Skip to main content

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் ஜீவா அவர்களின் பிஜய் பிஸ்வால் உடனான நேர்காணல்
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது


ஈர ப்ளாட்ஃபார்ம்களில் பிரதிபலிக்கும் பேரோவியங்கள்

நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி

   ஒடிசாவைச் சேர்ந்தவர் பிஜய் பிஸ்வால். இந்தியா மட்டுமல்லாது உலகம் நன்கறிந்த ஓவியர். தன் இந்திய ரயில்வே பணியின் தாக்கத்தில் ஈர ரயில்வே ப்ளாட்ஃபாரங்களை பெருமளவில் வரைந்து பெரும் புகழ் பெற்றவர். ஓவியத்துக்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஓவியராகத் திகழ்பவர். அவருடனான ஓவியர் ஜீவாவின் நேர்காணல்...


   நான் சிறுவயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். சரியாக எவ்வளவு வயதில் வரையத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தபொழுதே அது என்னுள் இருந்திருக்க வேண்டும். இந்த உலகினை இயலும் அளவு வண்ணங்களால் தீட்டவே கடவுள் என்னைப் படைத்தாரோ என்னவோ!

ஐந்து வயது இருக்கையில் படம் வரைந்தது நினைவில் உள்ளது. ஆம், அம்மாவின் அடுப்படியில் இருக்கும் கரித்துண்டுகளும், எங்கள் வகுப்பில் கரும்பலகையின் கீழே வீசியெறியப்படும் சாக்பீஸ் துண்டுகளும்தான் என் பொக்கிஷங்கள். என் வீட்டு நிலமும் சுவர்களும்தான் என் கேன்வாஸ்; என் அம்மாவின் நிலைதான் பரிதாபம்.

பிறகு பென்சில், பேனா என படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஸ்கெட்ச் பென்னை எட்டினேன். என் பதினெட்டாவது வயதில் அநேகமாகக் கல்லூரி நாட்களில்தான் எனக்கு வாட்டர் கலர் அறிமுகம் ஆனது. அதன் பிறகு முழு மூச்சுடன் வரையத் தொடங்கினேன்.

   கோடை விடுமுறைக் காலங்கள்தான் படங்கள் வரைய எனக்கு மிகவும் சாதகமாக அமைந்தன. என் தந்தையார் எங்கள் சொந்த ஊரான மத்திய ஓடிசாவின் அங்குல் மாவட்டத்தின் சிறு நகரமான பல்லஹாராவில் ஒரு மருந்துக் கடை நடத்தி வந்தார். அங்கிருந்து காலியான அட்டைப்பெட்டிகளை சேகரித்துதான் நான் அப்பொழுதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் தர்மேந்திரா, அமிதாப், ஹேமாமாலினி, ரேகா, மிதுன் சக்கரவர்தி போன்றோரை வரைந்து கொண்டிருந்தேன். எங்கள் ஊரில் பாலிவுட் புதுப்படங்களாக வீடியோ காட்சி நடத்தி வந்த நபருக்காக சினிமா போஸ்டர்கள்கூட நான் வரைந்ததுண்டு. இப்படி சித்திரக்கலை எப்பொழுதும் என்னுடன் இருந்தது. ஆயில், அக்ரிலிக், கொலாஜ், கார்ட்டூன் என அனைத்து வகை சித்திரங்களிலும் எல்லா வகை ஊடகங்களிலும் நான் ஈடுபட்டேன்.

   என் பெற்றோர்கள் வாயிலாக எனக்கு ஓவியக்கலை அறிமுகமானதா என்றால் இல்லை. அவர்கள் வாழ்வின் சாதாரண ஈடுபாடுகள் கொண்ட சாதாரண மனிதர்கள். உண்மையைச் சொன்னால், என் சிற்றூர் கலைக்குத் தோதானதாக இருக்கவில்லை. கலை ஒரு தொழிலாக இருக்க முடியும் என்பது உலகின் அந்தப் பகுதியில் இருந்த விவேகமான பெற்றோர்கள் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது. அனைவரும் தங்கள் பிள்ளைகள் ஒரு டாக்டர் அல்லது ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஓர் அரசாங்க வேலையாவது தேடிக் கொள்ள வேண்டும் எனும் மனநிலையில் இருந்தனர். நானும் கடைசியில் அதை அடைந்தேன் என்றாலும், விதி எனக்கு மேலும் கொஞ்சம் சுவாரசியத்தை ஒதுக்கியிருந்தது என நான் நினைக்கிறேன்.

   என்னுள் இருந்த ஓவியனின் வெளிப்பாட்டைத் தூண்டிவிட்ட ஒற்றை நிகழ்வினையும் என்னால் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஓர் உண்மையான கலைஞன் பிறவியிலேயே அழகுணர்வுடன் பிறக்கின்றான் என்றுதான் நான் நினைக்கிறேன். அவன் அல்லது அவள் உருவங்கள் வடிவங்கள் மற்றும் அவற்றின் அமைப்பு ஆகியவற்றுடன் ஊடாடும் பொழுது பிறவிக்குணமான அந்த அழகுணர்வு தானாக வெளிப்படுகிறது. சாதாரணமான சுவாரசியமற்ற பொருட்களில்கூட கலைஞன் அழகைக் காண்கிறான். இதனைச் சொல்லும் பொழுது இயற்கைதான் என்னுள் இருக்கும் கலைஞனுக்கு முக்கிய உந்துசக்தியாக அமைகிறது என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

   ஓவியம் தொடர்புடைய அனைத்தும் எனக்குப் பிடித்தமானவைகளாக இருக்கின்றன. ஓவியத்தின் அனைத்து செயல்பாடுகளும் என்னை ஈர்க்கின்றன. வரைதலில் தொடங்கி, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு அடிப்படை வடிவளிப்பதிலிருந்து கேன்வாசில் வண்ணமேற்றுவது வரை... கேன்வாசின் இழைகளின் மேல் வண்ணம் தோய்ந்த தூரிகை வழுக்கிச் செல்வது, ஈன்ற மகவை வாஞ்சையுடன் பார்ப்பது போன்று விலகி நின்று நம் படைப்புகளை பார்த்து ரசிப்பது என ஓவியக்கலையின் ஒவ்வொரு படிநிலையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் சில நேரங்களில் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது.

   எனக்கு ஓவியத்தின் மேல் தீராக்காதல் எனலாம். ஓவியத்தின் பல்வேறு வகைகளையும் நான் ரசிக்கிறேன். நான் வளர்ந்த சூழலில் காட்சிக் கூடங்கள் ஏதும் இல்லை. பத்திரிகைகள் வழியாகத்தான் எனக்கு ஓவியங்களும் ஓவியர்களும் அறிமுகம் ஆனார்கள். என் இளமைப் பருவத்தில் திரைப்படங்களின் மேல் மிகுந்த விருப்பம் இருந்தது. திரைப்பட சுவரொட்டிகள் என்னை மிகவும் கவர்ந்தன. நான் ஏற்கனவே சொன்னதுபோல் அந்நாட்களில் நிறைய திரைப்பட நடிகை நடிகர்களையும் வரைந்திருக்கிறேன், தவிர இயற்கையும் இந்துக் கடவுள்களும் தேவியரும்.

   ஓவியம் நான் சுயமாக கற்றுக்கொண்டதுதான். எந்த முறையான பயிற்சியும் இல்லை. எந்த ஓவியக் கல்லூரிக்கும் செல்லவில்லை. சாதாரணக் கல்லூரியில் பயின்றேன். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். கல்லூரி நாட்களில் மொழிதான் எனக்கு மிகவும் பிடித்தமான பாடமாக இருந்தது. நான் ஒரு தீவிர வாசகனும் கூட.

   இயற்கையும் எதிர்படும் பல்வேறு காட்சிகளும் படைப்பூக்கத்தைத் தூண்டுகின்றன. இதுதான் என்று ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை ஓர் ஓவியன் எந்தப் பாணியினையும் பின்பற்றுவது இல்லை. மாறாக அதற்கு எதிர்மறையாகத்தான் நிதர்சனம் இருக்கிறது. அதாவது பாணிதான் ஓவியனைப் பின்தொடர்கிறது. ஒரு தீவிரக் கலைஞன் தான் கையாளும் கருவினில் மூழ்கிவிடும்பொழுது ஏதாவது பாணியினைப் பின் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இராது. அந்த விஷயத்திற்கேற்ற பாணி இயற்கையாகவே அமைந்து விடுகிறது.

   ஓவியன் என்ற முறையில் நான் இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கிறேன். தேக்கமடையாத ஓவியனிடம் எப்பொழுதும் தேடுதல் இருக்கிறது. புற உலகு குறித்த ஆர்வம் தொடர்ந்து இருக்கிறது. மேலும் கற்றுக்கொள்ளும் ஆவல் அழியாமல் நிலைகொண்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களின் மீதான ஈடுபாட்டில் தொடங்கி தற்பொழுது ஈரமான பரப்புகளின்பால் ஏற்பட்டிருக்கும் கவர்ச்சி வரை அது ஒரு மிகப் பெரிய வண்ணமயமான பயணமாக இருக்கிறது. இவை யாவும் இறுதியில் என்னை எங்கு இட்டுச் செல்லும் எனத் தெரியவில்லை. இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு நான் என்ன மாதிரியான ஓவியங்கள் படைப்பேன் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.ஒவ்வொரு நொடியும் நான் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

   பெரும்பாலும் நான் வீட்டிலிருந்தே வரைகிறேன். வார இறுதியில் அவுட்டோர் வாட்டர்கலர் ஓவிய முயற்சிகளுக்காக என் ஊரின் பல இடங்களுக்கு செல்கிறேன். எனது படைப்புகள் எனக்கு இந்த அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால் இந்தப் பெயரும் புகழும் அதற்கே உண்டான சுமைகளுடன்தான் வந்திருக்கின்றன. எதிர்பார்ப்பின் அழுத்தம். நான் வாழ்நாள் முழுவதும் ஈரம் தோய்ந்த நடைமேடைகளை மட்டுமே வரைந்து கொண்டிருக்க முடியாது. என்னுள் நுரைத்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற படைப்பார்வங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டியுள்ளது. இன்னும் கண்டறியப்படாத பாதைகளில் பயணம் தொடர வேண்டும். என்னுள் நிரம்பியிருக்கும் ஆர்வம் மேலும் சிறப்பானதை எட்ட, பெரும் பசியினைத் தூண்டியவண்ணம் இருக்கிறது. தொடர்ந்து இரயில் நிலையங்களை வரைவது சலிப்பூட்டுவதாய் அமையும். பிறகு ஒரு ஏ.டி.எம். அறையினை வரைய வேண்டி இருக்கும். புதிய பொருள்களை வரையும் எண்ணம் எனக்குள் பெரும் ஊக்கத்தையும் நேர்மறை எண்ணங்களையும் விதைக்கிறது. என் மனதில் நான் போற்றிக் கொண்டிருக்கும் படங்களில் பத்து சதவீதமாவது ஓவியங்களாகத் தீட்ட எனக்கு வாய்ப்புக் கிட்டினால் போதும்.

   நான் பல ஓவியர்களை ரசிக்கிறேன். அனைவரையும் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியமில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் ஐரோப்பாவின் மறுமலர்ச்சி ஓவியர்கள் மற்றும் நம் நாட்டின் ராஜா ரவிவர்மா, சமகால ஓவியர்கள் வசுதியோ காமத், பிரஃபுல் சாவந்த், மிலிந்த் மல்லிக், சமீர் மான்டல்... என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பிட்டு சொல்வது மிகக் கடினம். இவர்களிடமிருந்து ஊக்கம் பெற நிறைய நுணுக்கங்கள் உள்ளன.

   வழக்கமான இயற்கையான பாணிதான் என்னுடையது. அக்ரிலிக் மற்றும் நீர்வண்ணம் தான் அதிகம் பயன்படுத்துகிறேன். பிரபலமான ஆனால் மிகவும் மாறுபட்ட இவ்விரண்டு ஊடகங்களில் எனக்கு மிகவும் உவப்பானது எது என்று சொல்வது இயலாதது. அக்ரிலிக்கைக் கையாளும்பொழுது பல அடுக்குகள் பயன்படுத்துகிறேன். விரைந்து வேலை செய்ய விரும்பும் எனக்கு அக்ரிலிக் ஒரு வரப்பிரசாதம் எனலாம். விரைவில் உலர்வதால் ஒரே நாளில் எட்டு அடுக்குகள் வரை வண்ணங்கள் தீட்ட முடிகிறது. இவ்வளவு அடுக்குகள் இருந்தால்தான் நான் விரும்பும் கலவையை உருவாக்க முடிகிறது. ஒரு தடிமனான வண்ணத் திட்டு கேன்வாசில் தீட்டப்படும் பொழுதுதான் வண்ணங்களின் கலவை வெகு சிறப்பாக அமைகிறது. என் படங்களின் செழுமையான துடிப்பான வண்ணங்களுக்கு அவ்வளவு தடிமனான வண்ணக் கலவைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

   நேர்மாறாக நீர்வண்ணம் பெரும்பாலும் ஒரே தீற்றலில் முடிந்து விடும். நீர்வண்ண ஓவியங்கள் இயற்கையாகவும் ஒளி ஊடுருவுவது போன்றும் தோற்றமளிக்கின்றன. ஒரு நீர்வண்ண ஓவியம் மிகவும் மெனக்கெட்டு சிரமப்பட்டு தீட்டியது போல் தோற்றமளித்தால் அது தோல்வியடைந்துவிட்டது என்பேன். எனவே நீர்வண்ண ஓவியங்களில் குறைவான வண்ணங்களைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க முயல்வேன். கூடுதல் நுட்பமான சில படைப்புகள் விதிவிலக்காக இருக்கலாம், ஆனால் அது வெகு அரிதானது.

   அவுட்டோர் ஓவியங்களை முயலும்பொழுது சில நேரங்களில் நான் மாதிரிப் புகைப்படங்களைப் பயன்படுத்துவதுண்டு. ஒரு முறை உயரத்திலிருந்து பார்த்தால் தலைசுற்றல் வருவது போன்று ஒரு படம் வேண்டும் என வாடிக்கையாளர் ஒருவர் கேட்டார். மேலிருந்து எடுக்கப்பட்ட சில மலை உச்சியின் படங்களை மாதிரியாகக் கொண்டு 7x4 அடி அளவில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தினை வரைந்தேன். அதன் தாக்கம் பிரமாதமாக இருந்தது.

   முதலில் நல்ல ஓவியம் என்பது ஒரு தவறான சொல்வழக்கு என்பேன். என் அனைத்து ஓவியங்களும் நான் வரையும்பொழுது என் தலைசிறந்த ஓவியங்களாக இருக்கின்றன. டா வின்சியின் மோனாலிஸா போன்ற சிறந்த ஓவியமாக அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பில்தான் ஒவ்வொரு ஓவியத்தினையும் வரையத் தொடங்குகிறேன். அதை நான் உலகத்திற்கு அறிவிப்பதில்லை என்றாலும் கூட. ஆனால் நான் வரைந்த ‘கணேசா’ ஓவியத்தை நல்ல விலைக்கு கனடாவைச் சார்ந்த ஒருவர் ஆன்லைனில் வாங்கினார். அது மிகவும் கலைநயத்துடன் வேர்களினூடாக வெளிப்படும் விநாயகர் ஓவியமாக இருந்தது. பிறகு சில காலம் இந்த வேர்களிடம் மயங்கிக் கிடந்தேன். பல ஓவியங்களில் வேர்களை என் சுயவெளிப்பாட்டின் அடையாளமாக பயன்படுத்தினேன். சுமார் ஆறு ஏழு வருடங்கள் இந்த வேர்களை ஓவியங்களில் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். பிறகு அது சலித்து விட்டது. அந்த கணேசா ஓவியம்தான் நான் தொடர்ந்து வேர்களை வரையக் காரணம் எனச் சொல்ல மாட்டேன். நான் அப்படித்தான் அடிமைப்பட்டு போகிறேன்.

