தாண்டி வெளியானது. மலையாளத்தின் பல முக்கிய கட்டுரையாளர்கள் இதில் எழுதினர். 1881 ஜனவரி 1 அன்று தொடங்கிய கேரள மித்ரம் பத்திரிகையின் ஆசிரியர் கண்டத்து வறுகீஸ் மாப்பிள. இவர்தான் 1890இல் கேரளாவின் முக்கிய தினசரி, வாரப்பத்திரிக்கை, மாத இதழ், வெளியீடுகள் போன்றவற்றை செய்துவரும் மலயாள மனோரமா நிறுவனத்தை 1890 ஆம் ஆண்டு தொடங்கினார். வித்யா வினோதினி, ரசிக ரஞ்சினி, சுஜனாநந்தினி போன்ற பத்திரிகைகளும் தொடங்கப்பட்டன.

1896 ஆம் ஆண்டு கேரளபாணிநீயம், 1902 ஆம் ஆண்டின் பாஷாபூஷணம் போன்ற இலக்கண, மொழியியல் நூல்களைப் படைத்த ஏ ஆர் ராஜராஜவர்மா சம்ஸ்கிருதத்திலும் பல நூல்களை இயற்றியுள்ளார். கெ சி கேசவப்பிள்ளை, ஏ கோவிந்தப்பிள்ளை, வி சி பாலகிருஷ்ணன், வள்ளத்தோள், குமாரன் ஆசான், இடப்பள்ளி, சங்கம்புழ போன்றவர்கள் குறிப்பிடத்தக்க இலக்கியகர்த்தாக்கள். சட்டம்பி சுவாமிகளும் ஸ்ரீ நாராயண குருவும் ஆன்மிகம் சார்ந்த படைப்புகளை படைத்த சமூக சீர்திருத்த வாதிகள்.

மலையாளத்தின் முதல் நாவல் குந்தலதா 1888 ஆம் ஆண்டு வெளியானது. 1889 ஆம் ஆண்டு வெளியான இந்துலேகா 1892 ஆம் ஆண்டு வெளியான சாரதா ஆகிய நாவல்களை சந்து மேனனும் 1891இல் மார்த்தாண்ட வர்மா நாவலை இயற்றிய சி வி ராமன் பிள்ளையும் மலையாள நாவல் இலக்கியத்தின் பிதாமகர்கள்.

மலையாள சிறுகதையின் ஆரம்பகால முக்கிய படைப்பாளிகள் வேங்கயில் குஞ்சிராமன் நாயர், ஒடுவில் உன்னிகிருஷண மேனன், இ வி கிருஷ்ணப்பிள்ளை போன்றவர்கள். 1891ஆம் ஆண்டு வெளியான வேங்கயில் குஞ்சிராமன் நாயரின் வாசனவிக்ருதி எனும் கதைதான் மலையாளத்தின் முதல் சிறுகதையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிறகான சரித்திரம் யாவரும் அறிந்ததே. அநேக அசல் படைப்புகளை உருவாக்கிய ஒரு பெரிய படைப்பாளிகளின் வரிசைக்கு உரிமை கொண்டுள்ளது மலையாள இலக்கியம். உலக அரங்கின் இலக்கிய நகர்வுகளை கூர்ந்து கவனித்து அதன் சுவாரசியங்களை மலையாளத்திற்கு தற்பவப்படுத்தியும் மொழிபெயர்ப்பின் வாயிலாகவும் கொண்டுவந்து மொழிக்கு சிறப்பு செய்து வந்தனர். அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, ஜி.சங்கரக்குறுப்பு, எஸ்.கே.பொட்டேக்காடு, தகழி சிவசங்கரன் பிள்ளை, எம். டி. வாசுதேவன் நாயர், ஓ.என்.வி. குறுப் என ஐந்து மலையாள இலக்கிய கர்த்தாக்கள் பெருமைமிகு ஞானபீடம் விருதினைப் பெற்றுள்ளனர். மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட பல படைப்புகளும் பெருமைமிகு விருதுகளின் இறுதிப்பட்டியலில் இடம் பிடிப்பதோடு விருதுகளையும் வென்றுள்ளன. ஏராளமான புதிய படைப்பாளர்களுடன் அதிகமான வாசகப்பரப்பையும் பெற்று வளமையான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகிறது மலையாளம்.

Comments

  1. மீச்சிறப்பு. இதை விடச் சிறப்பாக யாரேனும் சொல்லியிருப்பார்களோ என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள்.

      Delete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்