டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன்

அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம்
மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி

தழும்பேறிய விரலாக இருந்தும்
எவ்வளவு அழுத்தினாலும்
வேலை செய்யவில்லை.
"டச் ஸ்க்ரீன் டாடி,
மெதுவாக அழுத்தினால் போதும்
அழுத்தக்கூட வேண்டாம்
சும்மா தொட்டால் போதும்.
உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்-
இதோ இப்படி."
அவன் விரல்
தண்ணீரின் மேல்
இயேசுவைப் போல நகர்ந்தது.
ஆசைப்படி இயங்குகிறது உலகம்.

உலகம் வசப்படாதிருந்ததன் காரணம்
இது தானோ?
நான் தேவைக்குமேல்
பலம் பிரயோகித்திருந்தேனோ?
என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை
நான் விரும்பியவற்றை
விரும்புவது கண்டு
வீணாக வருத்தப்பட்டேன்.
எதிரிகளுக்கெல்லாம்
ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய்
என இறைவனிடம் வருத்தப்பட்டேன்.
மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர
என்னால் முடியவில்லை.
முதல் அடியிலேயே
நான் நீரில் மூழ்கிவிட்டேன்.

பூக்கள் மலர்வது
யாராவது பலம் பிரயோகிப்பதாலா?
நான் மட்டும்
பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல
ஓசையுடன் மலர்ந்தேன்.
நெற்றிவியர்வையை
அதிகமாக கொதிக்கவிட்டு
அப்பம் வேகவைத்தேன்.
அதுவோ ஐயாயிரம் போகட்டும்
ஐந்து கூட தேறவில்லை.
என் இயேசு அற்புதங்களை காட்டிய இயேசுவல்ல
தேவைக்கதிமாக சிரமப்பட்ட இயேசு.

பூட்டப்பட்ட கதவுகளை
எளிதாக திறப்பவர்களை
நான் கண்டிருக்கிறேன்.
வெறுமனே குண்டூசியால்
'நவதால்' பூட்டுதிறந்த நண்பனின் கண்ணில்
கயவனின் புன்னகை மின்னுவதைக் கண்டேன்.
அசாத்ததியமானதை செய்தவன்
சாத்தியமானதை செய்தவன் அளவுகூட
சிரமப்படாததை பார்த்திருக்கிறேன்.
ஏமாற்றுக்காரனை
ஜாலவித்தைக்காரன் என வாழ்த்துவதும் கண்டேன்.
நான் பாறையில் அமைத்தேன்
அவர்களோ தண்ணீரிலும்.

திறக்க பலம் வேண்டாத கதவின் முன்
எதற்காக வந்தானென்பதை மறந்து
ஒரு தனியன் நிற்கிறான்.
"மெதுவாக அழுத்தினால் போதும்
அழுத்தகூட வேண்டாம்
சும்மா தொட்டால் போதும்.
உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்..."

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை