கவிஞர் மாதவிக்குட்டியின் ஆங்கிலக் கவிதையின் என் மொழியாக்கம்

நடுத்தர வயதினள்

ஆங்கிலத்தில் - கவிஞர் மாதவிக்குட்டி
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி


எப்பொழுது
நண்பர்களாக இருந்த உங்கள் குழந்தைகள்
கடு கடுக்கும் முகமும்
கருணையற்ற நாவும் கொண்ட
விமர்சகர்களாக மாறினரோ,
அப்பொழுது
நீங்கள் நடுத்தர வயதினள்.

இப்பொழுது
அவர்கள்
கூடுடைத்து வெளியேறின கூட்டுப்புழுக்களின்
முகத்திலறையும் முதிர்ச்சியின் பேரழகு,
உங்களை அவர்களுக்கு தேவையில்லை,
தேனீர் தயாரிக்கவும்
உடுப்புகளை சலைவை செய்யவும்
தவிர.

உங்களுக்கோ
அவர்கள்
எப்பொழுதும் போல
மிகவும் வேண்டியவர்களாக
இருக்கிறார்கள்,
குறிப்பாக
இப்பொழுது.

தனித்து விடப்பட்ட நீங்கள்,
அவர்களின்
புத்தகங்களையும் பொருட்களையும் தடவி
இரகசியமாக கொஞ்சம் அழுகிறீர்கள்.

எப்பொழுதோ
நீங்கள்
நள்ளிரவில் வரைந்தளித்த
கானக விருந்துக்கான
அணில்களின் தங்க நிற அழைப்பிதழ் கண்டு,
'வாழ்க்கை முழுவதும்
கனவுலகத்திலேயே வாழ்ந்து விட்டீர்கள்,
இப்பொழுதாவது
விழித்துக் கொள்ளுங்கள். அம்மா,
உங்களுக்கு வயதாகி விட்டது' என
எப்பொழுது
வெறுப்புடன் உங்கள் மகன் கத்துகிறானோ,
அப்பொழுது
நீங்கள் நடுத்தர வயதினள்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை