Skip to main content

நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரை - ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

புத்தன் வாசனை

நாஞ்சில் நாடன்

அரவிந்த் வடசேரியின் ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பிற்கு திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அளித்த முன்னுரை

‘ஆவநாழி’ கலை இலக்கிய இரு திங்கள் மென்னிதழ் வெளியிட்ட, அரவிந்த் வடசேரி மொழி பெயர்த்த, எட்டுச் சிறுகதைகளும் மூன்று குறுங்கதைகளும் இவண் தொகுப்பாகி உள்ளன. இக்கதைகளில் ஒன்று ஆங்கில மூலம். பிறவெல்லாம் மலையாள மூலம். கதாசிரியர் எண்மரே! காரணம் வி.கே.என். எழுதிய இரு கதைகள் உண்டு.

      வி.கே.என். பேப்பூர் சுல்தான் வைக்கம் முகமது பஷீர் போன்று மலையாளத்தில் புகழ்பெற்ற அங்கதக் கதைகள் படைத்தவர். வி.கே.என். எனக்கு அறிமுகமானது, மாத்ருபூமி மலையாளத் தினசரியில் கோவை எடிட்டராக இருந்த விகடகவி, சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் விஜயகுமார் குனிசேரி மூலம், முப்பது ஆண்டுகள் முன்பு. மலையாளத்தில் பையன் கதைகள் எனும் பொதுத் தலைப்பில் வி.கே.என். எழுதிய எழுபத்து மூன்று கதைகள், அதே தலைப்பில் எழுநூற்று ஐம்பது பக்கம் கொண்ட நூலாகத் தமிழிலும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு மா.கலைச்செல்வன், வெளியீடு சாகித்ய அகாதெமி.

       கொண்டாடப்படுகின்ற நமது சமகால மதிப்பீடுகளை வெகுவாகக் கேலிக்கு உட்படுத்துகிறவர் வி.கே.என். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அம்பி, தோசை என்னும் இரு கதைகளுமே வாசகருக்கு அதை உணர்த்தும். வைக்கம் முகமது பஷீரைப்போலவே வி.கே.என். விநோதமான மொழிப் பிரயோகம் கொண்டவர். அவர்களது சிறப்பு அது. இவ்விரு கதைகளிலும் அதை உணரலாம்.

       மலையாள மொழிபெயர்ப்புக்களை விரும்பி வாசிப்பவராய் அறியப்பட்டவர், மதிக்கப்படுகிறவர் சாரா ஜோசப். என்னிலும் ஒரு வயது மூத்தவர். எனது குருக்கன்மாரில் ஒருவரான சுந்தர ராமசாமி, இவரது கதைகளை சிலாகித்து மொழிந்தவற்றைக் கேட்டிருக்கிறேன். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அவரது கதையின் தலைப்பு பூதளயம். மூல மொழியிலும் அஃதே தலைப்பு என்கிறார் மொழிபெயர்ப்பாளர். மேலும் அரவிந்த் வடசேரி குறிக்கிறார், பூதளயம் என்ற சொல் சாரா ஜோசப் அவர்களால் புதியதாக உருவாக்கப்பட்ட சொல் என்றும் அதன் பொருள் அடிமுட்டாள்த்தனம் அல்லது முழுமூடத்தனம் என்றும். பேரகராதியில் தேடியபோது பூதளயம் என்னும் சொல்லின் தடயம் ஏதும் இங்கும் இல்லை என்பதறிந்தேன். விண்வெளிப் பயணத்துக்குத் தேர்வான பெண், மூன்று ஆண்களுடன் தனித்துப் பேரண்டப் புறவெளியில் பறக்கும்போது, வன்கலவி செய்பப்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டா எனும் சிக்கல் கதையாக்கபட்டுள்ளது.

       ‘டெர்ரரிஸ்ட்’ என்ற தலைப்பில் கே.ஆர்.மீரா எழுதிய கதை ஒன்று. இவர் மலையாளத்தின் சமகாலத்திய முன்னணி சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். இவரது நாவல் ஒன்றின் தலைப்பு ‘ஆரச்சார்!’ ஆரச்சார் எனும் சொல்லின் பொருள் தூக்குதண்டனை நிறைவேற்றும் பணியாளர் என்பதாகும். எங்கள் பக்கத்து, வீமநகரி எனும் ஊரில் முன்னாள் ஆரச்சார் குடும்பம் ஒன்று வாழ்ந்திருந்தது. கே.ஆர்.மீராவின் மற்றுமொரு நாவலின் தலைப்பு ‘கபர்’. கபர் எனில் பூத உடல், சடலம், பிணம், பிரேதம். கபர் எனும் சொற்பிறப்பே கபருஸ்தான். தலைப்புக்களின் தீவிரத்தன்மை வியக்கவைக்கிறது. இங்கே மொழியாக்கம் செய்து தரப்பட்டுள்ள சிறுகதை, நவீன வாழ்க்கையின் உளவியல் பின்னல்கள் சார்ந்த சிறப்பான அனுபவம் தருகிறது.