   நான் விரைந்து ஓவியங்களை முடிக்க விரும்புகிறேன். வேகமான தூரிகைத் தீற்றல்களால் வரைவது என் இயல்பு. எனவேதான் நீர்வண்ண ஓவியங்கள் எனக்கு விருப்பமானவையாக இருக்கின்றன. அவற்றை ஒரு மணி நேரத்திற்குள், ஏன் அவ்வளவு, சில நிமிடங்களிலேயே கூட வரைந்து விடலாம். எண்ணெய்ச் சாயங்கள் காய்வதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். எண்ணெய்ச் சாயங்களின் தன்மையோடு விரைவாக வரைய அக்ரிலிக் மிக உபயோகமாய் இருக்கிறது. 3x4 அடி ஓவியங்கள் கூட சில மணி நேரங்களில் வரைய முடியும். அதுதான் நான் என் இரயில்வேத் துறை வேலையினை சிறப்பாகச் செய்தபொழுதும் வரைவதைச் சாத்தியமாக்கியது. இதனால் என்னால் நிறைய வரைய முடிகிறது.

   நான் சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தையும் வரைந்தாலும் இரயில்கள் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவையாக இருக்கின்றன. வேலைச் சூழலில் தினமும் நகரும் இரயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்பு இருந்ததால் சாதாரணக் கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்களை என்னால் கூர்ந்து கவனிக்க முடிந்தது. எனக்கு இரயில் நிலையங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவை மழையில் நனைந்திருக்கும் பொழுது. விரைந்து செல்லும் பயணிகளை எதிரொளிக்கும் ஈரம் படிந்த ரயில்வே ப்ளாட்ஃபார்ம்கள் வியக்க வைக்கும் அழகு கொண்டவை என்பதாக நான் உணர்கிறேன். வெறும் நடைமேடை அல்ல எனக்குத் தூண்டுதல். நான் மனிதர்களை உற்று நோக்குபவன். அவர்களின் நடமாட்டத்தை மிகவும் ரசிக்கிறேன், அவர்களின் உடைகள், அவர்கள் உட்கார்ந்திருப்பது, அங்க அசைவுகளுடனான உரையாடல், அவர்களின் உடல்மொழி இவை அனைத்தும் என்னை மிகவும் கவர்கின்றன. என் ஓவியங்கள் இவைகளையும் உள்வாங்கியிருப்பதால்தான் சாதாரணத்தை விட ஒரு படி மேலே இருப்பததாக நான் நினைக்கிறேன். இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எனது இரயில் ஓவியங்கள் அனைத்தும் விற்றுப் போய்விட்டன. மேலும் அவற்றை வரைவதற்கான சில ஆர்டர்களும் இருக்கின்றன. இதனால் மேலும் சில இரயில் ஓவியங்களை எதிர்பார்க்கலாம்.

   மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் எனது வீட்டில் அமைந்துள்ள விசாலமான ஓவியக்கூடத்தில்தான் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஓவியம் வரைகிறேன், இடையில் மூன்று மணி நேரம் மதிய உணவிற்கும் குட்டித் தூக்கத்திற்கும். நீர்வண்ணத்தில் தொடங்கி, சில மணி நேரம் அகரிலிக் வண்ணமும் தீட்டுகிறேன். மதியப்பொழுதுகள் ஸ்கெட்ச் செய்வதில் ஆழ்ந்து கழிகின்றன அது பெரும்பாலும் அந்தி வரை நீளும்.

