கருத்தரங்க உரை
அரவிந்த் வடசேரி
கல்லூரிக் கருத்தரங்கில் என் பேச்சு
அனைவருக்கும் வணக்கம்!
இவ்வளவு பெருமைவாய்ந்த கருத்தரங்கில், பெரும் படைப்பாளிகள் பேசி சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்த அரங்கில் எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியதற்காக அமைப்பாளர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பேச அழைத்தபோது நான் தேர்வு செய்ததுதான் ‘மொழிபெயர்ப்பிலக்கியத்தில் அண்மைக்கால போக்குகள்’ எனும் இந்தத் தலைப்பு. கருத்தரங்கின் பொதுத் தலைப்பான “அண்மைக்கால இலக்கியம் : படைப்பும் வாசிப்பும்’ என்பதோடு பொருந்திப் போகிறதாக இதை நான் தெரிவு செய்தபோது பொதுவான நடைமுறை எனும் பொருளைத் தான் நான் எண்ணியிருந்தேன். அழைப்பிதழில் தலைப்பைக் கண்ட நண்பரொருவர் ‘நல்ல தலைப்பு, நீங்கள் நிறைய மொழி பெயர்ப்பு எழுத்தாளர்களை, படைப்புகளை அறிமுகம் செய்யலாம்’, என்றார். ஆனால் அதற்கு பரந்துபட்ட தொடர்ந்த மொழிபெயர்ப்பு வாசிப்பு அவசியம்.
நான் வாசிக்கத் தொடங்கிய நாட்களிலேயே மொழிபெயர்ப்பு என்று பிரித்துப் பார்க்காத ஒரு வாசிப்புச் சூழல் தான் அமைந்தது. முக்கியமாக அந்தக் காலத்து மாத்ருபூமி வார இதழில் வி எஸ் காண்டேக்கர், ஆஷாபூர்ணா தேவி, ஸ்ரீகிருஷ்ண ஆனஹல்லி போன்றவர்களின் நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்ததையெல்லாம் வாசித்து நேசித்திருக்கிறேன். வாசிப்பு இன்னும் சிறிது விரிவான பிறகு காஃப்கா, காம்யூ, குந்தேரா போன்றவர்களின் படைப்புகளின் ஆங்கில மற்றும் மலையாள மொழியாக்கங்களையும் வாசிக்க முடிந்தது.
ஆனால் பிறகு தீவிர இலக்கியத்தின் பரிச்சயம் ஏற்பட்ட பிறகு மொழிபெயர்ப்புகளைவிட மூலமொழியில் வாசிப்பது தான் சிறப்பு எனும் எண்ணம் தோன்றியது. எனவே தமிழ், மலையாளம், ஆங்கிலம் என வாசிப்புக் குவிப்பு ஏற்பட்டு விட்டது. மூலமொழியிலேயே வாசிக்க ஏராளமானவை இருப்பது தெரிய வந்ததும் அவற்றின் எல்லையில்லா வாசிப்பனுபவமும் மொழியாக்கத்தின்பால் கவனம் கொள்வதை தடுத்து விட்டது எனலாம். அதற்கு ஒரு முக்கிய காரணம் அப்பொழுது கைக்கெட்டிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டவைதான். தற்போது இருப்பது போன்ற இணைய வசதிகளற்ற அந்த நாட்களில் புத்தகங்கள் குறித்த செய்திகள் பகிர்வதற்கான வாய்ப்புகளும் வாங்குவதற்கான வசதிகளும் குறைவு.
அதன்பிறகு நமது ரசனையின் தரத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டபொழுது நம்மை மிகவும் கவரும் தமிழ் அல்லாத மொழியில் வாசிக்கின்ற ஒரு படைப்பினை இலக்கிய ரசனையுடைய நண்பர்களோடு பகிர்ந்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறியவேண்டும் எனும் ஆர்வம் எழுந்தது. அப்படித்தான் என் கவனம் மொழிபெயர்ப்பின் மீது மீண்டும் பதிந்தது. பிறகு கொஞ்சம் காலம் அதில் புழங்கிய பிறகுதான் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படிச் செய்கிறார்கள்? மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் என்ன? என்பது போன்ற சிந்தனைகள் எழுகின்றன. என்னுடைய இந்தப் பேச்சும் அது போன்ற சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதாகத்தான் அமைத்திருக்கிறேன். மேலும், நூல் மற்றும் ஆசிரியர் பரிந்துரைகள் பல நேரங்களில் அனைவருக்கும் ஏற்புடையவையாக அமைவதில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்த தேடலின் வாயிலாகத்தான் மனதிற்கிணக்கமான படைப்புகளையும் ஆசிரியர்களையும் கண்டடைய வேண்டும். மொழிபெயர்ப்பு குறித்து உங்கள் சிந்தனைகளைத் தூண்ட இவவமர்வு உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
மொழிமாற்றம் ஏன்? இதற்கான பதில் மிக எளிதானது. ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட கருத்தை - கதையை - பாடலை - செய்தியை அந்த மொழி தெரியாத மக்களுக்கு கடத்துவதே மொழிபெயர்ப்பின் நோக்கம். இலக்கியம் சாரா எழுத்துக்களை மொழிபெயரக்கையில் அது அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாகச் செய்ய வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாகக் கொள்ளப்படும். இருப்பினும் துறை சார்ந்த வழக்கு மொழியினையும் வார்த்தைகளையும் பயன்படுத்துவது அவசியமாகலாம். ஆனால் இலக்கிய மொழிபெயர்ப்பு அப்படியல்ல. தருமொழியில் அமைந்துள்ள நயமும், நடையும்கூட பெறுமொழியின் இலக்கணத்திற்குட்பட்டு மொழிமாற்றம் செய்யவேண்டிய அவசியம் உள்ளது. தருமொழிக்கே உரித்தான சொலவடைகள், பழமொழிகள், படிமங்கள், பிம்பங்கள், தொன்மங்கள், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார குறியீடுகள் போன்றவை அதே தாக்கத்துடன் பெறுமொழிக்கு மாற்றுவது சவாலான பணியாகும்.
மொழிமாற்று இலக்கியத்தின் நோக்கத்தினை அடைய பல்வேறு உத்திகள் முயற்சிக்கப்பட்டுள்ளன. மிக எளிமையான நேரடி செயற்பாடு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது. பெறுமொழியின் வாக்கிய அமைப்பின் மாற்றத்திற்கேற்ப வார்த்தைகள் சிறிது இடம் மாற வேண்டியிருக்கலாம். இப்படி உருவான ஒரு மொழிபெயர்ப்பு மூலப்படைப்பிற்கு வெகு அருகே இருக்கும் எனினும் பெறுமொழியில் கலாச்சாரத்தில் இல்லாத வழக்குகளும் நிகழ்வுகளும் இப்படியான ஒரு உத்தியினை பயன்படுத்த தடையாக அமையலாம். இலக்கியத்தை இலக்கியமாகச் செய்வது தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளினால் தான். அவற்றிற்கு நேரடியான ஒரு பொருள் இருப்பதோடு மறைமுகமான ஒரு அர்த்தமும் இலக்கிய பயன்பாட்டில் அமைந்து விடுகிறது. இந்தத் தொனி சமூகம், கலாச்சாரம் மற்றும் மொழிப் பயன்பாட்டு கூறுகளால் அமைகிறது. பெறுமொழிச் சூழலில் நேரடியான மொழிபெயர்ப்பில் இந்த நயத்தினை உணர்த்தமுடியாத தருணங்களில் இணையான வழக்கு மொழியினை பயன்படுத்துவதால் ஈடு செய்ய முடியும். இது போன்ற ஒரு சமரச அனுக்குமுறைதான் நல்ல மொழிபெயர்ப்பு என பெயரக்கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். இதைத்தவிர சுதந்திரமான மொழிபெயர்ப்பு, மறு ஆக்கம், குறுவடிவம் என பல்வேறு முறைகளிலும் மொழிமாற்றம் நடைபெறுவதுண்டு.
பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயற்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. கம்பராமாயணம் வால்மீகியின் ராமாயணத்தை ஒட்டி எழுதப்பட்ட காவியம். ஆனால் அது ஒரு சுதந்திரமான மொழியாக்கம். கமபராமயணத்தின் பல நிகழ்வுகளும் தருணங்களும் மூலப்படைப்பிலிருந்து மிகவும் மேம்பட்டு கவித்துவம் மிகுந்து அமைந்திருப்பதை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே போன்று பல நிகழ்வுகளின் வருணனைகள் தமிழ் மரபின் வழக்கின்படி மாற்றி அமைந்திருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கலை நிஜத்திலிருந்து இரண்டு முறை விலகி நிற்கிறது என்பது பிரபலமான கூற்று. அக்கூற்றின்படி மொழியாக்கம் நான்கு முறை விலக்கம் கொண்டுள்ளது எனலாம். மொழியாமாற்று படைப்பாளி மூலப்படைப்பின் பொருளினை அதன் நயத்துடன் உணர்ந்துக் கொள்வதோடு தன் மொழிப்புலமையையும் படைப்புத்திறனையும் கொண்டு பெறுமொழிப் படைப்பாக மாற்றியமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மொழிபெயர்ப்பு என அடையாளம் காணமுடியாத வகையில் அதே நேரம் மூலநூலுக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பு தான் வாசக இன்பத்தை அளிக்கும். மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து வாசிப்பவராகவும் வாசித்தவற்றில் சிறப்பான அல்லது பொருத்தமான படைப்பை சரியாக அடையாளம் காண்பவராகவும் இருக்கவேண்டியுள்ளது.தற்பொழுது அனைத்து சிறுபத்திரிக்கைகளும் இணைய இதழ்களும் மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளன. தங்களது சிந்தையைக் கவர்ந்த கதைகள், கவிதைகள், கட்டுரைகளை மொழிமாற்றம் செய்து வெளியிடக் கோரி அவர்களை அணுகுகின்றனர் மொழிபெயர்ப்பாளர்கள். எடுத்துக்காட்டுகள் என்னுடைய மொழிபெயர்ப்பிலிருந்தே தர விரும்புகிறேன்.
மொழிபெயர்ப்புகளை ஆவநாழியில் வெளியிடலாம் எனும் ஆலோசனையை சுதேசமித்திரன் அவர்கள் தெரிவித்தபொழுது எனக்கு முதலில் மனதில் தோன்றியது கே ஆர் மீரா அவர்களின் டெரரிஸ்ட் எனும் கதை தான். கேரளாவிலிருந்து டெபுடேஷனில் தில்லிக்கு பாடநூல்களை எழுதச் சென்ற ஒரு சரித்திர ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சித்தப்பிரமை ஏற்பட்டு தன் மனைவியையே தீவிரவாதி எனச் சந்தேகிக்கும் கதை அது. ஒரு பகடியின் தொனியில் சொல்லப்பட்டாலும் நிகழ்கால சூழலின் அச்சத்தையும் குழப்பத்தையும் பாதுகாப்பின்மையையும் மிகச் சிறப்பாக சித்தரிக்கும் ஒரு படைப்பு அது. அதன் மொழியாக்கம் பொதுவாக நேர்மறையான எதிர்வினைகளையே ஏற்படுத்தியது. இருப்பினும் நவீன இலக்கிய பரிச்சயம் அற்ற சில நண்பர்கள் கதை என்ன என்பதை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை எனக் குறை சொல்லவும் செய்தனர்.
புரிந்துக் கொள்வது சிரமம் எனும் ஐயத்துடன் நான் மொழிபெயர்க்கத் துணிந்தது v k n அவர்களின் இரண்டு சிறுகதைகள். ஒன்று அம்பி. அதில் பாலக்காட்டு பிராமணர்களின் வட்டாரவழக்கு மொழி என்பதால் உரையாடல்கள் ஏறக்குறைய ஒலிபெயர்ப்பு மட்டும் தான் செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும் இன்னொரு கதையான தோசை தான் வாசித்தவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது என்பதை அறிய வியப்பாக இருந்தது. வழக்கமான vkn கதைகளைப் போன்றே எள்ளல் தொனிக்கும் மெல்லிய நகைச்சுவை இழையோடும் அந்தக் கதை கேரளாவில் நிலவியிருந்த அரசியல் நிலவரத்தை பகடி செய்வதாக இருந்தது. தனித்துவம் மிக்க நடையில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கதை மொழிபெயர்ப்பில் தருமொழிக்கு நிகரான வாசிப்பனுபவம் தருமா எனற அச்சம் எனக்கிருந்தது. அது வரவேற்பைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஏறக்குறைய மூலபபடைப்பின் வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்கும் நிகரான தமிழ் வார்தைகளையும் வாக்கிய அமைப்பையும் தான் மொழியாக்கம் செய்ய பயன்படுத்துகிறேன். இருப்பினும் அவை மொழியாகச் சாயல் இல்லாமல் இருக்கவும் முயல்கிறேன். ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் புத்தக முன்னுரையில் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு வரி இது : ‘உடலாழங்களின் மென்மையினை எட்டாமல் பாழ்நிலங்களில் வெளிப்பட்டு ஒரு வலசைப் பறவை போன்று அவன் திரும்பிவிடுவான்.’ இது மூல மொழியில் இருக்கும் ஒரு வாசகம் தான் எனினும் அதை தனியாக வாசிக்கையில் அசலான தமிழ் எழுத்தைப் போன்ற தோற்றம் தருகிறது. இப்படி இருப்பது தடையற்ற வாசிப்பிற்கு உதவியாக இருக்கும்.
கதைகளுக்கு கவனத்தை ஈர்க்கும்படியான தலைப்புகளை சூட்டுவது தனிக் கலை. உண்ணி ஆர் எழுதிய ஒரு கதையின் தலைப்பு ‘என்டேயாணென்டெயாணீ கொம்பனானகள்.’ தேடிப்பார்த்தபொழுது அது கவிஞர் அக்கித்தம் அவரது ஏழ்மையினைக் குறிப்பிடும் விதமாகச் சொன்ன ‘என்டேயல்லயென்டெயல்லீ கொம்பனானகள்’ என்பதை திரித்து சொல்லப்பட்டிருப்பதாக அறிந்தேன். உண்ணி ஆர் அன்றாட நிகழ்வுகளை சாதாரண சொற்களைக் கொண்டு எளிதாக வாசகனின் மனதைக் கவரும் கதைகள் சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது. பேரார்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சேர்த்து தொடர்ந்து வாசிப்பில் மூழ்கி தன்னுடைய அந்தப் பண்பை கொஞ்சம் பெருமையுடன் எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவன் சூழலின் அழுத்தம் காரணமாக வாசிப்பை விட்டுவிட முடிவு செய்து புத்தகங்களை விற்கத் துணிவதைபற்றிய கதை இது. இந்தக் கதைக்கு ஏதாவது தொடர்புயடைய ஒரு தலைப்பு வைத்தாலே போதும் தான். இருப்பினும் மூலபபடைப்பின் தலைப்பிற்கு நிகரான ஒன்றினை வைக்க வேண்டும் என எண்ணினேன். அதிர்ஷ்டவசமாக இது போன்ற ஒரு திருக்குறள் உண்டே எனத் தேட ‘வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்’ எனும் தலைப்பு கிட்டியது.
கவிதைகளுள் பிடித்தமானவற்றை மொழிபெயர்ப்பது நிறவைத் தருகிறது. கல்பட்டா நாராயணனின் டச் ஸ்கிரீன் மற்றும் அச்சனும் மகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவை கொஞ்சம் நீளமான கவிதைகள். ஆவநாழிக்காக poetry.com இல் இருந்து மொழிபெயர்த்த சில கவிதைகளும் எனக்கு பிடித்தமானவை. மாத்ருபூமி ஆழ்ச்சப்பதிப்பில் வாக்கு வித் குட்டேட்டன் என்று தற்பொழுது அழைக்கப்படும் பள்ளிக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பகுதியிலிருந்த இரண்டு கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்து மொழியாக்கம் செய்தேன். அதில் ஒன்றை வாசிக்கிறேன். உங்களுக்கு பிடிக்கிறதா பாருங்கள்.
உப்பும் இனிப்பும் by சரிதா ஸ்ரவண்
'குழம்பில் உப்பு போதாது
டீயில் இனிப்பும்'
சொல்லி சொல்லி
என் வாய் வலித்தது தான் மிச்சமென அவன்.
அவனுக்குத் தெரியவில்லை
உப்பு சப்பற்ற ஒரு வாழ்க்கை பற்றி.
நீ ஒரு முட்டாள்!
ஒரு சொல்லும் ஒரு புன்சிரிப்பும்
உப்பும் இனிப்புமாக்கி
ஊறுகாயும் தயிர்சாதமும் சாப்பிடத் தெரிந்திருந்தால்
இனிப்பாக இருந்திருக்கும் வாழ்க்கை
உனக்கும் எனக்கும்.
இனி உப்பும் இனிப்பும்
கூடியும் குறைந்தும்
நிலை தடுமாற
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
வாழ்ந்து வாழ்ந்து
மாய்ந்து போவோம் நாம்.
இதில் ஒரு அடிப்படை அன்றாடப் பிரச்சனையும் அதற்கான தீர்வும் கவிஞர்களுக்கே உரியதான ஒரு கற்பனை உலகிலிருந்து சொல்லப்பட்டிருக்கு. ‘ஹிரண்யமேவார்ஜயா நிஷ்ஃபலா கலா’ என்ற பிரபல ஸ்லோகம் சொல்வதைத்தான் இந்தக் கவிதை வாசித்த பிறகு நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியது. இருப்பினும் ஒரு இளம் பெண்ணின் உண்மையான பிரச்சனையை எதிரொலிக்கும் இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
கதை, கவிதை தவிர நான் வாசித்து விரும்பிய சில வாழ்க்கை வரலாறுயகளையும் கூட மொழிபெயர்க்க ஆவலாக உள்ளது. எனினும் அவை அதிக உழைப்பினைக் கோரும் பணி. மேலும் காப்புரிமை பெற்ற படைப்புகளை மொழிமாற்றம் செய்ய உரிமை வாங்கும் அவசியமும் உள்ளது. ஏதாவது பதிப்பகம் பதிப்பிக்க முன்வந்தால் தான் அது போன்ற பெரும் செயல்களை செய்ய முடியும்.
இவ்வளவு நேரம் இதையெல்லாம் ஏன் சொன்னேன் என நீங்கள் நினைக்க காரணம் இருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பு எப்படி உருவாகிறது என்பது குறித்த நேரடி அனுபவப் பகிர்வு தான் இது.
தமிழில் சுயமாக எழுதும் பல படைப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டுவது நெடுநாள் நிகழ்வு. பிரபல படைப்பாளிகளான கு ப ரா, க நா சு, பாவண்ணன், கரிச்சான் குஞ்சு, சிற்பி, புவியரசு எனப் பலர் மொழிபெயர்ப்பை மேற்கொண்டுள்ளனர். நவீன தமிழ் சிறுகதையின் தந்தை எனச் சொல்லக்கூடிய புதுமைப்பித்தனும் சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
சமீபத்தில் பிரபல எழுத்தாளர் பெருந்தேவி, ‘மூச்சே நறுமணமானால்’ எனும் தலைப்பில் அக்கமகாதேவி வசனங்களை கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அந்த நூலின் முன்னுரையில் அந்த மொழிபெயரப்பனுபவம் குறித்து அவர் சொல்லியிருப்பது மொழிபெயர்ப்பு நடப்புகளை அறிந்துக் கொள்ள உதவும். எதிர்பாராமல் அக்கமாதேவியின் வசனங்களின் ஆங்கில மொழிபெயரப்பினை வாசிக்க நேர்ந்த அவர் அதை தமிழில் மொழிபெயர்க்க எண்ணம் கொண்டு அதை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்த வினய சைதன்யா அவர்களை தொடர்பு கொண்டு விளக்கங்களும் ஆலோசனைகளும் பெறுகிறார். முதல் சுற்று மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு கன்னடம் தெரியாத அவர் கன்னடமூலத்தை வாசிக்கக் கேட்டு அந்த ஓசையும் சந்தமும் மொழிபெயர்ப்பில் கொண்டுவர முனைந்ததாகச் சொல்கிறார். இவர் அமெரிக்கப் பலகலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தாலும் பல படைப்பாளிகளின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்து இம்மொழிபெயர்ப்பினை செய்து முடித்ததாக தெரிவிக்கிறார். மொழிபெயர்க்க தேர்வு செய்யும் படைப்பின் தீவிரத்தினை உணர்ந்து அதன் முழு அனுபவமும் வாசகனுக்கு கடத்த வேண்டும் எனும் முனைப்பினைத்தான் இது காட்டுகிறது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் மேலும் கவனம் பெரும் வாய்ப்பு உள்ளது.
நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வு அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது. அருள் செல்வ பேரரசன் அவர்களின் மகாபாரதம் மொழி பெயர்ப்பு நடப்பு சூழலில் மிகுந்த கவனம் பெற்றுவருகிறது. எனினும் இது போன்ற எந்த எதிர்பார்ப்பும் அற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் அவர் இந்தப் பெரும்பணியினை தொடங்கியுள்ளார். மகாபாரதக் கதைகள் தவறுகளுடன் பரப்பப் படுவதைக் கண்டு துணுக்குற்றுதான் சில கதைகளையும் அதனைத் தொடர்ந்து முழு மாகபாரதத்தையும் மொழிபெயர்ப்பு செய்வது எனும் முடிவினை எட்டியதாகச் சொல்கிறார் இவர். பிரபலமான கங்கூலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வலைதளத்தில் இலவசமாக இருப்பதைப் பயனபடுத்தி மொழிபெயர்த்து தனது வலைப்பூவில் இலவசமாக வெளியிடத் தொடங்கியுள்ளார். அது கவனத்தில்கொண்ட வாசகர் ஒருவர் ஒவ்வொரு அத்தியாத்திற்கும் நூறு ரூபாய் ஊக்குவிப்பாகக் கொடுத்து இப்பணியினை விரைந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவிக்கிறார். கடவுள் தன்னை படைத்த நோக்கங்களில் ஒன்று இது எனும் நம்பிக்கை கொண்டு எந்தப் பயனையும் எதிர்பாராமல் செய்த இந்தப் பணி இவருக்கு புகழையும் சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுத் தந்துக் கொண்டிருக்கிறது. இது ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் அச்சு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர இலக்கியம் சார்ந்த நிறுவனங்கள் சில மொழிபெயர்ப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்வது வழக்கம். அண்மையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற கே ஆர் மீரா அவர்களின் ‘ஆரச்சார்’ மலையாள நாவல் மோ.செந்தில்குமார் அவர்களின் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியீடாக வந்து மிகுந்த கவனமும் விருதுகளையும் அடைந்துக் கொண்டிருக்கிறது. இவர் மீராவின் பிற கபர், மிராசாது, யூதாசின் நற்செய்தி போன்ற பிற படைப்புகளையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஜிம் கார்பெட்டின் வேட்டை அனுபவங்கள் காலச்சுவடு வெளியீடாக அகிலா அவர்களின் மொழிபெயர்ப்பில் ‘கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்’ எனும் தலைப்பில் வெளி வந்துள்ளது ஒரு வித்தியாசமான முயற்சி. காட்டின் மீதான ஈர்ப்பும் ஜிம் கார்பெட்டின் எழுத்துக்களை சிறு வயதில் வாசித்து வியந்ததும் இதைச் செய்ய தூண்டுதலாக இருந்ததாகச் சொல்கிறார் அகிலா. ஆங்கில மூலத்தில் இருந்த நீளமான வாக்கிய அமைப்பும், இடப்பெயர்கள் மாற்றம் அடைந்திருப்பதும், வேட்டை மற்றும் கலன்கள் சார்ந்த கலைச்சொற்களை மொழிமாற்றம் செய்வதும் சவால்களாக இருந்ததாக குறிப்பிடுகிறார் இவர்.
புலம்பெயர்தல் வாழ்க்கைமுறையாகி விட்ட இக்காலத்தில் புது நிலத்தையும் அதன் வாழ்வையும் பண்பாட்டையும் எதிரொலிக்கும் இலக்கியங்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த, வாழும் தமிழர்கள் அந்த நிலம் சார்ந்த படைப்புகளை தமிழுக்கு மாற்றி அறிமுகம் செய்கிறார்கள். ஆப்பிரிக்க இலக்கியத்தை தமிழுக்கு மாற்றித்தரும் லதா அருணாச்சலம் மற்றும் ஆவநாழியில் இந்திச் சிறுகதைகளை மொழிபெயர்த்த அனுராதா கிருஷ்ணசாமியும் அண்மையில் கவனம் பெற்றிருக்கின்றனர்.
இவர்களைத் தவிர திருமதி எம் ஏ சுசீலா, திருவாளர்கள் நல்லதம்பி, எம். கோபாலகிருஷ்ணன் என பல பிரபல மொழிபெயர்ப்பாளர்கள் சிறப்பாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு சொல்லப்பட்டிருப்பது முழுமையான பட்டியலோ முக்கியத்துவம் சார்ந்த பட்டியலோ அல்ல. நினைவில் தோன்றிய சில பெயர்களையும் படைப்புகளையும் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளேன்.
மொழிபெயர்ப்பு சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்திய இலக்கியங்கள் சர்வதேச விருதுகளை பெறத் தொடங்கியுள்ளன. பெருமை வாய்ந்த புக்கர் பரிசு ஆங்கிலத்தில் tomb of sand என மொழிபெயர்க்கப்பட்ட இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘ரெட் சமாதி’ எனும் நாவலுக்கு கிடைத்துள்ளது நமக்கெல்லாம் தெரிந்ததே. அதே போல அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் சங்க விருது நவம்பர் பதினொன்றாம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதன் இறுதிச் சுற்றிற்கு எழுதாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம் stories of the true தேர்வாகியுள்ளது. அதன் மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா சிறப்பு விருந்தினராக இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023 ஆண்டிற்கான புக்கர் பரிசிற்கு பெருமாள் முருகன் அவர்களின் பூக்குழி நாவல் ஆங்கிலத்தில் Pyre என மொழிபெயர்க்கப்பட்டு நீண்ட பட்டியலில் இடம் பிடித்தது.அண்மையில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர மொழிபெயர்ப்பு நூல்களுக்கென தனியாக பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. கடந்த கோவை புத்தகத் திருவிழாவில் முதன்முறையாக தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு பரிசு வழங்க ஆரம்பித்துள்ளனர். பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு நிறுவனம் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பதுடன் இந்த ஆண்டிலிருந்து விருதுகளையும் வழங்கி வருகிறது. விஜயா பதிப்பகம் செயல்படுத்தும் ஸ்ரீநிவாசன் நினைவு மொழிபெயர்ப்பு விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆரச்சார் நாவல் மொழிபெயர்த்தமைக்காக பேராசிரியர் செந்தில்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாஞ்சில் நாடன் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் வட்டம் அமைப்பு இந்த ஆண்டிற்கான விருது மகாபாரதம் மொழிபெயர்த்த அருள் செல்வ பேரரசனுக்கு வழங்கி மொழிபெயர்ப்பு இலக்கியத்தை கவுரவித்தது. சாகித்ய அகாதமி உட்பட மேலும் பல்வேறு விருதுகள் மொழிபெயர்ப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
ஆவநாழி,கனலி,தமிழினி,வனம்,நீலி,நடுகல்,வாசகசாலை,தாய்வீடு,கலகம் என பல வலைதள மின்னிதழ்கள், காலச்சுவடு, உயிர்மை, தமிழ்வெளி, மணல் வீடு, கொலுசு என பல அச்சிதழ்களும் வணிகநோக்கற்ற இலக்கியப் பதிப்புகளாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதே போன்ற தமிழின் முன்னணி பத்திப்பாளர்கள் காலச்சுவடு,ஜீரோ டிகிரி,எதிர்,டிஸ்கவரி,வாசகசாலை,தமிழினி தொடங்கி அனைவருமே மொழிபெயர்ப்புகள் வெளியிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே பிரசுரத்திற்கான வாய்ப்புகளும் ஏராளம் உள்ளன.
பிரசுரம் செய்யப்பட்ட புத்தகத்தை சந்தைப்படுத்துவது கொஞ்சம் உழைப்பைக் கோருவதாக இருக்கும். பெரிய பதிப்பகங்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட அமைப்புகளும் பழக்கமான வாசகர்களையும் கொண்டிருப்பது சந்தைப்படுத்துதலை சிறிது எளிதாக்குகிறது. வாசிப்பு மிகவும் அருகி வரும் இந்தக் காலத்தில் பணம் கொடுத்து புத்தகம் வாங்குவது மேலும் குறைவாகவே உள்ளது. வாங்கப்படும் புத்தகங்கள்கூட வாசிக்கப்படுவதற்கான வாய்ப்பு இன்னமும் குறைவு என்கின்றனர் அனுபவம் வாய்ந்தவர்கள். விருதுகள் பெறுவதும் அதற்கான தேர்வுப்பட்டியலில் இடம் பிடிப்பதும் கூட ஒரு படைப்பின் விற்பனைக்கு உதவியாக இருக்கும். பிரபலமான பெரிய எழுத்தாளர்களின் பரிந்துரை ஒரு படைப்பின் மீது கவனம் பதிய காரணமாக அமையும்.
வாசகர் எதிர்வினைதான் ஒரு எழுத்தாளனுக்கு மிகவும் நிறைவளிக்கும் செயல். தற்பொழுது பெரும்பாலும் சமூக ஊடகங்களில்தான் எதிர்வினைகள் பகிரப்படுகின்றன. இதுபோன்ற எகிர்வினைகளை பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் சில தீவிர வாசகர்கள் மட்டும்தான் பதிவுகளை செய்கின்றனர். வாசிப்பனுபவம் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டு சில குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் சில எதிர்வினைகள் நிகழ வாய்ப்புள்ளன. இருப்பினும் இது போன்ற எதிர்வினைகள் குழு மனப்பான்மையினாலும் அதிக புள்ளிகளை பெற வேண்டும் எனும் எண்ணத்தினாலும் எழுதப்படுவதால் அவற்றின் தரமும் நம்பகத்தன்மையும் பெரிய அளவில் கருத்தில்கொள்ள முடிவதில்லை. எழுத்தாளனை நேரில் சந்திக்கும்பொழுதும் சில எதிர்வினைகள், பெரும்பாலும் நேர்மறையானவை, பகிரப்படும். மற்றபடி வாசகர் கருத்துக்களை அறிந்துக்கொள்வது புத்தகம் விற்பதை விடவும் சிரமமானதாக உள்ளது. இது மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு மட்டுமான சிக்கல் அல்ல. எனினும், ‘தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் அளவுக்கு இப்படைப்புகள் மேலானவையா என்ன?’, என்பது போன்ற ஒரு மனப்பான்மை மொழிபெயர்ப்பு இலக்கிய வாசிப்பிற்கு தடையாக அமைய வாய்ப்புண்டு.


பேச்சு பேச்சாக இருக்கோனம் ஸாரே
ReplyDelete😂
Delete