Skip to main content

இருவாட்சி இதழில் வெளியான என் சிறுகதை. ஓவியம் : ஜீவா அவர்கள்

ஏறு தழுவுதல்

சிறுகதை-அரவிந்த் வடசேரி

ஓவியம் -ஜீவா

மணி ஆறைத் தாண்டி விட்டது. மற்ற வண்டிகளிலும் வியாபாரம் மந்தமாகத் தான் இருந்தது. வெகு நாட்களாக இருக்கும் சிவக்குமார் அண்ணன் வண்டியினைச் சுற்றி மட்டும் வழக்கம் போல் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் நின்றிருந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறது கடை அடைக்க. நேற்றை விடவும் இன்று வியாபரம் குறையாமல் இருந்தாலே போதும். வண்டி தள்ளத் துவங்கி ஒரு மாதம் கடந்து விட்டது. ஏதோ தட்டுத் தடுமாறி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் ப்ரூக்ஸில் தான் வேலை. கொரோனா காரணமாக மால் மூடப்பட்ட பொழுது இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் திறந்து விடுவார்கள் என்று தான் நம்பியிருந்தார்கள். முதல் மாதம் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாகத் தான் தந்தார்கள். பிறகு அவர்களும் தரவில்லை, நானும் கேட்கவில்லை.

      இரண்டு மாதம் முன் வரை, எப்படியோ, இலவச உதவிகள் கொண்டு தாக்கு பிடிக்க முடிந்தது. பிறகும் நிலைமை சீராகும் வாய்ப்பே தெரியாததால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் எனும் எண்ணம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அம்மா வேலை செய்து வந்த காய்கறிப் பண்ணை பெரிய பாதிப்பின்றி மீண்டும் செயல்படத் துவங்கியதால் நிலைமையினை சமாளிக்க முடிந்தது. இருந்தாலும் இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படியே காத்துக் கொண்டிருப்பது எனும் கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. தொற்றின் காரணமாக வேலை இழந்த பலரும் சாலையோரக் கடைகள் துவங்கி விட்டார்கள். நிறைய காய்கறிக் கடைகளும் கையேந்தி பவன்களும் தான். தொற்றுநோய்க் காலம் என்பதாலோ என்னவோ பெரிய கெடுபிடிகள் இல்லாமலிருப்பதும் பலரையும் தங்கள் அதிரஷ்டத்தினை சோதித்துக் கொள்ள தூண்டுகிறது போலும்.

       புதூர் , வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. போக்குவரத்து வசதிக் குறைவால் பல காலம் அமைதியாக இருந்தது அது. அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ அரசு ஊழியர்கள் தான் அதிகமாக வீடுகளை வாங்கியிருந்தனர். பெரும்பாலானோர் ஓய்வு பெற்றதும் நகரத்தின் சந்தடியிலுருந்தும் அவசரங்களலிருந்தும் விலகி ‘அக்கடா’வென இருக்க வந்தவர்களாயிருந்தனர். இரவு எட்டு மணிக்கெல்லாம் கடைகள் அடைக்கப்பட, சாலையோர மரங்கள் மூடுபனியில் மறைந்து அரவமற்ற ஊர் சில்லிட, ஏக்கங்களும் முனகல்களுமாக உறங்கிப் போன பகுதி. கடன் கிடைப்பது எளிதாகி, சாலை வசதி, பஸ் வசதி, சொந்த வாகனங்கள் மிகுதி என பல காரணிகள் உந்த, ஊர் வளர ஆரம்பித்தது. நகரத்தில் சொத்துக்களின் விலை கைக்கெட்டாத மக்களுக்கு ‘சொர்க்கம்’ என புகலிடமாக மாறியது புதூர். சில கல்லூரிகளும் அருகாமையில் அமைய, புதிதாக சிறு வியாபாரங்களும் உணவகங்களும் உருவாக, இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கி விடும் ஊர் இப்பொழுது நள்ளிரவு வரை துடித்தும் அடங்காத பிரதேசமாக மாறி விட்டிருந்தது. விடாப்பிடியாக இன்னும் சிலர் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தாலும் விரிவாக்கத்தின் கைப்பிடியில் சிக்கி விளை நிலங்கள் விரைவாக மனைகளாக மாறிக்கொண்டிருந்தன.

       ஊர் திடீரென விழித்தெழுந்ததுபோல் , வெகுவாக வளர்ந்து விட்டிருந்தது. மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகளும் வணிகங்களும் பெருகின. சாலை விரிவாக்கத்திற்காகவும் இடைஞ்சலாக இருப்பதாக வணிகர்களும் செல்வாக்குமிக்க மனிதர்களும் எண்ணியதாலும் வெட்டப்பட்டவை போக இன்னும் சில மரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. வீட்டின் மீது விழுந்து விடுமோ என அஞ்சி மரத்தின் ஒரு கிளையினை வெட்டியவர்கள் மேல் ஆவேசமாக பாயும் சட்டம் செல்வாக்கு மிக்கவர்கள் பெரிய மரங்களை அடியோடு வெட்டினாலும் பாராமுகமாயிருந்தது. என்னதான் சாலை அகலப்படுத்தினாலும் ஒழுங்கும் கவனமுமற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அவை போதாமலே இருக்கின்றன. நவீன யுகத்தின் அடையாளங்களான அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் சுய சேவை அங்காடிகளும் கூட வந்தாயிற்று. இருப்பினும் இந்த ஊருக்கு இன்னும் சரியான ஒரு உணவகமோ மருத்தவமனையோ அமையவில்லை. பெரும்பாலும் கொண்டாட்டங்கள் நகர மத்தியில் அமைந்துள்ள மால்களிலோ பிரசித்தி பெற்ற உனவகங்களிலோ நடத்துவதையே நடுத்தர மக்கள் கூட விரும்புகின்றனர். சாதாரண நாட்களுக்கு கையேந்தி பவன்களும் மெஸ்களுமே தோதானவை. பல வங்கிகளின் கிளைகள்,வணிக மையங்கள் சொகுசு அழகுநிலையங்கள், உடற்பயிற்சி மையங்கள் என அடுத்த எட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஊர், பெருந்தொற்றினால் முடங்கிப்போயிற்று.

       கல்லூரிகள் மூடப்பட்டதும் சோம்பிக்கிடந்த ஊர், வீட்டிலிருந்தே வேலை என இளம் தலைமுறையினர் ஊர் திரும்பியதும் கொஞ்சம் விழித்துக் கொண்டது. பகல் முழுதும் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள் மாலை நேரங்களில் இளைப்பாற விளையாட்டுத் திடலை ஒட்டி குழுமினர். அவர்களுக்கு சேவை செய்ய ஓரிரு கையேந்தி பவன்களும் இருந்தன. நல்ல வியாபாரம் இருப்பது போல் தான் தெரிந்தது.’ரொம்ப’ நாளாக சுய தொழில் செய்யவேண்டும் எனும் எண்ணத்தினை செயல்படுத்த இது தான் சரியான தருணம் எனத் தோன்றியது. உணவுப் பொருட்கள் வியாபாரம் தான் மிகவும் லாபகரமானது என்று பலரும் சொல்லக் கேட்டிருந்தேன். குறைந்தது 30 சதவிகிதமாவது கையில் நிற்கும் என்பது தான் பேச்சாக இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் வெற்றிக்கதைகள் வாட்சாப்பிலும் டி வி யிலும் வரவும் இது தான் என்று முடிவு செய்வது சிரமமில்லாமல் இருந்தது. அம்மாவின் ஆசியுடன் ஒரு வண்டி வாடகைக்கு எடுத்து பாத்திரம், ஸ்டவ் என வாங்கி வெற்றிகரமாக ஆரம்பித்தாகி விட்டது. இலாபமெல்லாம் என்னவோ வர வாய்ப்பிருந்தாலும் வியாபாரமாவது தான் சிரமம். நான் கடை துவங்கிய பிறகு இன்னும் இருவர் புதிதாக கடை போட்டிருக்கிறார்கள். சில கடைகள் இடம் பெயர்வதும் கைவிடப்படுவதும் நடந்துக் கொண்டிருந்தது.

       நடைப் பயிற்சி செய்பவர்கள், குழந்தைகளின் விளையாட்டு பயிற்சிக்கென வருபவர்கள், சினேகிதங்களுடன் பொழுது போக்கும் இளம் தலைமுறை, உணவு உண்ண குடும்பத்தினருடன் வருபவர்கள் என பல வகையான மக்கள் மாலை நேரங்களில் இங்கே வருவார்கள். வயதான நடையர்கள் சூரியன் விழும் முன்னரே நடையை முடித்து வீடு சென்று விடுவார்கள். இருட்டில் பார்வை பிரச்சனையோ இல்லை தொலைக்காட்சித் தொடரின் ஈர்ப்பாகவும் இருக்கலாம். உடல் இளைக்க வேக நடை போடும் தடித்தவர்களுக்கு ஈடாக நடக்கும் ஒல்லியானவர்களுக்கு என்ன நோயோ என்னமோ? முழு ஒப்பனையும் கவர்ச்சியான உடையும் கொண்டவர்கள் அழகு பேண நடப்பவர்கள் என்றால் உடல் கொள்ளா சிறு பனியன்களில் பிதுங்கும் சதைகள் கவலையற்று காட்சிப்படுத்தி உடலைக் கட்டிப்போட முயலும் மேல் நடுத்தர மங்கைகள் அனைத்து வயதினரும் உண்டு. மருத்துவர்களால் தூண்டப்பட்டு, சுகரும் பிரசரும் விரட்ட, சேலையும் நைட்டியும் அணிந்து, தனியாகவும் துணையுடனும் நடைபயிலும் மீட்கப்பட்ட இல்லத்தரசிகளும் தளர்நடையிடும் கருவுற்ற தாய்மார்களும் சிலர். நண்பர்கள் புடை சூழ உரக்கப் பேசி நடக்கும் ஆண்களும், விரைத்த முகததுடன் தனியாக வேக நடைபோடும் சிலரும் இந்தப் பக்கம் பார்ப்பது கூட இல்லை. நடையின் போது கூட நிறுத்தாமல் பேசிச் செல்லும் தம்பதியினர் அதிர்ஷ்டசாலிகளா என்ன?

       குழந்தைகளை பயிற்சிக்கு அழைத்து வருபவர்களில் சிலர் விட்டுவிட்டுப் போய், பயிற்சி முடியும்பொழுது வந்து கூட்டிச் செல்வார்கள். சில இளம் பெற்றோர்கள் காத்திருந்து குழந்தைகளின் முன்னேற்றத்தினை ஆராயவும் மற்ற பெற்றோர்களுடன் அளவளாவவும் செய்வார்கள். விளையாட்டில் அக்கறை கொண்டவர்கள் என்றாலும் தொழில்முறை வீரர்களாக்க முனைப்பும் தைரியமும் வாய்ப்பும் எவ்வளவு பேர்களுக்கு கிட்டுமோ? நிறைய இளம் பெற்றோர்கள் குழந்தைகளை ‘வாங்க, போங்க’ என அழைப்பது வெளியில் மட்டும் தான் இருக்குமோ? அவர்களும் குழந்தைகளை திட்டுபவர்களும் அடிப்பவர்களுமாக இருக்கலாம். இவர்களில் சிலர் சில நாட்கள் இங்கு சாப்பிடவும் செய்வார்கள்.

       சாப்பிட என்றே வரும் இளைஞர்களும் குடும்பங்களும் தான் முக்கிய வருவாய் அளிக்கக் கூடியவர்கள். சிவக்குமார் அண்ணன் போல, தினமும் சாப்பிட வரும் சிலரையாவது வாடிக்கையாளர்களாக்கி விட்டால் தப்பித்து விடலாம். ஆனால் திண்பண்டங்கள் கொஞ்சம் நாட்கள் சாப்பிட்டால் ஆசை அடங்கி விடும். ஏதாவது புது ஐட்டங்களோ மாற்றங்களோ செய்ய வேண்டும். ஓரளவு பெயர் வந்து விட்டால் மாறி மாறி ஆட்கள் வருவது போல இருந்தால் தான் நீடித்து நிற்க முடியும். இல்லை என்றால் மூலிகை, ஆர்கானிக், சிறு தானியம் என ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் அதிலும் இப்போது போட்டி தான். மாலை இருள் கவியத்துவங்கியது. நடப்பவர்களும் நிற்பவர்களும் சாப்பிடுபவர்களுமாக கூட்டம் களைகட்டத் துவங்கியது. கடைக்கு வந்த சிலரும் சூப் மட்டுமே குடித்துச் சென்றனர். சாப்பிடுபவர்கள் வர இன்னும் கொஞ்சம் நேரமாகும்.

       திடீரென புதிதாக ஒரு காளை மாடு வந்து சிவக்குமார் அண்ணன் பக்கத்தில் நின்றது. கோயில் காளை போன்று கம்பீரமான உடலமைப்பும், மூக்கனாங்கயிறோ வேறு எந்த ஒரு கயிறும் இல்லாமல் சுதந்திரமாக இருந்தது. சாப்பிடக் கூடியிருந்தவர்கள் சில அடிகள் பின் நகர்ந்து அச்சத்துடன் பார்த்தவாறு இருந்தனர். இங்கு கைவிடபபட்ட குதிரைகள் சில நாட்கள் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று ஒரு முக்கிய பிரமுகர் மேல் தொற்றி ஏற அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் குதிரைகள் காணாமல் போயின. ஆனால் இந்த கோயில்காளை இதுவரை இங்கு வந்ததில்லை.

       சிவக்குமார் அண்ணனுக்கும் பயம் தான் போல. கொஞ்ச நேரம் அவர் மாட்டின் இருப்பை சட்டை செய்யாது அதுவாகவே போய்விடும் எனும் நம்பிக்கயுடனும் பிரார்த்தனையுடனும் இருந்திருக்க வேண்டும். மாடு சிறிது நேரம் சாப்பிட வந்த வாடிக்கையாளர் போல நின்று கடையினையும் சாப்பிடுபவர்களையும் உற்றுப் பார்த்தது. பிறகு ஆர்வமாக ஒரெட்டு முன் வைத்தது. சாப்பிடுபவர்கள் கொஞ்சம் கலவரமடைந்தனர். சிவக்குமார் அண்ணன் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அவர் மாட்டினை நோக்கி கை உயர்த்தி ‘போ அப்பாலெ’ என்றார். மாடு தலை உலுக்கி முன்னேறப் போவது போல நின்றது. சிவக்குமார் அண்ணன் தோளில் இருந்த துண்டை எடுத்து அதனை நோக்கி வீசி ‘போ போ’ என்றார். மாடு தலை ஆட்டிய படி மீண்டும் முன்னால் வர எத்தனித்தது. நடைப் பயிற்சி செய்யும் சிலர் ஓரக்கண்ணால் பார்த்தபடி விரைந்து கடந்தனர். எல்லோரும் ஏதோ அசம்பாவிதத்தினை எக்திர்பார்த்து ஜாக்கிரதையான தூரம் நகர்ந்து தயாராக நின்றனர். இளைஞர்கள் பயம் கலந்த தைரியத்துடன் ‘ஹை போ போ’ என விரட்ட முயன்றனர். மாடு கொஞ்சம் ஆக்ரோஷமாக தலை ஆட்டியது. சிவக்குமாரண்ணனுக்கு பயம் பிடித்திருக்க வேண்டும். ‘வேண்டாம்பா, கும்பலா சத்தம் போட்டா மிரண்டுக்கப் போவுது’ என்றார். மேலும் பலரின் கவனத்தை பரபரப்பு ஈர்க்க, ஒரு இறுக்கமான சூழல் வேகமாக உருவாகிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் யூ ட்யூபில் கண்ட மிரண்ட காளையினை அடக்க போலீசார் திண்டாடியது நினைவில் வந்தது. அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குழந்தைகளும் வயதானவர்களும் என்ன ஆவார்களோ என்ற கவலை தோன்றியது. ஒன்றுமில்லா விட்டாலும் வண்டியும் மற்ற பொருட்களையும் சேதப்படுத்தினாலே பெரிய நஷ்டம் தான்.

       அடுத்ததாக என்ன செய்வது என எல்லோரும் குழம்பி நிற்கையில் தான் அவர் வந்தார். காவி வேட்டியும் வெள்ளை பாலியஸ்டர் சட்டையும் அணிந்து கருமை ஊடாடிய வெண்ணிறத் தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்ட மெலிந்து கருத்து வயதான தோற்றம் கொண்டவர். அவரும் இங்கு அவ்வளவு பரிச்சயமானவர் போல் இல்லை. நெற்றியில் மெல்லிய விபூதிக் கீற்றும் மணிக்கட்டில் சிவப்பு சரடும் அணிந்திருந்தார். வந்தவர் நேராக காளையின் முன் சென்று ‘போ சாமீ, போ’ என்றார். காளை மீண்டும் தலை ஆட்டியது, ஆனால், அவ்வளவு ஆக்ரோஷமாக அது இல்லை. பெரியவர் பக்கத்தில் இருந்த குடி நீர் கேனில் இருந்து கையில் நீர் ஏந்தி காளையின் முகத்தில் தெளித்து மீண்டும் ‘போ சாமீ, போப்பா’ என்றார். காளை தலை உலுக்கியபடி நகர்ந்து சென்றது. எச்சரிக்கையாய் நின்றவர்கள் அதிர்ந்து வழி விட இருவரும் ஒன்றாக நடந்து மறைந்தனர்.

Comments

  1. Nice one still story can be developed .

    ReplyDelete
  2. KANIAMUDHU AMUDHAMOZHIAugust 4, 2022 at 9:08 PM

    சுற்றுச்சூழல் நடப்புகளை வர்ணிப்பதில் உள்ள சரளம் கதைத்தளக்கட்டமைப்பினை சிறப்பாக செய்கிறது . ஆனால் கதைக்கான அம்சங்கள் குறைவாக உள்ளது. கதையம்சங்களை சேர்த்து எழுதிப் பாருங்கள் மீண்டும்

    ReplyDelete
  3. பழைய கொரோனா காலக்கட்டத்தில் தொடங்கிய கதை, சமீபத்திய பொங்கல் ஜல்லிக்கட்டு காலத்திற்குள் எப்படியோ வந்துவிட்டது போல இருக்கிறது. நடை நன்றாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Please leave a Comment
கருத்துக்கள் வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...