ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் சுனில் பூக்கோட் அவர்களின் நேர்காணல் - மலையாள உரையாடலின் தமிழ் வடிவம் எனது
ஞாபகங்களில் நனையும் தூரிகை
நேர்காணல் - ஓவியர் ஜீவா தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி
சுனில் பூக்கோட் தன் வித்தியாசமான, தனித்துவமிக்க ஓவியங்களால் கேரளத்தைப் பதிவு செய்யும் ஓவியர். அவரோடு ஓர் உரையாடல்...
ஓவியத்தில் ஆர்வம் வந்தது எப்படி? உங்கள் குடும்பத்தில் வேறு ஓவியர்கள் யாரும் உண்டா?
நான் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை ஒரு பேருந்து பணியாளர். அம்மா இல்லத்தரசி. கலை சார்ந்த ஏதாவது ஒரு தொடர்பு என்று சொன்னால் அது என் அம்மாவின் குடும்பத்திலிருந்து தான் எனச் சொல்ல முடியும். என் அம்மாவின் அப்பா கட்டிடக் கலைஞர். அந்தக் காலத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார். மெருவம்பாயி பள்ளிவாசல் போன்றவற்றை அவர்தான் கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து என் அப்பாவின் குடும்பத்தில் கலைஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை மரபணுக்கள் வழி என் முன்னோர்களின் ஈடுபாடு எனக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.
நீங்கள் ஓவியம் கற்றுக்கொண்டது குறித்த பகிர்வுகள்... மற்றும் உங்களைக் கவர்ந்த ஓவிய ஆசிரியர்கள்?
சிறு வயது முதலே எனக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருந்தது. படம் வரைவது அப்பொழுதே என் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது. பல நேரங்களில் விளையாடுவதைத் தவிர்த்து படம் வரைந்துகொண்டிருப்பதற்கான ஓர் உந்துதல் என்னிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. ஒரு சீசனில் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டால் மற்றொரு சீசனில் வரைவதில் ஆர்வம் பெருக்கெடுக்கும். இப்படி விளையாடுவ தும் வரைவதுமாக மாறி மாறி நிலவி வந்த ஒரு பருவம் அது. சில நாட்கள் நான் தொடர்ந்து படம் வரைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். கடைகளில் இருந்து வாங்கி வருபவற்றில் காணும் விளம்பரங்களிலிருக்கும் படங்களை அப்படியே நகலெடுத்து வரைந்ததன் மூலம்தான் நான் சித்திரக்கலையில் சுயமாக அடியெடுத்து வைத்தேன். ஆசிரியர்கள் என்று சொன்னால் என் ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஓவிய ஆசிரியர்கள் என்னை பெரிதும் ஊக்குவித்தனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் பாராளி பள்ளியின் கணேசன் மாஸ்டர், உயர்நிலைப் பள்ளியில் சந்திரன் மாஸ்டர், இவர் லலித் கலா அகாடமி செயலர் ஆக இருந்தவர். பிறகு நான் ஓவியம் பயின்ற தலசேரி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின் சத்யன் மாஸ்டர், வேணு மாஸ்டர், கல்லூரி முதல்வர் கருணன் சார். கருணன் சார் கொடுத்த ஊக்கம் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர்களைத்தான் என் ஆசிரியர்கள் என்று சொல்ல முடியும். மற்றபடி தனியாக ஓவியத்துக்கென்று எந்த ஆசிரியரையும் நான் தேடிப்போனதில்லை.
மற்ற ஓவியர்களிலிருந்து முற்றிலும் விலகி ஒரு தனித்துவமான ஓவிய பாணியைக் கையாள்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குக் கைவந்தது மற்றும் இதனை எப்படி மேம்படுத்திக் கொண்டீர்கள்?
தனித்தன்மைதானே மற்றவர்களை கவர்கிறது! தனித்தன்மைதானே ஓர் ஓவியனுக்கு அவசியமானதும் கூட. இது எனக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. எனவே எனக்கென்று ஒரு பாணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அயராது முயன்றுதான் அதனை அடைந்தேன். சிறு வயது முதலே தொடர்ந்து வரைந்து கொண்டிருந்த அனுபவம்தான் எனக்கென்று சுயமான ஒரு பாணியைக் கண்டடைய உதவியது என்று நினைக்கிறேன். நான் வரைந்து பழகிய என் இளமை நாட்களில் என்னுள் பல சித்திரங்கள் பதிவாகி உள்ளன. அந்தக் காலத்தின் ஊர்திகள், இயற்கைக் காட்சிகள், மனிதர்களின் உருவங்கள் எனப் பல pattern கள் என் மனதில் பதிந்துள்ளன. நான் அவற்றைத்தான் இப்பொழுது ஒரு தொடராக வரைந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக நான் இப்பொழுது வரைந்துகொண்டிருக்கும் நினைவுச் சித்திரங்களின் தொடர்.
பெர்ஸ்பெக்டிவ் மற்றும் வித்தியாசமான கோணங்கள் (மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல்) ஆகியவை மேலதிகமும் உங்கள் ஓவியங்களில் இடம் பெறுகின்றன. நீண்ட கால பெர்ஸ்பெக்டிவ் ஓவியப் பயிற்சி மற்றும் நுட்பமான ஓவியத் திறமை ஆகியவை இல்லாமல் இவை சாத்தியமில்லை என்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். எங்கள் சந்தேகம் சரியா?
அனைவரிடமும் கேமரா இல்லாதிருந்த ஒரு காலத்தைய நிகழ்வுகள் என் மனதில் புகைப்படங்கள் போல பதிந்து இருக்கின்றன. Photographic memory என்பார்களே அது போல. அந்தச் சித்திரங்களைப் பார்ப்பவர்களுக்கு என்றோ எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தினைப் பார்த்து வரைந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இந்தச் சித்திரங்கள் எனக்கு மனப்பாடம் ஆன காட்சிகளிலிருந்தே வெளிப்படுகின்றன. அந்தக் காட்சிகளின் perspective மற்றும் proportion ஆகியவை என் மனதில் பதிந்துள்ளன. அவற்றையே நான் வரைகிறேன். அதோடு நான் Perspective டிராயிங் வரைவதில் மிகுந்த கவனம் செலுத்தி பயிற்சி எடுத்திருக்கிறேன். கருணன் சார் தான் அதில் என்னை வழி நடத்தினார் எனலாம். Perspective டிராயிங்கின் அடிப்படைகளை நான் அறிவார்த்தமாக உணர பெரிதும் பிரயத்தனப் பட்டிருக்கிறேன். அதன் பிறகு நான் கற்றவற்றை நடைமுறைப்படுத்தி மெருகேற்றி என் ஓவியங்களில் கையாள்கிறேன். அது தான் அவற்றின் தனித்தன்மை என நினைக்கிறேன்.
உங்கள் வண்ணத் தேர்வுகள் முற்றிலும் தனித்துவம் வாய்ந்தவை. பளீர் வண்ணங்களைத் தவிர்த்து பெரும்பாலும் நிலம் மற்றும் பேஸ்டல் வண்ணங்களையே நீங்கள் உபயோகிக்கிறீர்கள். இதனை விரிவாக விவரிக்க முடியுமா?
வேறு எந்தப் புற உந்துதலும் இல்லாமலிருந்த ஒரு சூழலில் படம் வரையும் ஆர்வம் ஏற்பட்டது கடவுளின் அருள் என்று தான் நான் நினைக்கிறேன். ஆர்வம் இருந்தால் தானே நம் முயற்சியில் அதை மேலும் விரிவு படுத்த முடியும். அதே வேளையில் perspective, கேமராவின் உயரம் படத்தின் காலம் நேரம் ஒளியின் மூலம் அதற்கேற்றவாறு நிழல்கள் வண்ணங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது இப்படி பல விஷயங்கள் குறித்து ஆழமாக சிந்தித்துதான் படம் வரைய வேண்டும். பெரும் பயிற்சிக்குப் பிறகே இது எனக்குள் இயல்பாய் நிகழ்கிறது என்பதாகவே நினைக்கிறேன்.
உங்கள் ஓவியங்களில் நுணுக்கமான விவரங்கள் விரவியிருப்பதைப் பார்க்கிறோம். செங்கல் சுவர்கள், கல் சுவர்கள், கூரை வடிவங்கள், தரைகள் மற்றும் கேரளத்தின் டவுன் மற்றும் கிராம வாழ்வு ஆகியவை பெரும் டீடெயிலிங் மற்றும் உயிர்ப்போடு உங்கள் ஓவியங்களில் விரிகின்றன. ஒரு புது பாணியிலும் காண்கின்றன. இதனை எப்படி வளர்த்தெடுத்தீர்கள்?
அந்தக் காலத்தில் சிமெண்ட் பூசப்படாத செங்கல் சுவர்கள் நான் படித்த மற்றும் பார்த்த பள்ளிகளிலும் கட்டிடங்களிலும் சாதாரணம். அவற்றின் texture அந்தக் காலத்திற்கான சாயலை உண்டாக்கப் பெரிதும் உதவும். அதே போல வாட்டர் கலர் சித்திரங்களில் ஒரு சிறிய பரப்பில் மிகவும் மெலிதான பிரஷ்கள் பயன்படுத்தி நிறைய நுணுக்கமான விபரங்கள் கொண்ட சித்திரங்களை வரைய முடிகிறது. இதற்காக தனியாக அக்கறை எடுத்துக் கொள்வதால்தான் என் சித்திரங்கள் வித்தியாசமானவையாக தெரிகின்றன என்று நினைக்கிறேன்.
கேரளாவின் தற்போதைய சூழலில் ஓவியங்கள் குறித்த நிலைப்பாடு? ஓவியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா?
ஒரு கலைஞன் வளர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் கலையினை வாழ்வாதாரமான தொழிலாகக் கொண்டு வாழ முடியாத சூழலே இங்கும் நிலவுகிறது. இது ஓவியத்திற்கு மட்டுமானதல்ல, எல்லாக் கலைகளின் நிலையும் இதுதான். எனவே பெரும்பாலும் கலைஞர்கள் வேற்றூர்களில் தங்கள் வாழ்விற்கான ஒரு தொழிலைத் தேடுவதுதான் இயல்பாக உள்ளது. அது ஏன் அப்படி என்று கேட்டால், அது அப்படித்தான் இருக்கிறது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
தலசேரி மற்றும் கண்ணூர் பகுதிகளில் மேலதிகமும் ஓவியப் பள்ளிகள் மற்றும் நீர்வண்ண ஓவியர்கள் நிறைந்து காணப்படுகிறதே... இதன் பின்புலம் என்ன? நீங்கள் தற்போது வாழுமிடத்தில் ஓவியம் சார்ந்த முன்னெடுப்புகள் என்ன? அவற்றிற்கான எதிர்வினை எப்படி உள்ளது?
இங்கு நான் interior decoration துறையில் வேலை செய்கிறேன். இங்கும் ஓவியங்களுக்கு இரசிகர்கள் இருக்கிறார்கள். ஓவியக்கலைக்கு வரவேற்பும் ஆதரவும் இருக்கிறது. தலசேரி பாணி தான் என் ஓவியங்களிலும் உள்ளது. இந்த பாணி பலரும் எளிதில் அடையாளம் காணும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தலசேரி பாணியின் தனித்தன்மை குறித்து கே.கே.மாரார் சார் பல்வேறு சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதை நான் கேட்டிருக்கிறேன். தலசேரி சுற்று வட்டார மக்களுக்கு ஓவியத்தின்பாலுள்ள ஆர்வம்தான் இங்கு ஓவியக்கலை இவ்வளவு முக்கியத்துவம் பெறக் காரணம் என்று நினைக்கிறேன். இங்கே குவைத்தில் கூட 90 சதவிகித கேரள ஓவியக் கலைஞர்கள் தலசேரி பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள்தான். இதற்கு முக்கிய காரணமானவர் திரு சி.வி.பாலன் அவர்கள். அவரால்தான் தலசேரி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் துவக்கப்பட்டது. ஒருவேளை அவரது பாணிதான் தலசேரி பாணியாக இருக்கலாம்.
கேரளத்தில் ம்யூரல் பெயின்ட்டிங் எனப்படும் சுவரோவியங்களின் எழுச்சியின் பின்னணி என்ன? பெரும்பாலான ஓவியர்கள் இந்தப் பணியை மேற்கொள்கிறார்களே...
பயிற்சியின் மூலமாக mural ஓவியங்கள் வரைவதைக் கொஞ்சம் எளிதாகவே கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் mural ஓவியங்களின் அலை இப்பொழுது உருவாக்கியிருக்கிறது என எண்ணுகிறேன். நமது பாரம்பரிய முறை என்பதால் மக்கள் அதை அதிகம் விரும்புகின்றனர். அதுவும்கூட ஒரு காரணம்.
நீங்கள் ரியலிச ஓவியங்களைப் படைப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறீர்களா? அப்ஸ்ட்ராக்ட் ஓவிய உலகத்தைக் குறித்த உங்களது பார்வை என்ன?
நிச்சயமாக abstract ஓவியங்கள்தான் எனக்கு மேலதிகமும் விருப்பமானவை. Realistic ஓவியங்களில் ஒரு எல்லைக்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை எனும் நிலை எட்டி விடும். அதனால்தான் abstract முறை எனக்கு விருப்பமானது. அது மேலும் ஆழமாக சிந்தித்து செயல்படும் வாய்ப்பை அளிக்கிறது. நான் இப்போது வரையும் பாணியிலிருந்து விலக சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். Abstract குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியதுமிருக்கிறது. முற்றிலும் புதிய தளத்திலல்லவா அப்ஸ்ட்ராக்ட் செயல்படுகிறது. Realistic என்பது ஏறக்குறைய புகைப்படத்தை ஈயடிச்சான் காபி எடுப்பது போலத்தானே. என் பாணி சித்திரங்களை abstract ஆக செய்ய சில முன்னெடுப்புகளைச் செய்து பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக abstract தான் குறிக்கோள்.
நீங்கள் தற்பொழுது வெளிநாட்டில் வாழ்கிறீர்கள் அல்லவா? இருந்தாலும் உங்கள் பெரும்பான்மையான படைப்புக்கள் இளம் பிராயத்து நிகழ்வுகளைத்தான் சித்தரிக்கின்றன. இதற்கு என்ன காரணம்? கடந்த காலம் குறித்த ஏக்க உணர்வா, இல்லை புதிய நிலத்தின் காட்சிகள் உங்களுக்கு படைப்பூக்கம் தரவில்லையா?
ஆம். என் பெரும்பான்மை சித்திரங்கள் இளமைக்கால நினைவுகளின் பதிவுகள்தான். நான் ஏற்கனவே சொன்னதுபோல புகைப்படம் எடுப்பது எல்லோருக்கும் சாத்தியமாக இல்லாமல் இருந்த காலத்தின் புகைப்படங்கள் போன்ற என் சித்திரங்களைப் பார்க்கும் சமகால மனிதர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. அதற்காகத்தான் வரைகிறேன். இந்த சித்திரங்களை படைக்கும்பொழுதும் அதை மற்றவர்கள் விரும்பி ரசிக்கும்பொழுதும் கிடைக்கும் ஆனந்தம் தனித்தன்மையானது. புது இடத்தின் காட்சிகளையும் சித்தரிக்க வேண்டும்தான். அதற்கு நேரம் கிடைக்க வேண்டும். அது மட்டுமல்லாது இதுவரை வரைந்ததை விடவும் பல மடங்கு சித்திரங்கள் இன்னும் என் மனதில் தேங்கிக் கிடக்கின்றன. முதலில் அவற்றை வரைய வேண்டும்.
உங்கள் ஓவியங்கள் ஒரு காட்சியின் சித்தரிப்பு என்பதையும் தாண்டி ஒரு கணத்தின் உணர்வினை சித்தரிப்பவையாக உணர்கிறேன். அது சரிதானே? வெளிநாட்டினராலும் இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறதா? உங்கள் அனுபவம் என்ன?
ஆம் அது உண்மை தான். உணர்ச்சிகளின் ஆதிக்கம் மிகுந்த சித்திரங்கள் படைப்பதும் என் நோக்கம் தான். புலம்பெயர்ந்தவர்கள் மிகுந்திருக்கும் இந்தக் காலத்தில் அனைவருக்கும் பழமையின் மீதான ஏக்கம் மிகுந்திருக்கிறது. என் படைப்புகளில் பொதிந்துள்ள இந்த ஏக்கம் கேரள மக்களால் மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களையும் ஆட்கொள்ளுகிறது. இவ்வோவியங்களை இங்குள்ள பல்வேறு நாட்டினரும் குறிப்பாக பிலிப்பைன்ஸ், எகிப்துக்காரர்கள் கூட விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். என்னுடைய படைப்புகள் சில மெய்நிகர் காட்சியகங்களிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.
அடுத்த தலைமுறை ஓவியர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் என்ன?
இளைய தலைமுறை கலைஞர்களிடம் சொல்வதென்றால் தொடர்ந்து கடுமையான முயற்சி மேற்கொள்ளுங்கள். எந்தத் துறையானாலும் முயற்சி இருந்தால்தானே சாதிக்க முடியும். அதே போன்று ஓவியத்தில் ஆர்வமும் திறமையும் இருந்தால் அதை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள். தொழில்முறையில் நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அது மருத்துவமாகட்டும் பொறியியல் ஆகட்டும் இல்லை வேறு எதுவாகவோ இருக்கட்டும். அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்ற ஓவியத் திறம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->





சிறப்பு அரவிந்த்.
ReplyDeleteமொழிபெயர்ப்பின் எல்லா வடிவங்களிலும் கால் பதித்து வருகிறீர்கள். நல்ல நாவல் ஒன்று உங்களால் தமிழில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பிரசன்னன், கோவை.
நன்றி பிரசன்னா. உங்களைப் போன்ற தீவிர வாசிப்பாளரின் பாராட்டு விலைமதிக்க முடியாதது. முயற்சிக்கிறேன்.
Delete