   நான் பெரிய Podcast ரசிகன். ஓவியம் வரையும்பொழுது ஏதாவது Podcast அல்லது இசை கேட்டுக் கொண்டிருப்பேன். அண்மைக் காலமாகத்தான் ஓவியக் காட்சிக் கூடங்களுடனும் வாடிக்கையாளர்களிடமும் தொழில்முறை ஓவியனாகத் தொடர்பில் இருக்கிறேன்.அரசு ஊழியனாக இருந்தவரை அவர்களுடன் தொழில்முறை உறவைப் பேணும் ஆற்றலும் நேரமும் இல்லாமல் இருந்தது. பணியினைத் துறந்து தொழில்முறை ஓவியனான பின்தான் அவர்களைச் சென்றடைய முயன்றேன். பெரும்பாலும் ஊடகத் தொடர்புதான். என் ஓவியங்களின்பால் நிஜ மற்றும் நேர்நிகர் காட்சிக்கூடங்கள் ஆர்வம் காட்டுவது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது. ஆனாலும் காட்சிக் கூடங்கள் மற்றும் ஓவியப் புரவலர்களுடனான உறவு, சந்தை நிலவரத்தால் கட்டமைக்கப்படுகிறது, அவர்கள் எனது பாணி என நம்பும் சில வகை ஓவியங்களையே திரும்பத் திரும்ப வரையத் தூண்டுகின்றனர். எந்த ஒரு கலைஞனும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வகைபடுத்தப்படுவதை விரும்ப மாட்டான். ஒரு கலை ஊக்கம் கொண்ட படைப்பாளி புது முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

   நமது பாணியிலிருந்து பெரிதும் விலகாமலேகூட புது சிந்தனைகளை உள்வாங்கி, படைக்க முடியும் என நம்புகிறேன். உங்களுடன் ஒரு வகை ஓவியங்கள் அடையாளப்படுத்தப்படுவது விரும்பக் கூடியது என்றாலும் அதனை ஒரு விளம்பரமாகக் கொண்டு மேலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு தேங்காமல் பயணத்தைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்ல வேண்டும்.

   அரசு வேலையினைத் துறந்து, முழுக்க முழுக்க தொழில்முறை ஓவியன் ஆனதுதான் மிகத் துணிச்சலான செயல். நிரந்தரமான மாதச் சம்பளம் அளிக்கும் பாதுக்காப்பினைத் துறந்து நிச்சயமற்ற நிதி நிலை கொண்ட ஓவியத் தொழிலுக்கு மாறுவது பெரிய சவால் தான். குறிப்பாக ஐம்பது வயதை எட்டிய நிலையில். எனது சுற்றமும் நட்பும் என்னை மிகவும் எச்சரித்து பின்வாங்கச் செய்யவே முயன்றனர். என் மனைவிதான் எனக்கு பெரும் ஆதரவளித்தார். ஆனால் இந்த மாற்றம் பெரும் மனநிறைவளிப்பதாகவே இருக்கிறது.

ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->

Comments

  1. மொழிபெயர்ப்பு மொழிமாற்றம் போன்றவற்றை அவசியம் கருதி தமிழுக்கான தன்னியல்பில் மெருகேற்றவும் தேவைப்பட்டால் சுருக்கவும் செய்தால் என்ன?.நான் குறிப்பாக இந்த ஓவியரின் நேர்காணலை மட்டுமே சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய சுருக்கி செப்பனிட்ட பிறகு தான் இந்த வடிவம் பெற்றுள்ளது. அதிகமாக சுருக்கினால் உரையாடுபவரின் ஆளுமை வெளிப்படாமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். உங்கள் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

      Delete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...