ஹோம்
திரைப்படம் - மலையாளம்
திரைச்சுவை : அரவிந்த் வடசேரி
பல நண்பர்களும் மிகவும் இரசித்ததாகச் சொல்லும் ஹோம் படத்தினை ஏன் என்னால் இரசிக்க முடியவில்லை என்பதை எழுதிப்பார்த்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் இதை எழுதுகிறேன். சும்மா ஒரு பயிற்சி தான்.
எந்த திரைப்படத்திலும் முக்கிய கதைமாந்தர்களை அறிமுகம் செய்வது சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் அது மிகவும் சுருக்கமாகவும் அதே நேரம் அடிப்படை குணாதிசயங்களை நிறுவுவதாகவும் விரைந்து கதை நிகழ்வுகளுக்குள் இட்டுச் செல்வதாகவும் இருத்தல் நலம். முதலில் அறிமுகம் செய்யும் 4 கதாபாத்திரங்கள் மகன்,தாய்,தகப்பன் மற்றும் தாத்தா நன்றாக உள்ளது. பையன் படுத்துக் கொண்டே ஃபேன் அணைக்க அவ்வளவு சிரமப்பட்டு படியேறும் அம்மாவை அழைப்பது கொஞ்சம் ஓவர் என்றாலும். ஆனால் அந்த அறை அசுத்தமாக வைத்திருப்பது குறித்து அம்மா மகனிடம் குறைபட்டுக் கொள்வது மேற்கத்திய நாகரீகம் (படம் தழுவலா?). இந்திய பண்பாடு படி அவிழ்த்துப் போட்ட ஜட்டி கூட அம்மா தேடியெடுத்து துவைப்பது தான் முறை. இதையே அந்தப் பையன் vlog வீடியோ செய்ய தான் குறைவற்ற ஆளுமை என்பதை நிறுவும் பொருட்டு காமிரா கோணத்தில் விழும் ஒரு பகுதி மட்டும் ஒய்யாரமாக வைத்திருப்பது போலவும் பிற இடங்கள் அனைத்தும் மிகவும் மோசமாக இருப்பது போலவும் காண்பித்தகிருந்தால் சமூக ஊடகங்களில் எப்படி தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள் என்பதையும் சுட்டுவதாக அமைந்திருக்கும்.
'இரண்டு வருடங்களுக்கு முன்', 'தற்பொழுது' என்று எழுதிக் காட்டுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. அப்புறம் அந்த மீன் தொட்டி விவகாரம் அவ்வளவு விலாவாரியாக காண்பித்திருப்பதன் நோக்கம் எட்டப்படவில்லை என நினைக்கிறேன். அதே போன்று தான் அந்த மனோதத்துவ நிபுணரின் பங்கும். அவர் பெரிய விஷயங்கள் பேசினாலும் அதையே இந்திரன்ஸ் முயற்சி செய்து கேலிப்பொருளாவது அந்த கருத்துக்கள் கூட ஏதோ ஏமாற்று எனும் எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
பிரபல கதாநாயகனுடன் பட அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்களாக திரைக்கதை எழுதி முடிக்காமல் இருப்பதனால் உண்டாகக் கூடிய அழுத்தம் தயாரிப்பாளரிடமோ கதாநாயகன்(?) இடமோ இருப்பது போல் தோன்றவில்லை. அவனுக்குத் தான் அந்த டென்ஷன் இல்லை என்றாலும் மனைவியாகப் போகிறவளோ அல்லது மாமனாரோ அதை சுட்டுவதாவது நடக்கும் தானே? எனக்கு திரைப்பட தயாரிப்பு குறித்து அறிவேதும் இல்லை என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். பிரபல நடிகருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் மெகாஹிட் டைரக்டருக்கு வங்கிகள் சிறிது கருணை காட்ட மாட்டார்களா என்ன?குடும்பத்தின் எதிர்காலத்தையே புரட்டிப்போடக்கூடிய ஃபேஸ்புக் லைவின் தாக்கமும் எளிதில் கடந்து போவது போல் தான் சித்தரிக்கப் பட்டுள்ளது.
ஒருவன் எப்படியோ இரண்டு மகன்களை படிக்க வைத்து எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவர்களுக்கு பிடித்த படி வாழ துணை நின்றிருக்கிறார். தான் வாழ்க்கை முழுவதும் ஓடியதில் தான் இந்த வீடு இப்படி இருக்கிறது என்று மனைவி சொன்னாலும், அறுபது வயதைக் கடந்தும் கணவன் மேல் அவளுக்கு பெரிய குறை ஒன்றும் இல்லை. மாறாக, ஒரு சிக்கல் வரும்பொழுது அவனுக்கு சார்பாக பேசவும் கணவனின் தந்தையை பரிவோடு கவனிக்கவும் செய்கிறாள். அவனின் நண்பனின் குடும்பமோ அவன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறது. அப்படி என்றால் அவனிடம் ஏதோ ஒரு சிறப்பான குணம் இருக்க வேண்டும். அதை வெளிக்காட்ட தவறியது பெரும் குறை. அதே போன்று வருங்கால மாமனார் அவரது தாயாரின் கட்டளை ஏற்று ஒரு சுயசரிதை எழுதினார் என்பதும் அவர் சமூக ஊடகங்களில் பெருமளவு பின் தொடரப்படுகிறார் என்று சொல்வது மட்டும் வைத்து தான் நாமும் அவரை பெரிய மனிதர் என்று ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப் படுகிறோம்.
இந்திரன்சின் வாழ்க்கையில் நடைபெற்ற அந்த அதிசய நிகழ்வு கூறப்பட்டவுடன் அது கதையில் வரும் யாருடனோ இணைக்கப்படப் போகிறது என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்பை அப்படியே நிறைவு செய்கிறது படம். நான் எதிர்பார்த்தது போல் அது விஷாலின் தகப்பனாக இருந்து அந்த நன்றிக்காக அவன் மன்னித்து படம் செய்கிறான் என்று சொல்லியிருந்தால் கூட சிறிது தேவலாம் போல் இருக்குமோ என்னமோ. சுருக்கமாக சொன்னால் கதைமாந்தர்களில் ஆளுமையினை பூரணமாக சித்தரிக்காததும் எதிர்பார்த்த விதம் நிகழும் அதிசயமும் தான் பெரிய குறையாக இருக்கிறது.

சினிமா விமர்சனம் விட்டு சொந்த கதை எழுதி பிரசுரிக்கலாமே ,உங்கள் வலை தளத்தில் பிரசுரிக்க யாருடைய அங்கீகாரமும் தேவை இல்லையே.
ReplyDeleteஇந்த கருத்தை படிக்கவில்லையா நண்பா அல்லது வரவேற்க்கவில்லையா
ReplyDeleteவேலை பளு காரணமா? இல்லை site visit செய்வது இல்லையா?
ReplyDeleteதினமும் வலை தளம் பார்க்க முயல்கிறேன். சொந்தமா எழுத திறமையும் வேணுமே. நன்றி. அதையும் முயல்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா
ReplyDelete❤
Delete