என்னுரை
அரவிந்த் வடசேரி
ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பிற்கான 'என்னுரை'
இது நான் முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு. ஓரிரு ஆண்டுகளுக்கு முன், என் பெயர் தாங்கி இப்படி ஒரு நூல் வெளிவரும் என்று யாராவது ஆரூடம் சொல்லியிருந்தால் நான் நகைத்துக் கடந்திருப்பேன். எனக்குப் பிடித்த கவிதைகளையும் துணுக்குச் செய்திகளையும் மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிமாற்றம் செய்து முகநூலில் பதிந்து கொண்டிருந்தேன். எனினும் அதுவோர் இலக்கியச் செயல்பாடு எனும் எண்ணம் ஏதும் இருந்ததில்லை. நான் வாசித்து மகிழ்ந்தவைகளை நட்புகளுடன் பகிர்ந்து மகிழ்வித்தல் என்பதாகத் தான் எண்ணம் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பின் இலக்கிய சாத்தியங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இப்போது தான் அறிகிறேன்.
இப்பதிப்பின் வெளியீட்டாளர் எழுத்தாளர் சுதேசமித்திரன் தான் சிறுகதைகளை மொழிமாற்றம் செய்து ஆவநாழியில் வெளியிடலாம் எனும் யோசனையை முன்வைத்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட பொழுதும்கூட நான் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவற்றைத் தான் மொழிமாற்றம் செய்து கொடுத்தேன். அந்நேரமும் கூட இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடலாம் எனும் எண்ணமோ ஆசையோ நான் கொண்டதில்லை. ஆனால் மீண்டும் சுதேசமித்திரனின் முழு முயற்சியில் தான் இத்தொகுப்பு வெளியாகிறது. மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் ‘தரு’ விற்கும்.
தங்களது கதைகளின் மொழிமாற்றத்தினை வெளியிட மனமுவந்து அனுமதியளித்த மூல எழுத்தாளர்களுக்கு மனம் கனிந்த நன்றி.
தொகுப்பாக வெளியிடலாம் என்று சொன்ன ஓரிரு நாட்களிலேயே வடிவமைத்து PDF அனுப்பிவைத்த உடனேயே ’வாருங்கள், பிரிண்ட் போட்டு வரலாம்’ என அழைத்துச் சென்றார் பதிப்பாளர் சுதேசமித்திரன். பிரிண்ட் போட்ட கையோடு நாஞ்சில் நாடன் ஐயாவின் இல்லத்திற்குச் சென்று முன்னுரை வேண்டி கொடுத்தோம். ஐயா அவர்களும் ஒரு சிறப்பான முன்னுரையினை எழுதித் தந்துள்ளார். அவருக்கு என் பணிவான நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
ஆவநாழியில் கதைகள் வெளிவந்தபோது ஓவியங்கள் வரைந்து மகிமைப்படுத்திய ஓவியர்கள் திரு.ஜீவா, திரு.ஜோசப், திரு.ரகு ஆகியவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
வாசித்து வாழ்த்தி வழிநடத்திய வாசகர்களுக்கும் நட்புகளுக்கும் சுற்றத்தாருக்கும் என் நன்றி.
அரவிந்த் வடசேரி
கோவைப்புதூர்
06.04.2023

All the best sir
ReplyDeleteThank you
Delete