கொடியிறக்குதல் - கவிதை?

கொடியிறக்குதல்

அரவிந்த் வடசேரி


வெய்யிலில் காயந்திருந்த நுழைவாயிலின் பூட்டு
திறக்கச் சற்று தாமதம் செய்தது.
அமைச்சர் வருகையினையொட்டி வரையப்பட்ட
வெண்ணிற வட்டங்கள் மறையத் துவங்கியிருந்தன.
ஏதோ ஆபத்து விரட்டி வர
ஒரு காட்டின் அனைத்து விலங்குகளும் விரைந்தோடியதை
நினைவூட்டின மணலின் மீதிருந்த தடங்கள்.
அறுந்து கிடந்த தோரணம் ஒன்றினை அவிழ்த்து சுருட்டினான்,
பிடிப்பு தவறி தரையில் கிடந்த கொடி ஒன்றினை ஜேபியிலிட்டான்,
முக்கிய விருந்தினர் விட்டுப்போன
பொன்னாடையின் நெகிழிப் பையினை பொறுப்பாய் எடுத்து
குப்பையிலிட்டான்.
காற்றடங்கியதால் பறந்து களைத்தது போல்
சுரத்தற்று மடங்கிக் கிடந்தது கொடி.
எக்கி நின்று கொடிக்கயிற்றின் சுற்றவிழ்த்து
சுண்டி நேர் செய்து கீழ் இறக்க
தொக்கி நின்ற மலர் ஒன்று உச்சியில் உதிர்ந்தது.
சிலிர்த்துப் போனது போல் சிறகடித்த புறாவின்
கரவொலி.
கயிற்றுடன் மடித்த கொடியினை பொதிந்து
வாயிலைப் பூட்டி வெளியேற
வீதி விளக்குகளின் ஒளியில்
அவன் நிழல் மட்டும் துணையாக வந்தது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை