Skip to main content

ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் மணல் மீது வாழும் கடல் - கவிதைத் தொகுப்பு

மணல் மீது வாழும் கடல் - கவிதைகள்

குமரகுரு அன்பு - அகநாழிகை பதிப்பகம்

நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி

குமரகுரு அன்புவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘மணல் மீது வாழும் கடல்’. உலகின் துன்பங்களைக் கண்டு அதிர்ந்த சித்தார்த்தன் அதற்கான தீர்வினைத் தேடி துறவறம் மேற்கொண்டு தேடினான். ஆனால் கவிஞனுக்கு விதிக்கப்பட்டது அத்துயரங்களைத் தன் கவிதைகளில் பிரதிபலித்து, தன்னோடு சேர்ந்து வாசகனையும் இவ்வுலகத்தினையும் தேடத் தூண்டுவதுதானே. தன் கண் முன்னே தோன்றும் வாழ்வின் பல்வேறு துயரங்களையும் சமூக நலம் சார்ந்த அவதானிப்புகளையும் கவிதைகளின் கருவாக்கியுள்ளார் கவிஞர். அவரே சொல்வது போல் காத்திருப்பின் மௌனத்தினை உடைக்கும் கடவுச் சொல் தேடும் முயற்சிகள் இந்தக் கவிதைகள்.

//கடவுச்சொல்
காத்திருந்த நாட்களின்
மௌனம் உடைக்கும்
கடவுச்சொல் தெரியாமல்
இன்னும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
எண்ணங்களை
எங்கிருந்தோ வந்து
என் சொற்களை
என் எழுத்துக்களை
என் சத்தங்களை
தின்றுவிட்டு கடவுச்சொல்லை
போகும் வழியில் துப்பிச் செல்கிறாய்.//

குறையாத நம்பிக்கையின் குரலாக ஒலிக்கும் ‘தவக்களைய பாம்பு முழுங்கும் சத்தம்’ (மழை நாளில் ஒரு தவளை) மழை வருவதற்கான உறுதியான அறிகுறியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடும் செயலினைச் சொல்கிறது ஒரு கவிதை. இப்படி எவ்வளவு நம்பிக்கைகளையும் அறிதல்களையும் நாம் வழிவழியாக அடைந்து வந்துள்ளோம். இவைகளில் ஏற்படக்கூடிய தவறான அம்சங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு கொண்டவராக கவிஞர் இருப்பதையும் காணலாம்.
சமஉரிமைச் சமுதாயத்தினைக் கனவு காணக் காரணமாயிருக்கும் ‘கம்யூனிசம்’ ஈர்க்காத இளமை இருக்க முடியுமா? வலிமை மிகுந்த சுதந்திரமாகத் திரியும் மதம் பிடிக்காத யானையாக கம்யூனிசத்தினைக் கண்டு நிம்மதியடையும் கவிதை, கனவுகளை தக்க வைக்கத் தூண்டுகிறது.

//கம்யூனிசம்
தும்பிக்கையால்
மரத்தை ஒடித்து
தந்தத்தில் அமர்த்தி
நகரும் அதற்கு இன்னும்
மதம் பிடிக்கவில்லை.//

வேண்டுதல்களின் பெயரால் வணங்குதல் விதிமுறைகளின் பெயரால் மனிதன் செய்யும் ‘சர்க்கஸ்’ குழந்தை குட்டிகளுடன் இரசித்துக்கொண்டிருக்கும் கடவுள்களின் சித்திரம்கூட இளமை வேகத்தின் கிண்டல் தான். உண்டியலில் காசு போட்டு வெளியே வந்து, பாடிக் கொண்டிருக்கும் பார்வையற்றவனுக்குக் கொடுக்க சில்லறை இல்லாத நிலையினைச் சுட்டுவதும் இதே மனநிலையின் வெளிப்பாடு. ஆனால் இஸங்களின் கேளவிகளைச் சூறாவளி அடித்துச் சென்றபின் மலரும் மொக்கினையும் இவரே நமக்கு காட்டுகிறார்.

கடவுளைப் போன்றே ஆக்கியும் அழித்தும் விளையாடும் மழலைகள் (இல்லை மழலையைப் போல் கடவுளா?), பௌர்ணமியில் முட்டையிட்டு ஆதவன் அடைகாக்க அமாவாசையில் பொரியும் பேரிரவு, கைவிடப்பட்ட நாயின் பார்வையின் வழியாக வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்வு என வித்தியாசமான கோணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.

இந்தத் தொகுப்பில் கையாளப்பட்ட சில கருப்பொருட்கள் அண்மையில் வெளியாகி உள்ள தொகுப்பில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளன எனும் ஒரு விரைவுப் பார்வை சுவாரஸ்யமானதாக இருக்கும். முதல் தொகுப்பான மணல் மீது வாழும் கடலிலும் சமீபத்திய தொகுப்பான ஒரு உபரியின் கவிதைகளிலும் அப்பாவும் அவர் தன் மகனுக்கு பகிர்ந்தளிக்கும் அவதானிப்புகளும் பாடு பொருளாக இருக்கின்றன.

முதல் தொகுப்பில் தான் கேட்டவைகளை அவருடன் தேடித்திரிந்து கொண்டுவந்து தரும் அப்பாவின் உறுதி மிக்க கால்களை வியந்து நேசிப்பதோடு

//'தவக்களைய பாம்பு முழுங்குற சத்தம் கேட்குது
கண்டிப்பாக மழை வரும்டா தம்பி'
என்றவாறு பிள்ளையின் கைப்பிடித்து
வேகமாக நடக்கத் தொடங்குகிறேன்....
'தவளை பாவம்ல பா' என்ற அவனும்
இனி மழை நாள் தவளைச் சத்தம் கேட்டு
வீட்டுக்கு வேகமாக நடப்பான்.//

தன் நம்பிக்கைகளையும் அறிதல்களையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தியதில் நிம்மதியும் மகிழவும் கொள்கிறார்.ஆனால், அண்மைத் தொகுப்பில் இதுவே

//அன்றொரு இரவு
என் விரல்களை நீங்கள்
இறுகப் பிடித்து நடந்தபடியே
கதைசொல்லி கொண்டே நடந்தோமே
அப்பா.
அப்போது எனக்கு அது வெறும் கதை!
அப்பா சொன்ன கதை ஆதலால்
மறக்க முடியாத கதை.
உங்கள் அப்பா உங்களுக்கும்
அவரின் அப்பா அவருக்கும்
என்ற வரலாற்று கதை அது என்று
எனக்கு அப்போது புரியவில்லை//

என அப்பா சொன்னாலும் அதையும் கேள்விக்குள்ளாக்கி, சுயமாக சிந்தித்து முடிவினை மேற்கொள்ளும் முதிர்வினை அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல்

//உச்சத்திலிருப்பவன்
மிச்சத்தை வைத்திருப்பவனின்
அத்தனையையும் உருவும் அக்கதைகளை
நான் என் பிள்ளைக்கு
சொல்லாமல் விடப்போகிறேன் அப்பா.
மன்னித்தாலும் சரி...
மன்னிக்காவிடினும்.....//

என தீர்க்கமான தன் முடிவினை அறிவிக்கவும் செய்கிறார். இது வரவேற்கத் தக்க முன்னேற்றம் தானே.

ஆவநாழியுடன் முகநூலில் இணைந்து அனைத்து இதழ்களையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் --->

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல் “எல்லாரும் போறாங்கப்பா… நான் அவ்ளவு பிராக்டீஸ் பண்ணியாச்சு. ரொம்ப பாதுகாப்பான எடம்தான்” என்று சாதனா சொன்னாள். விறகு வெடிக்க எரிந்து கணப்பு ஓசையிட்டது. எஞ்சிய டீயை குடித்துக்கொண்டு கோப்பையை கீழே வைத்துவிட்டு ராகவன் “எந்த ஊர்னு சொன்னே?” என்றார். “இன்வெர்நெஸ்” என்றாள் சாதனா. ராகவன் தன் செல்பேசியை எடுத்து அந்த இடம் எது என்று பார்த்தார். நெஸ் ஆற்றின் அழிமுகம். முழுமையாகவே உறைந்து பனிப்பாளப் பரப்பாக ஆகிவிட்டிருப்பதுதான் நெஸ் ஆறு. அந்த பனித்தரைக்குள் அது மௌனமாக, ரகசியமாக கடலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் அப்பெயரை அதற்கு முன் கேட்டிருக்கவில்லை. ஆகவே அது ஒரு செயல் என்று நினைத்தாள். “அப்டின்னா என்னது? ரொம்பக் குளிரா இருக்கிறதச் சொல்றாங்களா?” என்று கேட்டாள். அவள் அடைந்த குழப்பத்தை உடனே சாதனா புரிந்துகொண்டாள். வழக்கம்போல பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துவிட்டு, அவளுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டி கொஞ்சி, “சோ க்யூட்” என்ற பின் “அது ஒரு ஊர்மா” என்றாள். “அதான் எந்த ஊருன்னு கேட்டேன்” “இன்வெர்னெஸ்னா நீ என்னமோ கைன்ட்நெஸ், கிய...

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக...

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...