       உண்ணி ஆர். எழுதிய மூன்று பயணிகள் எனும் கதை, தீரா நோய்ப்பட்ட, தனக்கு வந்திருப்பது தீராத நோய் எனும் போதம் அற்ற, சிறுமி ஒருத்தியின் வெள்ளந்தியான உணர்ச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்தும் கதை. ஆழ்ந்த மனவலியைத் தருவது. சிறுமியின் தாய், நோய்ப்பட்ட சிறுமி, அவர்கள் பயணப்படும் இரயில் பெட்டியில் சக பயணியான ஏசப்பன் எனும் தச்சன். இவர்களின் பரிவுகளின் பரிமாற்றமே கதை. தச்சரின் பெயரையும் தொழிலையும் குறியீடாகவும் கொள்ளலாம்.

       ஜிஸா ஜோஸ் எழுதிய அற்புதமான சிறுகதை, ‘இருண்ட இடங்கள்’. ஒரு கதாசிரியராக எவரும் பேசத் தயங்கும் களம். கல்லூரிகளின் அல்லது பல்கலைக் கழங்களின் ஆய்வு நெறியாள்கை செய்யும் பேராசிரியர்கள் ஆய்வுக்கு வரும் மாணவியரிடம் பண்பும் ஒழுக்கமும் அறமும் அற்று நடத்தும் பாலியல் வக்கிரங்களை மொழி வரம்புக்குள் நின்று பேசும் கதை. நம்மிடம் சொல்ல நூறுண்டு இதுபோல். சமத்துவ, சமூகநீதிக் காரணங்களுக்காக எவரும் அதை நம்மில் பேசத் துணிய மாட்டார்.

       இந்தத் தொகுப்பில் ஒரேயொரு ஆங்கிலத்தை மூலமாகக் கொண்ட கதை, ‘நான் தான் செய்தேன் அதை’. கதாசிரியர் கன்யா டி அல்மெய்டா, பத்திரிகையாளர். வாசித்து இந்தக் கதையின் தீவிரத் தன்மையை உணர முற்படுங்கள்.

       நகரத்து நாகரிகம் புனைந்த மக்களுக்கான சட்டங்களை ஆதி குடிகளின் பண்பாட்டின் மேல் ஆக்கிரமிப்பாகச் செய்யும் அதிகாரங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் பிஜூ சி.பி., தனது ‘சின்னக் குழந்தைச் சட்டம்’ எனும் கதையில். அவர்கள் ஏகவெளியில் மூத்திரம் பெய்வதைக்கூட சட்டப்படி குற்றம் என மொழிவார் போலும். ஆதரவற்றவர்களின் மேல் எப்போதுமே சட்டம் தனது கடமையைக் கறாராகச் செய்யும். ஏனெனில் அவர்கள் நீதியை ஒத்தி வைக்கும், ஓரம்கட்டும், விலைக்கு வாங்கும் உரம் அற்றவர்கள்.

       கிரேஸியின் குறுங்கதைகள் மூன்று உண்டு தொகுப்பில். அவற்றுள் முதல் கதை ‘உடல் வழிகள்’. கலவியின் போதான ஆழ்மன வக்கிரங்கள் புலர்த்தும் கதை. ‘உடலாழங்களின் மென்மையினை எட்டாமல் பாழ் நிலங்களில் வெளிப்பட்டு ஒரு வலசைப் பறவை போன்று அவன் திரும்பிவிடுவான்’ என்ற ஒரு சொற்றொடரை மேற்கோளாகத் தரலாம். அறிவார் அறிவார் அதன் ஆழத்தை. உரத்த குரலில் பெண்ணியம் முழங்கும் படைப்பாளிகள் வாசித்துப் பார்க்க வேண்டிய கதை இது.

       மொழிபெயர்ப்பாளர் அரவிந்த் வடசேரி, தமது தாய்மொழியான மலையாளத்திலும் தாய்மொழி போன்றே அவர் புழங்கும் தமிழிலும் கொண்டுள்ள தேர்ச்சியை இந்தக் கதைகளின் தமிழாக்கம் நிறுவுகிறது. ஓரளவுக்கு மலையாள வாசனை அறிந்த எனக்கு, மொழிபெயர்ப்பில் இருந்து மூலத்தை அனுமானித்து வியந்து அனுபவிக்க முடிந்தது.அரவிந்த் வடசேரியின் தமிழாக்கம், போலச் செய்வதல்ல. அதுவாகவே செய்வது. தமிழில் அவரது சொற்தேர்வுகள் அதனைப் புலப்படுத்துகின்றன.

       ஆவநாழி வெளியிட்ட, அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்த பதினான்கு சிறுகதைகள் ‘கடவுளுக்கென ஒரு மூலை’ எனும் தலைப்பில் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. அஃதே போன்று, ஆவநாழி வெளியிட்ட, அரவிந்த் வடசேரி மொழியாக்கம் செய்த சிறுகதைகள் இப்போது தொகுப்பாகின்றன. மொழிபெயர்ப்பாளருக்கும் ஆவநாழி ஆசிரியர் குழுவுக்கும் நிறைந்த மனத்துடன் வாழ்த்துக்கள்.

நட்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர்
641 042
20 மார்ச் 2023

புத்தகம் வாங்க தொடர்பு எண் : 9940937599

Comments

  1. கருத்துக்களை வரவேற்கிறேன்,என்பது இதுதானோ

    ReplyDelete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...